Site icon Vivasayam | விவசாயம்

எலுமிச்சையில் ஏற்படும் நோய்கள்

எலுமிச்சை பிளவை நோய்: சாந்தோமோனாஸ் சிட்ரை

நோய் அறிகுறிகள்:

         இந்நோயானது சொரிநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நோய் இலைகள், கிளைகள், முதிர்ந்த கிளைகள், பழங்கள், முட்கள் போன்ற எல்லா பாகங்களையும் தாக்கக்கூடியது. இலைகளில் முதலில் சிறிய வட்ட வடிவ நீர்க்கசிவுடன் கூடிய புள்ளிகள் தோன்றும். நோய் முற்றிய நிலையில் புள்ளிகள் நிறமாக மாறி, நடுப்பகுதி சொரசொரப்பான தக்கை போல குழிவுடனும் காணப்படும். பழங்களிலும் இதேபோன்று நீர்க்கசிவுடன் கூடிய புள்ளிகள் தோன்றி பின் காய்ந்து, சொரசொரப்பாகி காய்ந்துவிடும். இப்புள்ளிகள் பழங்களின் மேல் தோலை மட்டுமே பாதிக்கும். உட்புறத்திலுள்ள சதைப்பற்றை பாதிப்பதில்லை,.

பரவும் விதம்:

       நோய் தாக்கிய செடிகள், மழைச்சாரல், காற்று மூலமாகவும் பரவுகிறது.

கட்டுப்பாட்டு முறைகள்:

1.அதிக அளவில் நோய் தாக்கிய கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி எரித்துவிட வேண்டும்.

2.நோய் தாக்காத நாற்றுகளை நடவுக்குப் பயன்படுத்த வேண்டும்.

3.ஸ்டிரெப்டோமைசின் சல்ஃபேட் என்ற எதிர் உயிரிப்பொருளை தெளிக்க வேண்டும்.

4.வேப்பம்பிண்ணாக்குக் கரைசலை தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

5.போர்டோ கலவை ஒரு சதம் அல்லது தாமிர ஆக்சிகுளோரைடு பூசணக்கொல்லியை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

எலுமிச்சை தண்டுதொய்வு அல்லது நலிவு நோய்: டிரிஸ்டிஸ்ஸா வைரஸ்

நோய் அறிகுறிகள்:

         செடியின் கிளைகள் பின்னோக்கிக் கரியும். இலைகள் சிறுத்து மஞ்சள் நிறமாக மாறும். காய்கள் மிகவும் சிறுத்துக் காணப்படும். இதைத்தொடர்ந்து இலைகள் வளைந்து எண்ணிக்கை குறைந்து காணப்படும். சில சமயங்களில் வேர்பகுதி அழுகி காய்ந்து விடும்.

பரவும் விதம்:

        இந்நோயானது ஏஃபிஸ் காசிப்பி, மைகஸ் பெர்சீகே, ஏஃபிஸ் சிட்ரிசிட்ஸ் என்ற அசுவினிகளில் பரப்பப்படுகிறது.

கட்டுப்பாட்டு முறைகள்:

1.தாக்கப்பட்ட கிளைகள், இலைகளை அப்புறப்படுத்தி அழித்துவிட வேண்டும்.

2.ஊடுருவில் பாயும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி அசுவினிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

Exit mobile version