Site icon Vivasayam | விவசாயம்

இந்தியாவிற்குள் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள்

palaivana vettukkili

 

தற்பொழுது உலக வேளாண்மைக்கு பெரிய சவால் விட்டுக்கொண்டிருப்பது  வெட்டுக்கிளிகள் இனத்தை சார்ந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ஆகும்.  சிஸ்டோசிரா கிரிகேரியா என்ற அறிவியல் பெயர் கொண்ட இப்பூச்சி ஆர்த்தோப்டிரா வரிசையையும் சிலிபெரா துணை வரிசையையும் சார்ந்தது. எத்தியோப்பியா, சோமாலியா, ஈரான், தென் ஆப்ரிக்கா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் போன்ற பல நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்த வெட்டுக்கிளிகள் தற்பொழுது இந்தியாவிலும் நுழைந்து ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் 6,70,000 ஹெக்டேர் நிலப்பரப்பினை இப்பூச்சிகள் தாக்கியுள்ளன. இதனால் அம்மாநிலத்திற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பூச்சிகள் பூமியில் உள்ள தாவரங்கள் அனைத்தையும் உண்ணக்கூடியது, குறிப்பாக இந்தப் பயிரை மட்டும் தான் தாக்கும் என்று கூற முடியாது. எனவே இதனை பல தாவரங்களை உண்ணும் பூச்சிகள் (polyphagus pest) என்று கூறுகின்றனர்.

பலவகையன வெட்டுக்கிளிகள் உள்ளன. இதில் பாலைவன வெட்டுக்கிளிகளே அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒரு பாலைவன வெட்டுக்கிளி ஒரு நாளில் தன் உடல் எடையின் அளவு தாவரங்களை உண்ணக்கூடியது. ஒரு வெட்டுக்கிளி கூட்டம் ஒரு நாளில் 35,000 மனிதர்கள் உணவு உட்கொள்ளும் அளவு தாவரங்களை உட்கொள்கின்றது. உலகில் உள்ள 20% தாவரங்களையும், பொருளாதார ரீதியிலான ஏழை நாடுகளில் 65 சதவிகிதமும், 10ல் ஒரு பங்கு மக்களின் வாழ்வாதாரத்தையும் இது அழிக்க வல்லது என்று சர்வதேச உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பாலைவன வெட்டுக்கிளிகள்தான் உலகில் உள்ள பழமையான புலம்பெயரும் பூச்சியினமாகும். மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையில் உள்ள பாலைவனங்களில் காணப்படும் இந்த பூச்சிகள் வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் வடஇந்தியாவை நோக்கி வரும். ஆனால் இந்த வருடம் மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே இந்தியாவிற்கு அதிகம் வந்துவிட்டது. இந்த வருடம் முழு இந்தியாவையும் இப்பூச்சி தாக்கும் என்று உணவு மற்றும் வேளாண் அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

இப்பூச்சியின் தாக்கம் இந்தியாவிற்கு ஒன்றும் புதிது இல்லை. இதற்கு முன்னர் பல முறை இந்தியப் பயிர்களை இந்த பூச்சி இனங்கள் தாக்கியுள்ளது. ஆனால் இந்த வருடம் வழக்கத்தைவிட மூன்று மாதங்களுக்கு முன்னரே வந்துவிட்டது. உலகமே கொரோனா வைரஸ் பிடியில் தவித்து கொண்டிருக்கும் நேரத்தில் உணவு உற்பத்திக்கு பெரும் சவாலாக இந்த பூச்சியும் கிளம்பியுள்ளது. வாழ காலநிலையும் உணவுகளும் சாதகமாக இல்லாத காலங்களில், ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக வாழும் (solitary) இப்பூச்சிகள், பொழுது சாய்ந்த 15 நிமிடங்கள் முதல் இரவு நேரங்களில் 22° செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் சமயத்தில் மெதுவாக ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு இப்பூச்சிகள் நகர்கின்றன. சிறிய மழை பெய்தாலும் இதன் பூச்சிகள் முட்டை வைக்க தொடங்கிவிடும். முட்டைகள் பொரித்து பூச்சிகளாக மாறிய பின் பெரிய கூட்டமாக சேர்கின்றன. இதில் மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலைக்கு பெயர் தீவிர பரவல் (outbreak). இது அருகில் உள்ள இடங்களில் மட்டும் பரவும். இரண்டாம் நிலைக்கு பெயர் எழுச்சி (upsurge). இந்த நிலையில் பூச்சிகள் புலம் பெயர்ந்து செல்ல ஆரம்பிக்கும். மூன்றாவது நிலைக்கு பெயர் தொற்று (plague). இந்த நிலையில்தான் இப்பூச்சிகள் கூட்டமாக மற்ற இடங்களுக்கு புலம்பெயர்கின்றன.

