Site icon Vivasayam | விவசாயம்

நாட்டுக்கோழி தீவனத்திற்குக் கரையான்(Termite) உற்பத்தி செய்தல்

கரையானின் தீமைகள் குறித்து அறிந்த பலருக்கும் கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக்கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகின்றது. கோழிகளுக்கு கரையான் சிறந்த புரதச்சத்து மிக்க உணவாகும். உடல் வளர்ச்சிதை மாற்றத்துக்கு புரதச்சத்து அவசியம் தேவை. கரையான் உற்பத்தி செய்வது செலவே இல்லாத ஒரு    தொழில்நுட்பச் செயலாகும்.

100கி கரையானில் அடங்கியுள்ள சத்துக்கள்;

1.புரதம் – 36%

2.கொழுப்பு – 44.4%

  1. சக்தி (Energy) – 560 கலோரி

இத்துடன் சிலவகை கரையான்களில் வளர்ச்சி ஊக்கி (Growth promoter) என்னும், உடல் வளர்ச்சிக் கூட்டுப் பொருள் உள்ளதால் வளர்ச்சி விகிதம் 15% அதிகமாகின்றது. கரையான் வெப்ப நாடுகளைச் சேர்ந்தப் பூச்சியாகும். இது இரவில் மட்டும் செயலாற்றும் உயிரினமாகும். இவை நார்ப் பொருட்களினை உண்டு வாழும். கரையான்களில் பலவகை உண்டு. ஈரக்கட்டைக் கரையானைத் (Dandy wood termites) தான் நாம் எளிதாக உற்பத்தி செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்;

  1. ஒரு பழைய பானை
  2. கிழிந்த கோணி/சாக்கு
  3. காய்ந்த சாணம்
  4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள், செம்மண், கரையான் புற்றில் இருந்து மண்.
  5. வைக்கோல்.

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை வாய் அகலமான, மண்பானையில் அழுத்தி வைத்து, சிறிது தண்ணீர் தெளித்து வீட்டிற்கு வெளியே, ஒதுக்குப்புறமாக ஒரு இடத்தில் கவிழ்த்து வைக்க வேண்டும். மாலை நேரத்தில், இந்தப் பானையை வைத்து விட்டால், மறுநாள் காலை அதிக அளவில் கரையான் உற்பத்தி ஆகிவிடும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையான்களினையும் தின்றுவிடும்.

ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத்தொழில்நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம்.

குறிப்பு;

1.அடை மழை பெய்யும் போது, கரையான் உற்பத்தி ஆகாது.

2.எறும்புகள் கரையானுக்கு எதிரி என்பதால், எறும்புப் புற்று இருக்கும் இடங்களில் கரையான் உற்பத்தி ஆகாது.

3.பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த சமயத்தில் கரையான் உற்பத்தி ஆகாது.

4.கோழிகள் கரையான்களை உண்டவுடன் தண்ணீர் கொடுக்கக்கூடாது.

நன்மைகள்;

கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களை தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை. பானையில் வைக்கும் நனைந்த பொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்தவை ஆகும். கரையானைப் பிடித்து அழிப்பதற்க்குப் பதில் கோழிக் குஞ்சுக்கு தீவனமாகக் கொடுத்து விடுகிறோம். அடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறாக மரம் மற்றும் வீட்டுப் பொருட்களுக்கு தீங்குயிரியாக விளங்கும் கரையானை சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்புமின்றி கட்டுப்படுத்த கோழிகளுக்கு சுவையான புரதச்சத்து மிகுந்த தீவனமாக பயன்படுத்தலாம். இதனால் தீவனச் செலவுகள் கட்டுப்படும்.

கட்டுரையாளர்: கண்ணன்.கூ, இளநிலை வேளாண்மை நான்காம் ஆண்டு மாணவர், குமரகுரு வேளாண்மை கல்வி நிறுவனம், சக்தி நகர், ஈரோடு.   மின்னஞ்சல்: kannanslm2016@gmail.com

Exit mobile version