Site icon Vivasayam | விவசாயம்

இன்று உலக மண் வள தினம்(World Soil health Day)

நமக்கு தெரியுமா குளோபல் வார்மிங் போன்று சாயில் வார்மிங் பிரச்னையும் நமக்கு அதிகரிக்கிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாய நிலம் நமக்கு கிடைப்பதில்லை. மேலும் செயற்கை .உரங்களை பயன்படுத்தி நாம் செய்யும் விவசாயம் நம் மண்ணை மீண்டும் பயன்படுத்த இயலாத நிலைக்கு கொண்டு செல்லும்.

வரும் 2050ம் ஆண்டிற்குள் உலகத்தின் மக்கள் தொகை ஆயிரம் கோடியை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாற் போன்று உணவு உற்பத்தியையும் பெருக்க வேண்டும். இருக்கின்ற வளங்களையும் சேதாரமின்றிப் பாதுகாக்க வேண்டும் எனும் அடிப்படையில் மண் வளம் குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். மண் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் 2002 முதல் டிச.,5 ம் நாள் ‘உலக மண் தினம்’ என கொண்டாடப்பட்டு வருகிறது. ஓர் அங்குலம் கனமுடைய மண் உருவாக குறைந்தபட்சம் 500 ஆண்டுகள் ஆவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஒரு கைப்பிடி அளவுள்ள மண்ணில் 45 விழுக்காடு கனிமப்பொருட்களும், 25 விழுக்காடு நீர், 25 விழுக்காடு வளியும், 5 விழுக்காடு நுண்ணுயிர்களும் நிறைந்துள்ளன.
மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் ஒரு கிராம் மண்ணில் 5 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரம் வரையிலான பாக்டீரியாக்களும், ஒரு ஏக்கர் மண்ணில் ஐந்திலிருந்து 10 டன் வரையிலான எண்ணிக்கையில் பல்வேறு வகையான உயிர்களும் வாழ்கின்றன. பயிர் நிலமென்றால் ஏக்கர் ஒன்றில் 1.4 டன் மண்புழுக்கள் வாழ்வதுடன், அப்புழுக்கள் ஆண்டொன்றுக்கு 15 டன் அளவிற்கு செறிவான மண்ணை உருவாக்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் பல்வேறு நிறங்களில் மண் வகைகள் இருந்தாலும், பொதுவாக கருப்பு, பிரவுன் மற்றும் சாம்பல் நிறங்களிலேயே காணப்படுகின்றன. மண்ணரிப்பு, வேதி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு அதிகரிப்பு, தொழிற்சாலைக் கழிவுகள், கால்நடைகளின் அளவுக்கு மீறிய மேய்ச்சல், கடல்நீர் ஊடுருவல் போன்ற செயல்பாடுகளே .
மண் வளம் சீர்கேடு அடைவதற்கான காரணம். ஒட்டு மொத்த உலகப் பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தை வகிக்கிறது. இந்தியா 32 லட்சத்து 87 ஆயிரத்து 782 ச.கி.மீ., பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 45 விழுக்காடு நிலப்பரப்பு வேளாண்மைக்குப் பயன்பட்டு வருகிறது. களிமண், செம்மண், கரிசல்மண் என எட்டு விதமான மண் வகைகள் காணப்படுகின்றன.

