Site icon Vivasayam | விவசாயம்

12ம் நூற்றாண்டில் இருந்த நெல்லின் வகைகள்!

மேலைச் சாளுக்ய மன்னன் மூன்றாம் சோமேச்வரன் விக்ரம சோழனுக்குச் சமகாலத்தவன். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். பல்கலை வித்தகன். அவன் எழுதிய மானஸோல்லாஸம் என்னும் ஒரு நூல் கலைக்களஞ்சியமாகப் போற்றப்பெறுகிறது. கர்ணாடக இசை, கட்டிடக்கலை, தாவரவியல், விலங்கியல், விலங்கு மருத்துவம், அரசியல், நிர்வாகம் ஆகியவற்றிற்கு மிகச் சிறந்த நூலாக இதைச் சொல்லலாம். தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்பாக எழுதப்பெற்ற இந்த நூலில் எட்டுவகையான நெற்பயிர்கள் குறிப்பிடப்பெற்றிருக்கின்றன. அவையாவன
1. மஹாசாலி
2. ரக்த சாலி
3. ஸ்தூல சாலி
4. ஸூக்ஷ்ம சாலி
5. கந்த சாலி
6. கலிங்க சாலி
7. ஷாஷ்டிக சாலி
8. முண்ட சாலி

சாலி என்றால் நெல்லைக் குறிக்கும் வடமொழிச்சொல். நெல்வேலியைச் சாலிவாடி என்று வடமொழியிற்குறிப்பர்.
இவற்றுள் மஹாசாலி என்பது பெரிய அளவிலான நெல். ரக்த சாலி என்பது சிவப்பு நெல். ஸ்தூல சாலி என்பது பெருநெல். ஸூக்ஷ்ம சாலி என்பது மிகவும் குறுகிய நெல். கந்த சாலி என்பது நல்ல மணமுள்ள நெல். கலிங்க சாலி என்பது கலிங்கநாட்டில் விளையும் நெல். ஷாஷ்டிக சாலி என்பது அறுபது நாட்களில் அறுவடைக்காகும் நெல். இதைத்தான் குறுவைநெல் எனத் தமிழில் வழங்குகிறோம். முண்டசாலி என்பது மெல்லிய உமியுடைய நெல்.

சங்கர நாராயணன்
வரலாற்று ஆய்வாளர்

Exit mobile version