Site icon Vivasayam | விவசாயம்

கிசான் அழைப்பு மையம் – விவசாயிகளின் குறைதீர்க்கும் தொலைபேசி சேவை மையம் (பகுதி-1)

நமது நாட்டில் தனியார் துறையில் ஆகட்டும் அரசுத்துறையில் ஆகட்டும் தொலைபேசி வழித் தகவல் பரிமாற்றம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் பொது தொலைபேசி வசதிகளைக் கொண்டுள்ளன. ஆகவே இத்தகவல் தொடர்பு முறையை வேளாண் தொழில் நுட்பத்திற்கு பயன்படுத்தி விவசாயிகளுக்கு செய்திகளை வழங்க முடிவு செய்யப்பட்டு தற்போது நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டுள்ளது. இச்சேவை நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு 1800-180-1551 என்ற இலவச அழைப்பு எண்ணின் மூலம் வழங்கப்படுகிறது. இது முதன்முதலில் 21.01.2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, அதே ஆண்டு ஜூன் 10 ஆம் தேதியிலிருந்து இந்த சேவை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. ஞாயிறு மற்றும் முக்கிய அரசாங்க விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் ஒலிப்பதிவு செய்யும் கருவி மூலம் வேளாண் பெருமக்களின் சந்தேகங்கள் பதிவு செய்யப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன.

கொள்கைகள்
• இந்தியாவில் வேளாண் துறையில் மேம்படுத்தப்பட வேண்டிய சவால்கள் எண்ணிலடங்காதவை. பெருகிவரும் மக்கள்தொகைக்கு உணவு அளித்திட நமது வேளாண்மை முன்பை விட மிக அதிகமாக வளர்ச்சி பெற வேண்டும்.
• ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து விவசாயிகளுக்கு கண்டுபிடிப்புகளை எளிதில் கொண்டு செல்லவும், விவசாயிகளின் பிரச்சினைகளைக் கண்டறிந்து அதற்கு தீர்வு சொல்லவும் ஒரு தகவல் தொடர்பு அவசியமானதாக இருந்தது. அதற்காக மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள், தனியார் உதவி மையங்கள் அனைத்தும் பல்வேறு வழிகளில் விவசாயிகளுக்கு சேவைகளை வழங்கி வந்தன. புதிய உத்திகளை கையாண்டு சேவை வழங்கும் நோக்கில் இந்திய அரசின் வேளாண் துறை மற்றும் கூட்டுறவு வேளாண் அமைச்சகம் விவசாயிகளுக்கான ‘குறைதீர்க்கும் தொலைபேசி சேவை மையத்தை’ தோற்றுவித்தது. இதில் பல மொழிகளில் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் பதில் அளிக்கப்படுகிறது.
திட்டங்கள்
1. இந்திய வேளாண்மை நம் நாடு மக்களின் உணவுத்தேவையை தொடர்ந்து பூர்த்தி செய்யும் கடமையை எதிர்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பல ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் விட அதை விவசாயிகளிடையே எடுத்துச் செல்வதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. உண்மையான மாற்றமானது ஒரு விவசாயிக்கும் மற்றொரு விவசாயிக்கும், ஒரு கிராமத்திற்கும் மற்றொரு கிராமத்திற்கும் அதேபோல் பல பகுதிகளுக்கு இடையேயும் செய்திகளை பரப்புவதில் தான் இருக்கிறது. அது தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் மூலமே சாத்தியம்.
2. மனிதவள மேம்பாட்டு விரிவாக்கப் பணியில் முக்கிய பிரச்சினை விவசாயிகளிடம் கருத்து கேட்பது தான். எனினும் தொலைபேசி வழித் தகவல் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு தேவையான தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன.
3. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் விவசாயிகளுக்கு தேவையான தகவல்களை இலவசமாக உடனுக்குடன் அவர்கள் விரும்பிய வண்ணம் அளிப்பதே ஆகும்.
4. இத்திட்டம் அதன் நிறை குறைகளை ஆராய்ந்து சரி செய்து கொள்ளும் அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் பல்வேறு அடிப்படைக் கூறுகள் அமைந்துள்ளன.
5. இச்சேவை நாடுமுழுவதும் 1551 என்று நான்கு இலக்க பொது தொலைபேசி எண்ணின் மூலம் வழங்கப்படுகின்றது.
6. விவசாயிகள் நாட்டின் எந்த மூலை முடுக்கில் இருந்தும் அழைக்கலாம். இவ்வாறு விவசாயிகள் சந்தேகம் கேட்கும் பொழுது சேவை மையத்தில் உள்ள வேளாண் பட்டதாரிகள் அந்தந்த ஊர்களின் சொந்த மொழியிலேயே பதிலளிப்பார்கள்.
7. இச்சேவை ஏலத்தில் விடப்பட்டு முறையாகப் பின்பற்றுவோரிடம் அளிக்கப்படுகிறது. இந்த சேவைக்கென 13 தொலைபேசி நிலையங்கள் நிறுவப்பட்டு அதில் பல்வேறு மொழிப் புலமை பெற்ற வேளாண் பட்டதாரிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதன் இரண்டாம் கட்டமாக பதிலளிக்க பல வல்லுநர்கள் வேளாண் கல்லூரிகளிலும் தோட்டக்கலைத் துறையில் இருந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

-தொடரும்…
கட்டுரையாளர்: க.மனோ பாரதி, முதுகலை மாணவர்(வேளாண் விரிவாக்கம்), செர்-இ-காஷ்மீர் வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஸ்ரீநகர், காஷ்மீர்-193201.
மின்னஞ்சல்: mano96bharathi (at) gmail.com
தொலைபேசி எண்: 6005454746, 7708787388

Exit mobile version