Vivasayam | விவசாயம்

பலாப்பழத்தில் மதிப்புக் கூட்டுதல் (பகுதி-2)

பலாச்சுளை வறுவல் (சிப்ஸ்)

நன்கு முற்றிய, நன்கு பழுக்காத பலா பழத்தை பயன்படுத்த வேண்டும். பலாச்சுளைகளை எடுத்து அதிலுள்ள கொட்டைகளை அகற்றவும். பலாச்சுளைகளை 0.5 – 0.6 செ.மீ அகல கீற்றுகளாக வெட்டவும். இக்கீற்றுகளை உப்பு சேர்க்கப்பட்ட கொதிக்கும் நீரில் நிறம் வெண்மையாக மாறும் வரை இரண்டு நிமிடங்களுக்கு சூடு படுத்தவும். பின்பு தண்ணீரை வடித்து விட்டு உலர வைக்கவும். கடாயில் எண்ணெயை சூடு படுத்தி இந்த சிப்ஸை வறுக்கவும். பொரிக்கும் போதே 1-2 தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்.

பலாப்பழ மிட்டாய்

ஒரு தட்டில் சர்க்கரையை போட்டு ஒரு கோப்பைத் தண்ணீர் ஊற்றவும். சர்க்கரை முழுவதும் கரைந்த பிறகு பிரவுன் நிற பேஸ்ட் / பசை போல மாறுகிறது. இத்துடன் 250 மி.லி. பலாச்சுளை கூழை சேர்த்து நன்கு கலக்கவும். கொஞ்சம் தேங்காய் எண்ணையை சேர்க்கவும். தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். தட்டுடன் ஒட்டாத நிலை வரும் வரை தொடர்ந்து கிளறவும். மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து கிளறவும். முடிவில் உளரவிடவும்.

பலாப்பழ ஒயின்

நன்கு பழுத்த பலாச்சுளைகளை நறுக்கி எடுத்துக்கொள்ளவும். சுளைகளை சிறுசிறு துண்டுகளாக்கி வாசனை பொருட்களான ஏலக்காய்(2-3), கிராம்பு(1-3), ஸ்டார் அனிஸ் (1) ஆகியவற்றை ஒரு மஸ்லின் துணியில் கட்டி தனியே வைக்கவும். மூடியுடன் கூடிய பாத்திரத்தில் கொதிக்க வைத்த தண்ணீரை ஆற வைத்து எடுத்துக்கொள்ளவும். பலாச்சுளை துண்டுகள், சர்க்கரை, துணியில் கட்டி வைக்கப்பட்ட வாசனை பொருட்கள் ஆகியவற்றை ஆறிய தண்ணீர் பாத்திரத்தில் சேர்க்கவும். நொதித்தலுக்கு வசதியாக ஈஸ்ட்டு சேர்க்கவும். காற்று புகாமல் மூடி வைக்கவும். 20 நாட்களுக்கு அவ்வப்போது கிளறிவிடவும். 20 நாட்களுக்கு பிறகு வடிகட்டி சுத்தமான கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும்.

பலாப்பழலெதர்

நன்கு பழுத்த பலா சுளைகளைத் துண்டுகளாக வெட்டி கொள்ளவும். துண்டுகளை கூழாக்கி பசையாக மாற்றவும். அந்த பசையை சமமான அளவு டிரேயில் பரப்பி வைக்கவும். சூரிய ஒளியில் அல்லது மின்உளர்த்தியில் காயவைக்கவும். டிரேக்களை வெளிச்சத்தில் நேரடியாக உலர வைத்து உலர்ந்த படலங்களாக எடுக்கலாம். மேலும் உலரவிட்டால் உடைந்து விடும் என்ற நிலையில் எடுத்து விடலாம். உலர்ந்த பிறகு பலாப்பழ பிஸ்கட் (ரொட்டி) விரும்பிய அளவில், வடிவில் வெட்டி எடுத்து காற்றுப்புகாத டப்பாக்களில் சேமித்து வைக்க வேண்டும்.

பலாப்பழ கூழை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு கோதுமை மாவையும் (சாக்லேட்) சர்க்கரையையும், ஏலக்காயையும், உப்பையும் சேர்த்து கலக்கவும். இத்துடன் மென்மையான வெண்ணை மற்றும் வெண்ணிலா எக்ஸ்டிராக்ட் சேர்த்து நன்கு கலக்கவும். நன்கு கலந்த பிறகு கிண்ணத்தில் இருந்து எடுத்து மரக்கட்டை போல உருட்டவும். இதனை ஒரு பிளாஸ்டிக் கவரால் மூடி 15 முதல் 20 நிமிடம் வரை பிரிட்ஜ்ல் வைக்கவும். அடுத்து பிரிசரில் இருந்து இந்த மாவினை எடுத்து ½ இன்ச் இடைவெளி விட்டு ஓவனில் வைத்து 325˚F வெப்பநிலையில் 20 நிமிடம் வைத்திருக்கவும் (அல்லது) காப்பி வண்ணம் தெரியும் வரை ஓவனில் வைத்து, பிறகு இந்த பிஸ்கட்டுகளை எடுத்து குக்கி தாளில் வைக்கவும். குளிர செய்து இந்த பிஸ்கட்டுகளை காற்றுபுகாத கண்டைனர்களில் அடைக்கவும்.

பலாப்பழ அல்வா

அடித்தட்டு கனமான, அகலமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர், பலாப்பழக்கூழ் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பிறகு நன்கு சூடு படுத்த வேண்டும். நன்கு கொதிக்கும் போது ஏலக்காய், வறுத்த முந்திரி மற்றும் நெய் சேர்க்கவும். அல்வா பதம் வரும் வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும். டிரே தட்டில் நெய் தடவி இந்த கொதிக்க வைக்கப்பட்ட அல்வாவினை பரப்பி வைக்கவும். ஆறியவுடன் துண்டுகளாக வெட்டிப் பரிமாறலாம்.

முடிவுரை:

பலாபழம் மிகவும் பயன் தரும் ஒரு பழம். நம்நாட்டில் கிடைக்கும் பழங்களில் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இப்பழம் உள்ளது. தென்னிந்தியாவில் எல்லா இடங்களிலும் இது கிடைக்கிறது. பருவகாலங்களில் அதிகளவு கிடைப்பதால் இதனை பயன்படுத்தி மதிப்பு கூட்டுதல் செய்து பொருள் ஈட்டலாம். குறைவான இடங்களிலேயே அதாவது பராமரிக்கப்படாத இடங்கள், வீட்டுத்தோட்டங்கள் போன்ற இடங்களில் இவை காணப்படுகின்றன. ஆனால் இந்த பழமரங்களின் உற்பத்தி வணிக அளவில் அதிகரிப்பதின் மூலம் பலாப்பழத்தில் மதிப்பு கூட்டுதல் தொழிலை செம்மை படுத்த முடியும்.

கட்டுரையாளர்:

முனைவர் தி. உமா மகேஸ்வரி, உதவிப் பேராசிரியர், தோட்டக்கலைத் துறை, வேளாண்புலம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

மின்னஞ்சல்: umahorti2003@gmail.com

Exit mobile version