Site icon Vivasayam | விவசாயம்

விஷ நாராயணி!

ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள தகவல்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும்.இதில் விஷ நாராயணி மூலிகையை பற்றி காண்போம்.

      சிறுநீரகச் செயலிழப்பு, உப்பு நீர், கிரியேட்டினின் மற்றும் யூரியா அதிகரிப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும் இன்னொரு மூலிகை ‘விஷ நாராயணி’. இந்த அரிய மூலிகையை மக்களுக்கு அறிமுகம் செய்தவர், மரு. இரா. ஜெயராமன். தமிழகத்தில் உள்ள அனைத்து மலைகளும், காடுகளும் இவருக்கு அத்துபடி பாரம்பர்ய மருத்துவர்கள் மற்றும் சாமியார்களோடு நெருங்கிய தொடர்புடையவர். பொதிகை மலைக்காடுகளில் மட்டுமே காணப்பட்ட இந்த அரிய மூலிகையை, அப்பகுதியைச் சேர்ந்த காணி மக்களிடம் இருந்து பெற்று வந்தார்.

      பொதுவாக, விஷம் என்று சொல்லப்பட்ட அனைத்தையும் நமது பாரம்பர்ய மருத்துவத்தில், சிறுநீரக நோய்களைக் குணமாக்கப் பயன்படுத்துகிறோம். கை கால்கள், முகம் வீங்கிக் காணப்படுவது சிறுநீரகச் செயலிழப்புக்கான முக்கிய அறிகுறியாகும். இந்த அறிகுறி தென்பட்டால், விஷ நாராயணி மூலிகையின் இலைகளை மட்டும் ஒரு சிறு எலுமிச்சங்காயளவு இரு வேளை கொடுத்து வரும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர், காணி மக்கள். அதைத் தொடர்ந்துதான் இம்மூலிகையைச் சோதனை செய்து பார்த்து அதைக்கொண்டு சிறுநீரக நோய்களைக் குணமாக்கினார், மரு.ஜெயராமன்.

    கிரியேட்டினின் அளவு 8 வரை உயர்ந்து காணப்படும் நோயாளிகளுக்கு… விஷ நாராயணி இலையை அரைத்து ஒரு எலுமிச்சங்காயளவு காலை, மாலை இரு வேளைகள் வெறும் வயிற்றில் கொடுத்து வந்தால், மூன்று வாரங்களில் கிரியேட்டினின் அளவு குறையத் தொடங்கும்.

    இந்நோயாளிகளுக்கு உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம் ஆகும். டயாலிசிஸ் தொடங்கப்பட்ட நோயாளிகளுக்கு இம்மூலிகையைக் கொடுத்து வந்தால், டயாலிசிஸ் சிகிச்சைக்கான நாட்களின் இடைவெளியை படிப்படியாகக் குறைக்க முடியும். சிறுநீரகச் செயலிழப்பு நோயின் கடைசிக் கட்டத்தில் ஏற்படும் மூச்சு வாங்குதல், சோர்வு ஆகியவற்றையும் இம்மூலிகை குணமாக்குகிறது.

இம்மூலிகையை பயன்படுத்தி நம் வாழ்நாளை அதிகமாக்குவோம்.

நன்றி பசுமை விகடன்

Exit mobile version