Site icon Vivasayam | விவசாயம்

நெற்பழ நோய்  விவசாயிகளுக்கு வரமா? சாபமா?

உலகளவில் நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 2018-19 பயிர் ஆண்டில் 116.42 மில்லியன் டன்னாக இருந்த நெல் உற்பத்தி 1.05 மில்லியன் டன் அதிகரித்து 2019-20 பயிர் ஆண்டில் 117.47 மில்லியன் டன்னாக உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை காவிரி டெல்டா பகுதிகளில் நெல் அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது. நெல்பயிரை பொறுத்தவரை இலைப்புள்ளி நோய், குலை நோய், இலை உறை அழுகல் நோய், பாக்டீரிய வாடல் நோய் போன்ற நோய்கள் முதன்மையாக ஏற்படுகின்றன. இவற்றுள் விவசாயிகள் இத்தனை நாட்களாக கவனிக்கத் தவறிய நெற்பழ நோயும் சமீப காலங்களில் பாதிப்பால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்நோயானது உஸ்டிலோஜினோடியா வைரன்ஸ் என்ற விதை மற்றும் காற்று மூலம் பரவும் பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது.

நம் விவசாயிகளைப் பொறுத்தவரை இந்நோயை ஒரு அதிர்ஷ்டமாகவே பார்க்கின்றனர். இதற்கு காரணம் இந்நோய் ஏற்படின் மகசூல் அதிகரிக்கும் என்ற ஒரு நம்பிக்கையே ஆகும். இந்த நோயை ஏற்படுத்தும் பூஞ்சை வளர்வதற்கு (25-35° C வெப்பநிலை & 90 சதவீத ஈரப்பதம்) தேவையான சீதோஷ்ண நிலையும் நெற்பயிர்(25-40° வெப்பநிலை & 80-90 சதவீத ஈரப்பதம்) வளர்வதற்கு தேவையான சீதோஷ்ண நிலையும் ஏறக்குறைய ஒன்றுதான். எனவே இந்த நோய் ஏற்பட்டால் நெற்பயிருக்கு சாதகமான சீதோஷ்ண நிலை உள்ளதால் மகசூல் அதிகரிக்கும் என விவசாயப் பெருமக்கள் நம்பி வந்தனர். இதனால் இந்நோய் லட்சுமி (செல்வம்) நோய் என்று பரவலாகப் பலராலும் அழைக்கப்பட்டது.

இந்தியாவில் கடந்த 25 வருடங்களாக சிறிய அளவில் ஏற்பட்டு வந்த இந்த நோயின் தாக்கம் சில ஆண்டுகளாக இந்தியாவின் பல பகுதிகளில் முக்கிய நோயாக மாறி நெல் சாகுபடியை பதம் பார்த்துவிட்டது.  கடந்த பயிரிடும் பருவத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைந்த நெற்கதிர்கள் எல்லாம் “நெல் பழமாக” மாறிவிட்டன. உலகளவில் 25% மகசூல் இழப்பு ஏற்படுத்துவதாகவும், இந்தியாவில் 7% முதல் 75% வரை மகசூல் இழப்பு ஏற்படுத்துவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இது விதையின் முளைப்பு திறனையும் 35% வரை பாதிக்கின்றது. இப்பூஞ்சாணத்தால் உற்பத்தி செய்யப்படும் உஸ்டிலோடாக்சின் என்ற நச்சுப்பொருள் கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

நோய்க்கான அறிகுறிகள்:

இந்த நோயானது நெல் பயிரை பூக்கும் தருணங்களில் தாக்குகிறது ஆனால் நோய்க்கான அறிகுறிகள் கதிர் வந்த பிறகே தெரிகிறது. எனவே இது பெருமளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. நெர்கதிர்களில் உள்ள நெல்மணிகளில் ஆங்காங்கே ஓரிரு நெல்மணிகள் மஞ்சள் நிறத்தில் 1 செண்டிமீட்டர் சுற்றளவுடன் மரு போன்று அளவில் பெரிதான  தோற்றத்தில் காணப்படும். இவை முற்றிய பிறகு பச்சை கலந்த கருப்பு நிறத்தில் மாறுகிறது. இந்த பெரிய மரு போன்ற அமைப்பு முழுவதும்  பூஞ்சாண வித்துக்களால் நிரம்பி இருக்கும். அவ்வித்துக்கள் மெல்லிய படலம் மூலம் மூடப்பட்டிருக்கும். நெற்கதிர்கள் முதிர்ச்சியடையும் தருவாயில் இந்த படலம் உடைந்து பூஞ்சாண வித்துக்கள் அனைத்து இடங்களுக்கும் பரவுகிறது. எனவே விளைச்சலின் அளவும், நெற்கதிர்களின் தரமும் பாதிக்கப்படுகிறது.

பூக்கும் தருணத்தில் மேக மூட்டம், தொடர் மழை, காற்றில் ஈரப்பதம் 90% மேல் இருத்தல், பகல் நேரத்தில் 25° செல்சியஸ் முதல் 35° செல்சியஸ் வெப்பநிலை இருத்தல் ஆகியவை இந்நோய் பரவுவதற்கு உறுதுணையாக உள்ளதால் இந்நோய் பின்பட்ட சம்பா, தாளடி காலங்களில் நடப்படும் பயிரில் இந்நோய் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.

மேலாண்மை முறைகள்:

  • நிலத்தில் தொடர்ந்து நெற்பயிரை மட்டும் பயிரிடாமல் பயிர் சுழற்சி முறையினைப் பின்பற்றவேண்டும்.
  • காற்றில் உள்ள ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்தப் பூஞ்சையின் தாக்குதலைக் குறைக்க முடியும். எனவே தொடர்ச்சியாக வயல்களில் தண்ணீர் தேக்குவதைத் தவிர்த்து காய்ச்சலும் பாச்சலும் முறையைப் பின்பற்ற வேண்டும்.
  • பயிருக்கு அளவுக்கு அதிகமான தழைச்சத்து உரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எப்பொழுதும் தழைச்சத்து உரங்களை 2/3 பாகங்களாக பிரித்து பயிருக்கு கொடுக்க வேண்டும்.
  • சூடோமோனாஸ் ஃபுலோரசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகிய உயிர்பூஞ்சானகொல்லிகளால் ஒரு கிலோ விதைக்கு முறையே 10 கிராம், 4கிராம் என்ற விதத்தில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். கார்பண்டசிம் என்ற பூஞ்சான கொல்லியையும் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற விதத்தில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.
  • புரோப்பிகோனசோல் என்ற செடிகளில் ஊடுருவி சென்று பயனளிக்கும் பூஞ்சான கொல்லியை ஒரு ஹெக்டேருக்கு 500 மில்லி என்ற அளவிலும் டிரைப்ளாக்சிஸ்டுரோபின் உடன் டெபுகோனசோல் என்ற இரு பூஞ்சான கொல்லிகளையும் ஒரு ஹெக்டேருக்கு 200 மில்லி என்ற அளவில் கலந்து நெற்பயிர் குலைவிடும் சமயத்தில் தெளிப்பதின் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்.

கட்டுரையாளர்கள்: 1. கா. சரண்ராஜ், முதுநிலை வேளாண் மாணவர், விஸ்வபாரதி பல்கலைக்கழகம்.

  1. எ. செந்தமிழ், முதுநிலை வேளாண் மாணவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
Exit mobile version