மண்ணுக்குள் கனிமப் பொருட்கள் :தமிழகத்தைப் பொறுத்தவரை 130 லட்சம் எக்டேர் பரப்பளவு நிலத்தைக் கொண்டுள்ளது. இதில் 63 லட்சம் எக்டேர் வேளாண்மை செய்வதற்கு ஏற்ற மண் வளத்தையும், செறிவையும் கொண்டுள்ளது. தாவர இனங்களுக்குத் தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், சுண்ணாம்பு, இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற கனிமச் சத்துக்கள் இந்த மண்ணில் நிறைந்துள்ளன. பொழிகின்ற மழைநீரை மண்ணுக்குள் ஈர்த்துக் கொள்ளவும், காற்றின் மூலமாகக் கிடைக்கும் நுண்ணுாட்டங்களைப் பெற்றுக் கொள்ளவும் மண்வளம் செறிந்த தன்மையில் இருக்க வேண்டும்.
கேள்விக்குறியாகும் மண்வளம் :அடுத்த 50 ஆண்டுகளுக்குள் நிகழக்கூடிய மக்கள் தொகைப் பெருக்கம் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தப்போகிறது. அதில் குறிப்பாக உணவு மற்றும் எரிபொருள் தேவை இரு மடங்காகவும், தண்ணீர் தேவை 150 விழுக்காடு கூடுதலாகவும் அதிகரிக்கும். நமது பருவநிலையில் நிகழ்ந்த மாறுதல் காரணமாக உயிரிப்பன்மயத்திலும் கடுமையான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர். கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம் பெயர்வதால் ஏற்படும் சிக்கல், நகர்ப்புறங்களின் மண் வளத்தை மிகப் பெருமளவு பாதிக்கக்கூடும். காடுகளில் நிகழ்ந்த சூழல் கேடுகளும், அழிவுகளும் உயிரிப்பன்மயத்திற்கே உலை வைத்துவிட்டன. இதனால், அங்கு உயிரினங்களின் இருப்பு கேள்விக்குறியாகி உள்ளது. வனவிலங்குகளின் இருப்பே, காட்டு வளத்தையும், மண் மற்றும் நீர்வளத்தையும் பாதுகாக்கும் என்பதை உணரத் தவறியதால், இன்றைக்கு மிகப் பெரும் சூழல்கேட்டிற்குள் நாம் சிக்கி உள்ளோம்.

மண்ணைப் போற்றிய மாண்பு :மண்ணைப் போற்றி வணங்குதல் என்பது நமது வழிபாட்டு முறைகளுள் ஒன்றாகும். ஐம்பூதங்களை நிலம், நீர், காற்று, நெருப்பு, வெளி என தனித்தனியாக ஒவ்வொன்றையும் வணங்கி மகிழ்வது நமது பண்பாடு.புறநானுாற்றுப் பாடல் ஒன்று, ‘மண் திணிந்த நிலனும், நிலன் ஏந்திய விசும்பும்’ என்று ஐம்பூதங்களின் அற்புத செயல்பாடு குறித்து விளக்குகிறது. சங்க இலக்கியப் புலவரான குடபுலவியனார் ‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்கிறார். உணவாய் மாறும் திறன் படைத்தவையே நிலமும், நீரும் என்பது இதன் பொருளாகும்.

வசதிப் பெருக்கங்கள் அனைத்தும் மனிதர்களுக்கானதாய் இருந்தாலும், அவை மண்ணுக்கானதாய் இல்லை. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருந்து மின்னணுப் பொருட்கள் வரை மண்ணின் வளத்தைச் சீர்குலைக்கும் காரணிகளாக மாறிவிட்டன. ஆகையால் அப்பொருட்களின் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துக் கொள்ள முன்வர வேண்டும்.வேதி உரங்களைத் தவிர்த்து, இயற்கை சார்ந்த வேளாண்மை செய்யும் மனப்பக்குவம் அனைத்து உழவர்களுக்கும் வளர வேண்டும். தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளை முறையாக சுத்திகரித்து மறுபயன்பாட்டிற்கு உகந்த வகையில் மாற்ற வேண்டும்.
இயற்கை வளங்களைச் சுரண்டி சூறையாடும், பொறுப்பற்ற போக்கு இனியும் வளர்வதற்கு அனுமதிக்கக்கூடாது.

உயிரினங்களின் இருப்பே, மனித குலத்தின் இருப்பு என்பதை உணர்தல் வேண்டும். இயற்கையை போற்றி, மதித்து, வழிபட்டு மகிழும் நம் மரபுகளுக்கு எதிராக ஒருபோதும் இயங்குதல் கூடாது என்ற உறுதிமொழியையும் இந்த நொடியிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

தகவல் : வாட்ஸ்அப்

Exit mobile version