Site icon Vivasayam | விவசாயம்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காரசார விவாதம் : கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. விவசாயிகளின் கேள்விகளுக்கு, அதிகாரிகள் பதிலளித்த விபரம்:

ராமகவுண்டர்: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், 40 அடி தண்ணீர் உள்ளது. கால்வாயில் தற்போது, 153 கன அடிநீர் மட்டுமே செல்கிறது. ஏரிகளில் தண்ணீரை நிரப்ப, 195 கனஅடி நீர் திறக்க வேண்டும்.

கலெக்டர்: 195 கனஅடி நீர் திறக்கப்படும்.

சென்னையநாயுடு: குள்ளம்பட்டி ஏரியில் இருந்து, களர்பதி வரை, ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடை ஆக்கிமிப்பு செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர்: டி.ஆர்.ஓ., நேரில் வந்து ஆய்வு மேற்கொள்வார்.

துரை ராமச்சந்திரன்: நெல் பயிரில் தற்போது, சுருட்டு புளு நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை இணை இயக்குனர் கணேசன்: யூரியாவை குறைத்து போட வேண்டும். மேலும் வேம்பு சார்ந்த மருந்துகளை தெளிக்க வேண்டும்.

பசவன்: அஞ்செட்டி அருகே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, தண்ணீரை சேமிக்க தடுப்பணை கட்ட வேண்டும்.

கலெக்டர்: எங்கெல்லாம் தண்ணீரை சேமிக்க முடியுமோ, அங்கெல்லாம் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விஸ்வநாதன்: கே.ஆர்.பி., அணை தண்ணீர் மூலம், மூன்று போக சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது தண்ணீர் பற்றாக்குறையால், ஒரு போகம் மட்டுமே செய்ய முடிகிறது. எனவே, தொடர்ந்து நெல்லை பயிரிடாமல், மாற்று விவசாயம் செய்ய ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

கலெக்டர்: இவை நல்ல விஷயம். இது குறித்து விவசாயிகள் கூட்டம் கூட்டி, ஆலோசனை செய்ய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தி, வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் செய்தி

இந்த விவாதத்தில் மாவட்ட ஆ்டசியர் அவர்கள் எங்கெல்லாம் தண்ணீரை சேமிக்க முடியுமோ அங்கெல்லாம் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார், ஆனால் இதுவரை கட்டிய தடுப்பணைகளில் உள்ள தண்ணீர் விபரங்களை வழங்குவாரா? என்பது அவருக்கே வெளிச்சம்

Exit mobile version