Vivasayam | விவசாயம்

சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-2)

நீர் பாசனம்:

நீர் இன்றி அமையாது உலகம் போலத்” என்ற நற்றினை வரிகளிலே தமிழன் நீரை எவ்வண்ணம் போற்றினான் என்று அறிய முடிகிறது. நீர்பாசனம் பண்டைய தமிழகத்தில் மிகவும் முக்கியமாக கருதப்பட்டது. குளங்கள், ஏரிகள், அணைகள் மூலம் நீரை சேமித்தனர். நீர்தேக்கங்களில் சேமிக்கப்படும் நீர், பாசன வசதிக்காக கால்வாய்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு கொண்டுவரப்பட்டன. மேலும் அந்த காலத்தில் கிணறு வெட்டி நிலத்தடி நீரை பயன்படுத்தவும் மக்கள் கற்றுக்கொண்டிருந்தனர். மாடுகளையும் எருமைகளையும் வைத்து நீரை இறைத்தனர். அனைத்து மக்களுக்கும் நீர் கிடைப்பதற்கு அதிகாரிகள் பணி செய்வது கடமையாக இருந்தது.

அறையும் பொறையும் மணந்த தலையை

எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்

தெண்ணீர் சிறுகுளம் கீள்வது மாதோ (புறம் 118-1-3)

இந்த புறநானூற்று பாடலில் ஒரு ஏரி எப்படி இருக்க வேண்டும் என்று விவரிக்கப்படுகிறது. ஏரிகள் நீளம் குறைவாகவும், நிறைய நீர் சேமிக்கும் வகையிலும், பிறைவடிவில் இருக்க வேண்டும் என்கிறது.

பயிர்கள்:

பண்டைய தமிழகத்தில் நெல், கரும்பு, சிறுதானியங்கள், பருப்பு வகைகள், தென்னை, அவரை, பருத்தி, வாழை, புளி, சந்தனம் முதலியன பயிரிடப்பட்டுள்ளன. நெல் முக்கியமான பயிராக இருந்துவந்துள்ளது. வீடுகளில் பலா, தென்னை, பாக்கு போன்ற மரங்கள் இருந்தன. வீட்டின் முன் புறம் மஞ்சளும் பின்புறம் பூந்தோட்டமும் வைத்து பராமரித்து வந்தனர். ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு அடைந்து, உபரி உற்பத்தி அதிகமாக இருந்தது. படைவீரர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தானியங்களே ஊதியமாக வழங்கப்பட்டது.

கருவிகளும் உத்திகளும்:

நெற்கழனிகள் காளைகளின் உதவியுடன் உழப்பட்டன. கழனியில் தழைகளை விவசாயிகள் தங்கள் கால்களை வைத்து மிதித்து மூழ்கடித்தனர். நாற்றுகள் வளர்ந்தபின் அவற்றை இடம் மாற்றி நடப்பட்டன. களையெடுப்பதை பற்றி திருக்குறளில் பரவலாக விவரிக்கப்படுகிறது. களையெடுப்பதை ஒரு அரசன் நாட்டை பராமரிப்பதுடன் ஒப்பிடப்படுகிறது. பயிர் சுழற்சி முறை பின்பற்றப்பட்டது. ஒரே பருவத்தில் பருத்தியும் சிறுதானியங்களும் பயிரிடப்பட்டது.

விவசாயத்தின் அடிப்படை கருவியான ஏரைமெலி, நாஞ்சில், கலப்பை என்றும் அழைத்தனர். பயிரிடும் நிலத்தை சமப்படுத்த பரம்பு கருவி பயன்படுத்தப்பட்டது. பள்ளியாடுதல் என்பது களை எடுக்கவும் பயிர்களுக்கு உள்ள நெருக்கத்தை குறைக்கவும் பயன்படுத்தப்பட்டது. கிணறுகளில் இருந்து நீர் எடுக்க கபிலை என்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர். ஏற்றம் என்ற கருவியில் மாடுகளை சட்டத்தில் பூட்டி நீரை இறைத்தனர். பறவைகள் விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க, கவண் மற்றும் கவண்வில்லைக்கொண்டு அவற்றை விரட்டினர். அறுவடை அரிவாள் கொண்டு நடத்தப்பட்டது.

இயற்கை உரங்கள்:

இயற்கை உரங்கள் மட்டுமே சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டது. உழவிற்கு முன்னும் பின்னும் வயல்களில் இயற்கை உரங்கள் பயன்படுத்தினர். கால்நடைகளின் கழிவுகள், பசுந்தாள் உரங்கள் இன்றுவரை பயன்பாட்டில்தான் இருக்கிறது. பசுந்தாள் உரப்பயிரான தக்கைப்பூண்டு, அகத்தி, சணப்பை, பில்லி, அவுரி முதலியன பயன்படுத்தப்பட்டன.

பயிர்பாதுகாப்பு:

செல்லான் கிழவ நிருப்பின் நிலபுலந்து

  இல்லாளின் ஊடி விடும் (குறள் 1039)

கணவன் தன்னிடத்து வந்து தனக்கு வேண்டிய கடைமையைச் செய்யாமல் போனால், மனைவி எப்படி ஊடுவாளோ அதைப்போல நாள்தோறும் நிலத்திற்கு சென்று பயிர்பாதுகாப்பு செய்யாதவனை நிலமும் ஊடும் என்கிறார் வள்ளுவர். பூச்சிகளும் கால்நடைகளும் தாக்காத வண்ணம் பயிரை காத்தல் வேண்டும் என்கிறார்.

பல்பயிர் சாகுபடி:

ஒரே பகுதியில் ஒரே நேரத்தில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்யும் முறை இருந்துள்ளது.

’’கதிர்படு வயலின் உள்ள கடிமழ் பொழிலின் உள்ள

முதிர்பலம் மரத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள

பதிபடு கொடியின் உள்ள படிவளர் குழியின் உள்ள

மதுவளம் மலரில் கொள்ளும்வண்டென மள்ளர் கொள்வார் ‘’

என்ற கம்பராமாயண பாடலில், நெல்லை விளைவிக்கும் அதே நேரத்தில் கோசலநாட்டு உழவர்கள் பல்வேறு பயிர்களை பயிரிட்டனர் என்கிறது.

முடிவுரை:

எந்த ஒரு துறையும் அழிகிறது என்றால் அதாவது அடுத்த தலைமுறைக்கு அது கடத்தப்படாமல் போகிறது என்றால், அதன் பழமையும் வரலாறும் பெருமையும் உணரப்படாமல் போவதே காரணம். வேளாண்மையும் அப்படித்தான். இந்த கட்டுரையில் குறிப்பிட்டவை எல்லாம் வெறும் மேலோட்டமான பார்வைதான். இன்னும் எவ்வளவோ வேளாண் நுணுக்கங்களை நம் இலக்கியங்கள் தாங்கி நிற்கிறது. அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடமை நமக்குத்தான் உள்ளது. அவ்வழியே நாம் விளிம்பில் நிற்கும் இந்த வேளாண்மையை தூக்கிவிட முடியும்.

வரலாறைப் போற்றி  வருங்காலத்தை தீட்டுவோம்!!!

கட்டுரையாளர்: ர.சிவக்குமார், இளமறிவியல் வேளாண்மை இறுதியாண்டு மாணவர்,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மின்னஞ்சல்: aamorsk3210@gmail.com

Exit mobile version