Vivasayam | விவசாயம்

அத்தி சாகுபடியில் கலக்கும் பொறியியல் பட்டதாரி

உலக அழகி கிளியோபாட்ராவுக்கு மிகவும் விருப்பமான  பழம் – அத்திப்பழம் என்று நீங்கள் அறிவீரா ?

ஆம் உண்மைதான் கிளியோபாட்ராவுக்கு விருப்பமான பழங்ககளுள் ஒன்று இந்த அத்திப் பழம். உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்திப்பழத்தை அப்படியேவோ அல்லது உலர வைத்தோ சாப்பிடலாம். அத்தி மரம் மிகவும் மருத்துவ குணம் பெற்றது. இதன் இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை போன்ற அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்களை கொண்டது.

  • தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். இதனால் இரத்த ஓட்டம் சீராகும். இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். இதில் உள்ள பொட்டாசியம் சத்தானது  இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகின்றது.
  • இவற்றில் இருக்கும் பொட்டாசியம், மாங்கனீசு, ஆன்டி ஆக்சிடென்ட் ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
  • அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்ற உதவுகின்றது.
  • உலர் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். 3 உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே இதனை நீரிழிவு நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.
  • உலர்ந்த அத்திப்பழம் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது. இதற்கு முக்கிய காரணம், இந்த உலர்ந்த பழத்தில் அதிக நார் சத்தும், குறைந்த கொழுப்பு சத்தும் இருப்பது தான்.
  • தினமும் அத்திப்பழத்தை சாப்பிடுவதால் அது நம்முடைய உடலில் உள்ள எலும்புகளுக்கு நல்ல வலிமையை தருகிறது. ஒரு அத்தி பழத்தில் 3% கால்சியம் உள்ளது.
  • அத்தி பழங்களில் கண்களுக்கு அவசியமான விட்டமின் ஏ , நிக்கோடினிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் அதிகளவு காணப்படுவதால் கண்களின் ஆரோக்கியத்தை இது சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

இயற்கை விவசாயத்தில் இன்றைய இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான மனோஜ்குமார். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து பணிபுரிந்து வந்தார். பின்பு திருப்பூரில் உறவினர் ஒருவரின் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார். இந்த நிலையில் விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் இயற்கை விவசாயியாக மாறியுள்ளார். தற்போது இரண்டு வருடங்களாக  இயற்கை முறையில் அத்தி சாகுபடியில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். மேலும் புதிதாக இயற்கை முறையில் அத்தி சாகுபடி செய்ய விரும்பும் இளைஞர்கள், விவசாயிகளுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகிறார் .

அத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள்  பற்றிய  திரு. கே.மனோஜ்குமார் அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டது :

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் கே.மனோஜ்குமார் பொறியியல் பட்டதாரி கடந்த இரண்டு வருடமாக இயற்கை முறையில் அத்தி சாகுபடி செஞ்சிட்டு இருக்கேன். எங்க பண்ணையில சாகுபடி செய்கிற பழங்களை தான் நாங்களும் சாப்பிடுறோம். அதனால அதற்கு எந்தவித மருந்துகளும் பூச்சிக்கொல்லிகளும் ரசாயன உரங்களும் தெளிப்பது இல்லை. அதற்கு மாற்றாக இயற்கை உரங்களான மக்கிய தொழு உரம், ஆட்டு எரு, மண்புழு உரம், பஞ்சகாவ்யா, மூலிகைப் பூச்சி விரட்டி,  தசகாவ்யா ஆகியவற்றை  பயன்படுத்தி வருகிறோம்.

தற்போது ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அத்தி சாகுபடி செய்து வருகிறேன். வருங்காலங்களில் மேலும் அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்ய உள்ளேன். புனே ரெட், துர்கி பிரவுன்  ஆகிய இரண்டு இரகங்களை சாகுபடி செய்துள்ளேன் .இந்த இரண்டு வகை அத்தி செடிகளும் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நர்சரியில் இருந்து வாங்கினேன். பொதுவாக அனைத்து விதமான மண் வகைகளிலும் அத்தி நன்கு வளரக்கூடியது. தண்ணீர் தேங்க கூடிய நிலங்களில் முறையான வடிகால் வசதி செய்து சாகுபடி செய்தல் அவசியம். நல்ல நீர்ப்பாசன வசதியுடன் சாகுபடி செய்தால் கூடுதலாக மகசூல் பெறலாம். 7 × 7 முதல் 10 × 10 அடி இடைவெளியில் அத்தியை நடவு செய்யலாம்.

பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள்

இயற்கையாகவே அத்தியில் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாக இருக்கு. அதனால பெருசா பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படுவதில்லை. மழைக்காலங்களில் மட்டும் இலைகளில் பூஞ்சாண் தொற்று ஏற்படுகிறது. இதற்கு முன்கூட்டியே பஞ்சகாவ்யா தெளிப்பதன் மூலம் கட்டுபடுத்தப்படுகிறது.

மகசூல் திறன்

ஆண்டுக்கு சராசரியாக எட்டு மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். ஒரு இலைக்கு ஒரு காய் வைக்கும் ஒரு பழம் 30 லிருந்து 60 கிராம் வரைக்கும் இருக்கும். முதல் வருடம் ஒரு செடிக்கு 3 முதல் 6 கிலோ வரையிலும் இரண்டாம் வருடம் 8 முதல் 10 கிலோ வரையிலும் தொடர்ந்து 15 முதல் 25 வருடங்கள் வரை அதிகபட்சமாக 15 முதல் 30 கிலோ வரை மகசூல் எடுக்கலாம்.

நல்ல பராமரிப்பு மற்றும் கவாத்து ( Pruning ) செய்வதன் மூலம் அதிக ஆண்டுகள் மகசூல் பெறலாம். ஒவ்வொரு வருடமும் அறுவடைக் காலங்களுக்கு பிறகு கவாத்து செய்தல் மிகவும் அவசியமாகிறது. கவாத்து செய்த 4 முதல் 5 மாதத்தில் அத்திப்பழம் அறுவடை செய்யலாம்.

பராமரிப்பு வேலைகள் அதிகமாக அத்தில  இருக்கிறது இல்லை களை எடுத்தல் மற்றும் நீர் பாசனம் வேலை மட்டும்தான் இருக்கும். சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்றதால  நீர் பாசனமும் எளிதாக உள்ளது.

இயற்கை முறையில் விளைவிப்பதால் பண்ணையிலேயே வந்து வாங்கி செல்கின்றனர். தற்போது வாடிக்கையாளர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர் அவர்களுக்காக கூடுதலாக கூடுதலான பரப்பளவில் சாகுபடி செய்ய உள்ளேன்.

அத்திப் பழங்களை உலர் அத்திப்பழமாக மதிப்புக்கூட்டு பொருளாக செய்யவும் தயாராகி வருகின்றோம் விரைவில்  விற்பனைக்கு கொண்டு வருவோம்.

அத்தி சாகுபடியில் ஆரம்பத்தில் கொஞ்சம் செலவு அதிகமா இருந்துச்சு. குஜராத்திலிருந்து செடிகள் வாங்கிவந்ததனால போக்குவரத்து செலவுகள் மற்றும் இதர செலவுகளுக்காக கொஞ்சம் கூடுதலாக செலவானுச்சு பொதுவாக அத்தி 20 முதல் 25 வருடங்கள் பலன் அளிக்கக்கூடியது. தொடக்கத்தில் செய்த செலவு கொஞ்சம் அதிகம் தான் இந்த செலவையும் 3 – 4 வருடத்தில் மீட்டு விடலாம்.

தற்போது தமிழகத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட அத்திக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் விவசாயிகளும் இயற்கை முறையில் அத்தி சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ரிஸ்க் குறைவான ஒரு நிலையான வருமானம் வேண்டும் என்கிறவர்கள் தாராளமாக அத்தியை சாகுபடி செய்யலாம். அத்தி சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள், இளைஞர்களுக்கு வழிகாட்ட அல்லது உதவ மிகுந்த ஆர்வமாக உள்ளேன் என்ற நம்பிக்கை மிகுந்த குரலில் கூறிவிட்டு வாடிக்கையாளர்கள் வந்துள்ளார்கள் என்று நம்மிடமிருந்து விடைபெற்றார்.

மேலும் அத்தி பற்றிய கூடுதல் சாகுபடி தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்வதற்கு 9965353505 என்ற தொலைபேசி எண்ணிலும், manojkumarckv@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் திரு. கே.மனோஜ்குமார்  அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

கட்டுரையாளர்: ப. பிரவீன்குமார், முதுநிலை வேளாண் மாணவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை. மின்னஞ்சல்: pkmagriculture@gmail.com

Exit mobile version