Site icon Vivasayam | விவசாயம்

புவி வெப்பமடைதல்- தெரிஞ்சுக்கலாமா?

குளோபல் வார்மிங், கிளைமேட் சேஞ்ச் என்பது போன்ற வார்த்தைகள் நமக்கு செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
முதலில் நாம் கேட்டது ஓசோன் படலம் ஓட்டை என்பதைத்தான், ஆனால் இன்றோ உலகம் அழிவின் விளிம்பை நோக்கிச் செல்கிறது. புயல், வெள்ளம் தாறுமாறாக அதிகரித்திருப்பதற்கும், மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் இவைதான் காரணம் என்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்த உலகுக்கே ஆபத்தை உருவாக்கும் குளோபல் வார்மிங், கிளைமேட் சேஞ்ச் என்றால் என்ன? சிக்கலான அறிவியல், சுற்றுச்சூழல் விஷயங்களாகக் கருதப்படும் புவிவெப்பமடைதல், பருவநிலை மாற்றம் பற்றி எளிமையாகப் புரிந்துகொள்ள, இதோ ஒரு வழிகாட்டி.

1.புவி வெப்பமடைதல் (Global Warming): வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பதால், பூமி இயல்புக்கு மாறாக வெப்பமடைவதே புவி வெப்பமடைதல். கடந்த 100 ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இந்தக் காலத்தில் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற புதைபடிம எரிபொருள்களை கட்டுமீறி பயன்படுத்தியதும், காடழிப்பும் பசுங்குடில் வாயுக்களின் அளவை அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம்.

2.காலநிலை மாற்றம் (Climate Change): புவி வெப்பம் அடைவதால் பூமியின் பருவகாலநிலை, தட்பவெப்பநிலை, இயற்கைச் சீற்ற நிகழ்வுகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களே காலநிலை மாற்றம். ஒரு பகுதியின் சராசரி வானிலையில் ஏற்படும் மாற்றம்தான் காலநிலை மாற்றம் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

3.பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse Gases): பூமியின் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஒரு போர்வை போல சேகரமாகி இருக்கும் நீராவி, கார்பன் டை ஆக்சைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்கள் சூரிய வெப்பத்தை பூமிக்குள் அனுமதிக்கின்றன. ஆனால், பூமியின் மேற்பரப்பில் இருந்து எதிரொளிக்கப்படும் வெப்பத்தை (அகச்சிவப்பு கதிர்களை) விண்வெளிக்கு அனுமதிக்காமல் தடுத்து, பூமிக்கே திரும்ப அனுப்புகின்றன. இதனால் பூமி கூடுதல் வெப்பமடைகிறது. கிரீன்ஹவுஸ் எனப்படும் கண்ணாடிக் கூடு போல, இந்த வாயுக்கள் பூமியை வெப்பமடையச் செய்வதால் இந்தப் பெயர் வந்தது.

4.பசுங்குடில் விளைவு (Greenhouse Effect): வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்கள் இல்லை என்றால், பூமியின் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் குறைவாகவே இருக்கும். அப்போது எல்லாம் உறைந்து போய் உயிரினங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே, பூமியில் உயிரினங்கள் வாழ பசுங்குடில் விளைவு அவசியமே. ஆனால் தொழிற்புரட்சிக்குப் பின் பசுங்குடில் வாயுக்களின் வெளியீடு எல்லை கடந்து அதிகரித்துவிட்டதால், அவற்றின் அடர்த்தி அதிகரித்து அதிக வெப்பத்தை பிடித்து வைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன. இதுவே பிரச்சினைக்குக் காரணம்.

5.புதைபடிம எரிபொருள்கள் (Fossil Fuels): நிலத்தில் இருந்த தாவரங்கள், கடலில் இருந்த உயிரினங்கள் நிலத்துக்கு அடியில் புதைந்து, கடும் அழுத்தத்துக்கு உள்ளாகி கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு மக்கும்போது, கார்பனை மூலப்பொருளாகக் கொண்ட நிலக்கரி, கச்சாஎண்ணெய், எரிவாயு ஆகியவை உருவாகின்றன. இவற்றை பயன்படுத்துவதால், பசுங்குடில் வாயுக்கள் அதிக அளவில் வெளியிடப்படுகின்றன.

6.புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy): நிலக்கரி, பெட்ரோல் போன்ற மரபு சார்ந்த ஆற்றல்களுக்கு மாறாக, சூரியசக்தி, காற்று, புனல் (தண்ணீர்) ஆற்றல் போன்ற எக்காலத்திலும் தீராத, மீண்டும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஆதாரங்கள். இதன் மற்றொரு பெயர் மரபுசாரா எரிசக்தி.

7.தட்பவெப்பநிலை (Weather): ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட காலத்தில் வளிமண்டலம் எப்படிப்பட்ட நிலையில் உள்ளதோ அதுவே தட்பவெப்பநிலை. காற்று, வெப்பநிலை, ஈரப்பதம், வளிமண்டல அழுத்தம், மேகங்கள், மழைப்பொழிவு ஆகிய அம்சங்களின் மூலம் இது அளவிடப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் நேரத்துக்கு நேரம், நாளுக்கு நாள், பருவத்துக்குப் பருவம் தட்பவெப்பநிலை மாறுபடும்.

8.பருவநிலை (Climate): குறிப்பிட்ட ஒரு பகுதியில் குறிப்பிட்ட காலத்தில் உள்ள வானிலையின் பொதுவான தன்மை. ஒரு குறிப்பிட்ட பகுதியின் வானிலை பொதுவாக எப்படியிருக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அதுதான் பருவநிலை. எ.கா. ஊட்டியும் கொடைக்கானலும் குளிராக இருக்கும், சென்னையும் வேலூரும் வெப்பமாக இருக்கும் என்பதைப் போல.

9.தகவமைத்தல் (Adaptation): மாற்றம் அடைந்துவிட்ட, மாற்றம் அடையப் போகிற ஒரு சுற்றுச்சூழலில் தொடர்ந்து வாழ்வதற்காக உயிரினங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றங்கள். புவி வெப்பமடைதல், அதன் விளைவாக காலநிலையில் ஏற்படும் மாற்றம், அழிவுகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளே இந்தப் பெயரில் அழைக்கப்படுகின்றன.

10.மறுசுழற்சி, மறுபயன்பாடு, குறைந்த பயன்பாடு (Recycle, Reuse, Reduce): நுகர்வுக் கலாசாரத்துக்கு அடிமையாகி பொருள்களை வாங்கிக் குவிப்பதற்கு பதிலாக, நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பொருள்களை மட்டும் வாங்கி, மறுபடி பயன்படுத்தி, மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழலுக்கு இணக்கமாகச் செயல்படுவது. இதன் மூலம் புவி வெப்பமடைவதையும், பருவநிலை மாற்றத்தையும் குறைக்க முடியும்.

மூலம் : தமிழ் இந்து செய்தித்தாள்

Exit mobile version