Site icon Vivasayam | விவசாயம்

நவீன உழவு கலப்பை படைப்பாளியுடன் ஒரு உரையாடல்!

“மாட்டை வைத்து உழவு செய்த நம் முன்னோர்களின் தொழில்நுட்பத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தான் இந்த உழவுக் கருவியை உருவாக்கினேன்” .

இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தில் பல நவீன கருவிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில்தான் இந்த உழவு செய்யும் கலப்பையும். இந்த உழவு கலப்பையானது சிறு குறு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். இந்த உழவு கலப்பையின் சிறப்பம்சம் இதை ஒருவர் உட்கார்ந்து கொண்டே உழவு செய்யலாம். ஒரு டிராக்டரின் சிறிய அமைப்பே இந்த உழவு கலப்பை. சிறிய வகை டிராக்டர் என்றும் கூட இதனைக் கூறலாம்.

 

இந்த நவீன உழவு செய்யும் கலப்பையின் சிறப்புகளைப் பற்றி இதை தயாரித்த திரு .ஏ.பி.சசிகுமார் அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டது:

அக்ரி சக்தி மின்  இதழ் வாசகர்கள் எல்லோருக்கும் வணக்கமுங்க என் பேரு ஏ.பி. சசிகுமார் கோவை மாவட்டமுங்க. பொறியியல் பட்டதாரின்னு  சொல்லுவதை  விட வருங்கால இயற்கை விவசாயின்னு சொல்லும் போது இன்னும் பெருமையாக இருக்கு. பொறியியல் படிச்சிட்டு ஐடி துறைல பத்து வருஷமா வேலை செஞ்சுக்கிட்டு  இருந்தேன். என்னதான் ஐடியில் வேலை என்றாலும் விவசாயத்தின் மீது எப்போதுமே ஒரு தீராத காதல் உண்டு. விவசாயிகளுக்கு ஏதாவது உதவனும்னு மனசுக்குள்ள  எப்பவும் தோன்றிக்கொண்டே இருக்கும்.

நம் நாட்டில்  சிறு குறு விவசாயிகள் தான் அதிகமா இருக்காங்க அவங்க எல்லாரும் மாட்டை வைத்துத்தான் உழுதுகிட்டு இருக்காங்க. இதெல்லாம் தான் இந்த நவீன ஏர்கலப்பை உருவாக அடிப்படை காரணமா இருந்துச்சு. இந்த  உழவு கலப்பையை தயாரிக்க ஒரு வருடம் ஆச்சு. மேலும் இந்த கலப்பையில் ஐந்து கொழுக்கள் உள்ளன. இந்த கலப்பையின் மொத்த எடை 130 கிலோ ஆகும். நமக்கு வேண்டிய அளவுக்கு ஆழமாகவோ அல்லது மேலாகவோ உழவு செய்வதற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

ஒரு ஏக்கர் நிலத்தை சாதாரணமா  ஏர் கலப்பை கொண்டு உழுவதற்கு 5 – 6 மணி நேரம் ஆகுது. ஆனா இந்த கலப்பையைக் கொண்டு ஒன்று முதல் ஒன்றரை மணி நேரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை உழுது விடலாம். சீக்கிரமா உழுதுடறாரதால மாடுகளுக்கும் களைப்பு ஏற்படுவதில்லை. உழவுக்கு மட்டுமல்லாமல் பார் அமைக்கவும் இதை பயன்படுத்தலாம். நமக்கு தேவையான அகலத்துக்கு ஏற்ப 2-3 அடி அகல மஞ்சள், வெங்காய பார்களை அமைக்கலாம். நமக்கு தகுந்தபடி ஆழங்களை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

அதுமட்டுமில்லாம 500 கிலோ எடை வரைக்கும் தாங்க வல்ல சிறிய இழுவை வண்டியும் (Trailer) தயாரித்திருக்கோம். இதுல உர மூட்டைகள்,  அல்லது தேங்காய்கள் கொண்டு செல்ல பயன்படுத்தலாம். சேற்று உழவுக்காக பயன்படுத்தப்படும் கருவி தயாரித்துக் கொண்டு இருக்கோம் சீக்கிரமா அதையும் விவசாயிகளின்  பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம். இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு விவசாயத்தில் பெரியதாக ஆர்வமில்லை. இளைஞர்கள் விவசாயத்தை சுமையாக நினைக்கக் கூடாது.   இளைஞர்கள் அனைவரும் விவசாயம் செய்ய முன்வர வேண்டும். அதுவும் இயற்கை விவசாயம் செய்தால் இன்னும் மிகச் சிறப்பாக இருக்கும்.

ஒரு விவசாயிக்கு மாடுதான் மிகப்பெரிய சொத்து. ஒவ்வொரு மண்ணுக்கும் ஏற்றவாறு நாட்டு மாடுகள் தமிழ்நாட்டில் இருக்குது. அந்த வகையான மாடுகள் எல்லாம் இப்போ சுத்தமா அழிந்து போயிடுச்சு, மீதியிருக்க நாட்டுமாடுகளையாவது இன்றைய இளைஞர்கள் காப்பாற்றி மீட்டுக் கொண்டு வர வேண்டும். என்னோட நண்பர் சண்முகம் மாதம்பட்டியில் கொங்கு பட்டீஸ்வரர் கோவணம் அமைத்து  நாட்டு மாடுகளைப் பராமரித்து வருகிறார். இந்த பண்ணையில தான் நாங்க இயற்கை விவசாயம் சார்ந்த பயிற்சிகளை நடத்தி வருகின்றோம்.மேலும் கடந்த ஒரு வருடமாக இந்த உழவு கருவிகளை விவசாயிகளுக்கு செய்து கொடுத்து வருகின்றோம்.

நம் முன்னோர்கள் எல்லாரும் மாட்டை வைத்துத்தான் விவசாயம் செஞ்சாங்க எந்த பூச்சிக்கொல்லியும் பயன்படுத்தவில்லை.  ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியில்லை ரொம்பவே மாறிடுச்சு.      இன்றைய இளைஞர்கள் நாட்டு மாடுகளை மீட்டெடுத்து இயற்கை வழி விவசாயத்தை பின்பற்றி தற்சார்பு வாழ்க்கை முறைக்கு மாறவேண்டும்னு இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.

விவசாயிகள் யாருக்கேனும் தேவைப்படின் 9916651433 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கட்டுரையாளர்: ப. பிரவீன்குமார், முதுநிலை வேளாண் மாணவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை. மின்னஞ்சல்: pkmagriculture@gmail.com

Exit mobile version