Site icon Vivasayam | விவசாயம்

குறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி

விவசாயிகள் குறைவில்லா வருமானம் பெற ஒரு முக்கிய பயிர், அதனுடன் ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் சாகுபடி என அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தால் அதிக லாபம் பெற முடியும்.  தற்பொழுது மானாவாரி நிலங்களில் விவசாயிகள் கீழ்க்கண்ட முறைகளை கடைபிடிக்கிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நிலக்கடலையில் நான்கு வரிசைக்கு ஒரு வரிசை ஆமணக்கு பயிர் செய்கிறர்கள். இதனால் நிலக்கடலையில் வரக்கூடிய அனைத்து பூச்சிகளும் முதலில் ஆமணக்கு பயிரைத் தாக்குகிறது. அதனால் நிலக்கடலை பயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. நமக்கு ஆமணக்கில் இருந்து ஒரு லாபம் அதே சமயத்தில் ஆமணக்கு பயிரில் இருந்து  மற்றொரு லாபம் கிடைக்கிறது. இந்த ஊடுபயிர் சாகுபடி மூலம் நிலத்திற்கு தேவையான அங்ககச் சத்துக்கள் எல்லாம் நன்கு கிடைக்கிறது.

முதன்மை பயிருக்கு அருகில் பயிறு வகைகளான தட்டைப் பயிறு, உளுந்து, காராமணி, பாசிப் பயிறு, மொச்சை, அவரை போன்றவற்றை வளர்ப்பதால் அவற்றின் மூலம் நமக்கு மகசூலும், அறுவடைக்கு பின்பு அதன் கழிவுகள் மண்ணிற்கும் உரமாகிறது. எடுத்துக்காட்டாக பருத்தியில் ஊடுபயிராக என்ன என்ன பயிர் போடலாம் என்றால் கண்டிப்பாக பயறு வகையான உளுந்து /பாசிப்பயறு தட்டைப்பயறு, வெண்டை கொத்தவரங்காய், அவரை போன்ற 80 முதல் 85 நாட்கள் வயது உடைய பயிரை பயிரிடலாம். வரப்பு பயிராக பருத்தி வயலைச் சுற்றி சூரியகாந்தி பயிர் செய்யலாம் . இந்த சூரியகாந்தி பயிர் பருத்திக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும். அதே சமயம் சூரியகாந்தி வயலைச் சுற்றி சோளம், கம்பு போன்றவற்றை வரப்புப் பயிராகவும் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். தென்னையில் ஊடுபயிராக இஞ்சி, வாழை, கோக்கோ, முருங்கை, பயறு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை சாகுபடி செய்து அதன் மூலம் நாம் அதிக லாபம் பெறலாம்.

தென்னைகேற்ற ஊடுபயிர்

பொள்ளாச்சி விவசாயிகள் தென்னை மரத்தில் மிளகு கொடிகளை ஏற்றி விடுகிறார்கள். இதன் மூலம் தென்னையில் வரும் வருமானத்தை விட மிளகில் அதிக லாபத்தை பெற்று விடுகிறார்கள்.  தென்னையில் புத்திசாலித்தனமாக லாபம் தரும் மிளகினை ஊடுபயிர் செய்வதால் நல்ல லாபம் பெற்று வருகின்றனர். தென்னையில் வாழை ஊடுபயிர் சாகுபடிக்கு ஆடிப்பட்டம் மிகச்சிறந்ததாகும். தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால், தற்போது நடவு செய்யும் பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பொதுவாக தென்னையில் ஏதோ ஒரு ஊடுபயிர் இருக்க வேண்டும். அது தென்னை வளர்ந்து மகசூல் கொடுக்கும் வரை உதவியாக இருக்கும். இலைவாழை, மஞ்சள், இஞ்சி, ஏலக்காய், ஜாதிக்காய், கருணைக்கிழங்கு, அண்ணாச்சி, பாக்கு மற்றும் கறிப்பலா போன்றவை தென்னையின் சிறந்த ஊடுபயிர்களாகும். இலைவாழை பயிரிடும் போது தோப்புகளுக்கு இயற்கையாகவே குளிர்ந்த சூழ்நிலை கிடைக்கிறது.

இலைவாழைக்கு, பூவன், கற்பூரவள்ளி, மொந்தன் வாழை ரகங்கள் சிறந்ததாகும். திசு வாழை அல்லது கிழங்கு மூலம் நடவு பயிரிடலாம். ஒரு ஏக்கர் தோப்பில், 4.5 அடிக்கு, 4.5 அடி இடைவெளியில் 2150 வாழைக்கன்றுகள் வரை நடவு செய்யலாம். தார்வாழையை விட, இலைவாழை சாகுபடி எளிதாகும். இவற்றில் மரத்துக்கு முட்டுக்கொடுக்கும் வேலை மற்றும் திருட்டு பயம் இருக்காது. காற்று, மழையால் ஏற்படும் பாதிப்புகளும் மிக குறைவு.

-தொடரும்…

கட்டுரையாளர்: என்.மதுபாலன், வேளாண் துணை இயக்குனர்(ஒய்வு), தர்மபுரி மாவட்டம். தொடர்புக்கு: 9751506521.

Exit mobile version