Vivasayam | விவசாயம்

நிலக்கடலையைத் தாக்கும் சிவப்பு கம்பளிப்புழு மேலாண்மை

இந்தியாவில் நிலக்கடலையானது மிக முக்கியமான எண்ணெய் வித்து பயிராகும். நிலக்கடலையில், சிவப்பு கம்பளிப்புழுவானது 25 முதல் 90 விழுக்காடு அளவிற்கு சேதம் விளைக்கும் மிகவும் மோசமாக பூச்சியாகும்.

விலங்கியல் பெயர்: அமாஸ்க்டா அல்பிஸ்ட்ரைக்கா (Amsacta albistrica)

பொதுப்பெயர்: சிவப்பு கம்பளிப்புழு மற்றும் ரோமப்புழு

 

தாக்குதலின் அறிகுறிகள்:

  1. முட்டையில் இருந்து வெளியே வந்த இளம் ரோமப்புழு, இலையின் பச்சையத்தை சுரண்டி உண்ணும்.
  2. நன்கு முதிர்ந்த‌ புழுவானது, இலையின் நரம்புப் பகுதியை விட்டு இடைப்பட்ட இலைப்பகுதியை உண்டு சேதப்படுத்தும்.
  3. அதிகமாக தாக்கப்பட்ட செடிகள், மாடு மேய்த்தது போல் நுனிக்குருத்து மற்றும் இலைகள் வெட்டப்பட்டு காணப்படும்.

 

பூச்சியின் அடையாளம்:

முட்டை: இலையின் அடிப்பகுதியில், தாய் அந்து பூச்சி முட்டையை குவியலாக இடும்.

புழு: உடலின் மேற்பரப்பில் நீளமான சிகப்பு கலந்த பழுப்புநிற முடிகளுடன் கூடிய‌ பழுப்பு நிற புழுக்கள் இருக்கும்.

கூட்டுப்புழு:  பழுப்பு நிற, நீள்கோள வடிவில், நீண்ட நாட்களாக உறக்க நிலையில் மண்ணில் இருக்கும். நல்ல மழையை தொடர்ந்து, உறக்க நிலை மீள் பெற்று தாய் அந்து பூச்சிக்கள் வெளியே வரும்.

அந்துப்பூச்சி: முன் இறகானது பழுப்பு கலந்த வெள்ளை நிறத்தில் சிவப்பு நிற முன் புறக்கோடுகளுடன் காணப்படும், பின் இறகானது வெள்ளை நிறத்தில் கருப்பு நிற புள்ளிகளுடன் காணப்படும்.

 

பொருளாதார சேதநிலை:

100 மீட்டர் வரிசை செடிகளில், 8 மூட்டை குவியல்கள்

 

கட்டுப்படுத்தும் முறை:

  • கோடை உழவு செய்வதன் மூலம், ரோமப்புழுவின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
  • விளக்குப் பொறியை (1‍‍-3 வீதம்/ ஹெக்டர்) அமைத்து அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.
  • விளக்குப் பொறி வைத்திருக்கும் பகுதியில் முட்டைக்குவியலையும், இளம் புழுக்களை கைகளால் சேகரித்து அழிக்கலாம்.
  • துவரை மற்றும் தட்டைப்பயிறு ஆகியவற்றை ஊடுப‌யிராக பயிர் செய்து இளம் புழுக்களை கவர்ந்து கட்டுப்படுத்தலாம்.
  • வயலைச் சுற்றிலும் 30 செ.மீ நிளம் மற்றும் 25 செ.மீ அகலம் இருக்கும் அளவிற்கு சிறிய அளவில் குழிகள் அமைத்து, படையெடுத்து வரும் புழுக்களை அழிக்கலாம்.
  • அமாஸ்கடா அல்பிஸ்ட்ரைக்கா நியுக்ளியஸ் வைரஸ் (Aa NPV) (250 LE/ ஹெக்டர்)  கலவையினை ஒட்டும் திரவம் (1மிலி/லி)  கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்

 

பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்

  • மிதைல் டெமெடான் 25 EC- 1 லிட்டர் /ஹெக்டர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • குயினால்பாஸ் 25 EC – 750 மிலி /ஹெக்டர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • குலொரன்ட்ரனலிபுரொல் 18. 5 EC – 150 மிலி /ஹெக்டர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  1. முனைவர் செ. சேகர்,

உதவி பேராசிரியர் (பூச்சியியல் துறை),

ஆர். வி. ஏஸ் வேளாண்மை கல்லூரி, தஞ்சாவூர்

மின்னஞ்சல்: sekar92s@gmail.com

  1. கு. திருவேங்கடம்,

உதவி பேராசிரியர் (பூச்சியியல் துறை),

ஆர். வி. ஏஸ் வேளாண்மை கல்லூரி, தஞ்சாவூர்

மின்னஞ்சல்: thiru.thanks5@gmail.com

Exit mobile version