ஒரு பாலைவன வெட்டுக்கிளி கூட்டத்தில் சுமார் 10 மில்லியன் பூச்சிகள் கூடி வாழும் (gregarious), இதுவே அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. ஈரப்பாங்கான மணல் கொண்ட பாலைவனங்களில் 16 முதல் 20° செல்சியஸ் வெப்பநிலை உள்ள காலங்களில் 10 முதல் 15 செண்டிமீட்டர் ஆழத்தில் சிறிய அளவு மழை வந்த பின்னர் முட்டைகள் வைக்கக்கூடியது. மூன்று மாதங்களில் தன் இனத்தை 20 மடங்கு இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. இதற்கான கால நிலைகள் சரியாக இல்லாத நிலையில் இதன் முட்டைகள் உரக்க நிலைக்கு செல்கின்றன. பின்னர் சிறிய மழை பெய்தாலும் அந்த முட்டைகள் பொரித்து விடுகின்றன. இதன் முட்டைகள் எக் பாட்ஸ்  என்றழைக்கப்படுகின்றன. இதில் 60 முதல் 80 முட்டைகள் வரை இருக்கும். ஒரு வெட்டுக்கிளி தனது வாழ்நாளில் 10 நாட்கள் இடைவெளியில் 2 முதல் 3 எக் பாட்ஸ் வரை இடுகின்றன. பகல் நேரங்களில் சூரிய உதயமாகி 2 மணி நேரத்திற்கு பின் வெப்பநிலை 23° முதல் 26° செல்சியஸ் இருக்கும்பொழுது இதன் படையெடுப்பு தொடங்குகின்றது. ஒரு விநாடிக்கு 3 முதல் 4 மீட்டர் வரை பறக்க வல்லது. ஒரு நாளுக்கு 150 கிலோ மீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு 50 மில்லியன் வெட்டுக்கிளிகள் இனத்தொகைகளாக உள்ளன. இதனை swarm settling என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர்.

முன்னறிவிப்புகள்

உணவு மற்றும் வேளாண் அமைப்பு இந்த பாலைவன வெட்டுக்கிளிகளை பாலைவன வெட்டுக்கிளிகள் குறித்த தகவல் சேவை என்ற திட்டத்தின் மூலம் கண்காணித்து அதன் தகவல்களை பரிமாறி வருகின்றன. இந்தியாவை பொருத்தவரை ஃபாரிதாபத்தில் உள்ள தாவர பாதுகாப்பு தனிமைப்படுத்தலின் இயக்குநரகம் பாலைவன வெட்டுக்கிளிகளை கண்காணித்து அதனைப் பற்றிய எச்சரிக்கைகளையும் முன்னறிவிப்புகளையும் விவசாயிகளுக்கு கொடுத்து வருகின்றன. பல்வேறு ஜி.பி.எஸ் தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கட்டுப்படுத்தும் முறைகள்

இந்தியாவைப் பொருத்த வரை காலை 4 முதல் 6 மணி வரை இந்த பூச்சிகள் கூட்டமாக ஓய்வெடுத்து வருவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் குளோர்பைரிபாஸ், மாலாத்தியான், பிப்ரோனில், லேம்டா சைக்லோதிரின் போன்ற பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
பயிரிடப்படாத தரிசு நிலங்களில் இதன் கூட்டங்கள் இருந்தால் நெருப்பு உருவாக்கும் கருவி (bonfire) மூலம் இப்பூச்சிகளை கூட்டமாக அழித்து வருகின்றனர். மேலும் சத்தங்களை எழுப்பியும் விவசாயிகளின் இப்பூச்சிகளை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இந்திய விவசாயிகள் இந்த பூச்சியை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்திய வேளாண் நிலங்களை இப்பூச்சிகளிடமிருந்து காப்பற்ற முடியும்.

  1. வே. நவீன், முதுநிலை வேளாண் மாணவர், பூச்சியியல் துறை, ஜவஹர்லால் நேரு கிருஷி விஸ்வத்யாலயா, ஜபல்பூர், மத்தியப் பிரதேசம். மின்னஞ்சல்: naveen19.king(at) gmail.com
  2. 2. எ. செந்தமிழ், முதுநிலை வேளாண் மாணவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: elasisenthamil(at)gmail.com
Exit mobile version