Site icon Vivasayam | விவசாயம்

பூச்சிகள்

நீங்க அத்தி பழம் சாப்பிட ஒரு பூச்சி தான் காரணம் தெரியுமா? தேனீக்கள் இல்லை என்றால் நான்கு வருடத்தில் இவ்வுலகில் உள்ள மனித இனம் அழிஞ்சிடும்ன்னு சொல்லுறாங்க….! குழல் இசை, அணைக் கட்டுமானம் இவை எல்லாம் பூச்சியிடம் இருந்து தான் மனிதன் கற்றுக்கொண்டான். மனிதன் பூச்சியைவிட பலமானவன்னு நினைக்கிறீங்களா? அதான் இல்ல… ஒரு பேரரசே கொசுவினால் அழிஞ்சு போன வரலாறு உண்டு….!

வடசென்னை படத்தில வர வசனம் மாறித்தான் இந்த தம்மா துண்டு பூச்சிகள் தான் இத்தனை வேலையை செய்யுது. பூச்சிகள் மனித இனத்தின் மூதாதையர்னு  சொல்லுறாங்க. மனிதன் பிறப்பதற்கு பல கோடி ஆண்டுகள் முன்னரே பூச்சிகள் பிறந்து இருக்கு. இந்த உலகம் ஐந்து முறை பெரும் அழிவை சந்தித்த போதும் பெரிய பெரிய விலங்கினங்கள் அழிந்த போதும் பூச்சிகள் அழியல. பூச்சிகளைத் தொட்டு தான் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதன் தோன்றியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்லுறாங்க.

இந்த பூச்சிகள் மாதிரி விசித்திரமான உயிரினங்கள் வேற எதுவுமே இல்லை உலகின் மனித எடையை விட பூச்சிகள் எடை மிக அதிகம் அப்படி இந்த உலகத்தின் மூலைமுடுக்கு எங்கும் நிரம்பி இருக்கு எரிமலை குழம்பில் கூட .இப்படிப்பட்ட பூச்சிகள் வேளாண்மையில் நன்மையாகவும் தீமையாகவும் பல தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கு.

பயிர்களில் தன் மகரந்த சேர்க்கை, அயல் மகரந்த சேர்க்கை என்று இருவகை உள்ளது. இதில் அயல் மகரந்த சேர்க்கையில் பூச்சிகளின் பங்கு மிகவும் பெரிது. குறிப்பாக தென்னந்தோப்பில் தேனீக்களை வளர்த்தால் 20-30% வரை அதிகம் விளைச்சல் எடுக்கலாம். கரும்பில் கூட தண்டு துளைப்பான் கணிசமாக சில பயிர்களை தாக்கி இருந்தால் பக்கவாட்டு தூர் அதிகம் முளைக்கும். மா மரத்தில எறும்புகள் பூக்களை வாட வைக்கும் சில செல்லுப் பூச்சிகளை உண்டு அழிக்கின்றன. இப்படி பல நன்மைகள் பூச்சிகள் மூலம் நடக்கிறது. ஆனா நாணையத்துக்கு மறுபக்கம் மாறி இந்த பூச்சிகள் தான் உலகில் உருவாகின்ற உணவு உற்பத்தியில் 5இல் ஒரு பங்கை அழிக்கிறது அதுமட்டுமின்றி தாவரத்திற்கு வைரஸ் நோய்களை ஏற்படுத்துவதிலும், விளை பொருட்களின் தரத்தைக் குறைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

இதனை சரிசெய்ய பூச்சிகளை அழிப்பது தான் தீர்வு என்று நினைத்தால் நமக்கு ஏமாற்றம் தான் (அது நடக்குவும் நடக்காது) மாறாய் அதை ஒரு கட்டுக்குள் வைக்க தான் இயலும். இந்த உலகம் எல்லோருக்குமானது எல்லோரும் என்றால் பூச்சிகளையும் உள்ளடக்கி தான். இவற்றில் ஒன்று குறைந்தாலும் உணவு சங்கிலியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதுபோல பூச்சிகளை அழிக்கும் முயற்சி பின்னாளில் நமக்கே எதிராக திரும்பும், கேரளாவில் நடந்த எண்டோசல்ஃபான் பேரிடர் போல். எனவே எல்லா உயிரினத்தோடும் ஒன்றி வாழ்வது தான் உயர்ந்தது உகந்தது.

கட்டுரையாளர்: அன்பன் செ. விக்னேஷ், இளநிலை வேளாண்மை பட்டதாரி, குளித்தலை, தொடர்பு எண்: 8344838960, மின்னஞ்சல்: vickysvicky42@gmail.com

Exit mobile version