Site icon Vivasayam | விவசாயம்

சங்கன் குப்பி

தெரிந்த செடிகள்! தெரியாத பயன்கள்!!

            ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவ பண்பை கொண்டிருக்கும். அதை நம் முன்னோர்கள் அறிந்து வைத்திருப்பது மிக சிறப்பான விஷயம்.வீட்டிலேயே மருத்துவம் செய்ய உகந்தவை.

         இதில் சங்கன் குப்பி பற்றி காண்போம்.

சங்கன் குப்பி

தாவரவியல் பெயர்: CLERODENDRUM INERME

         படர்ந்து வளரக்கூடிய புதர்த் தாவரம் இது. பூங்காக்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் இலைகள் வெகுட்டலான மணம் கொண்டிருப்பதால் இதை பீச்சங்கன், பீநாறிச்சங்கன் என்று அழைப்பார்கள்.

         இது மணற்பாங்கான நிலத்தில் செழித்து வளரும். இது தீவனமாக பயன்படுவதில்லை. அடர்ந்த புதர்த் தாவரமாக வளர்வதால், உயிர்வேலி அமைக்க ஏற்றது. இதன் இலை, வேர் ஆகிய இரண்டுமே சிறந்த மருத்துவப் பண்பைக் கொண்டது.

பயன்கள்:

         இதை தோல் நோய் மருத்துவர் என்று கூடச் சொல்லலாம். கரப்பான், காளாஞ்சகப்படை, விஷக்கடி, ஊறல், தடிப்புகள் போன்ற அனைத்துவிதமான தோல் நோய்களுமே அலர்ஜியால்தான் வருகின்றன என்று ஆங்கில மருத்துவத்தில் காரணம் சொல்வார்கள். பாரம்பர்ய மருத்துவத்தில் இவை விஷத்தால் உண்டாகிறது எனக் கூறப்படுகிறது.

          இப்படிப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கன் குப்பி இலைகளைப் பறித்துச் சிறிது மோர் அல்லது நீராகாரம் விட்டுத் துவையல் போல அரைத்து 40 நாள்கள் வரை தினமும் காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சிறு நெல்லிக்காயளவு உண்டு வந்தால் ரத்தம் சுத்தமாகி தோல் நோய்கள் குணமாகத் தொடங்கும். ‘அகத்தியர் குழம்புஎனும் சித்த மருந்தைச் சங்கன் குப்பி இலைத்துவையலோடு சேர்த்து மூன்று நாள்கள் சாப்பிட்டால் பேதியாகும். இப்படிப் பேதியான பிறகு மருந்து எடுத்துக்கொள்வது சிறப்பாக இருக்கும்.

வாதமலாது மேனி கெடாது

என்பது சித்தர்களின் அறிவியல் கோட்பாடு. கேடடைந்த வாதக்குற்றத்தைத் தன்னிலைப்படுத்த,

பேதியால் வாதந்தாழும்

எனும் கோட்பாட்டுக்கிணங்க பேதிக்கு மருந்து எடுத்துக்கொண்டு பிறகு மருந்து உட்கொள்வது நலம்.

          சங்கன் குப்பி இலைகளை பச்சையாக அரைத்து கரப்பான், படைகள் பீது பூசி, அரை மணி நேரம் கழித்துக் கடலைமாவு அல்லது பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளித்து வந்தால் குணமாகும்.

           சங்கன் குப்பி இலைகளைத் தண்ணீரில் போட்டு சூடுபடுத்தி மிதமான சூட்டில் குளித்து வந்தால் உடலில் ஏற்படும் சொறி, எரிச்சல் குணமாகும். தினமும் சங்கன் குப்பி இலையைத் தேடிச் சென்று பறிக்க இயலாதவர்கள், இந்த இலைச் சாற்றுடன் சம அளவு சிற்றாமணக்கு எண்ணெயைச் சேர்த்துத் தைலமாகக் காய்ச்சி வைத்து இரவு படுக்கப்போகும் முன் 5 மில்லி அளவு குடித்து, தோல் நோய்களைக் குணப்படுத்திக் கொள்ளலாம்.

            சங்கன் குப்பி செடியின் இலை, தண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 100 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு லிட்டர் தண்ணீரில் இட்டு கால் லிட்டராகச் சுண்டும் வரை காய்ச்சி ஒரு ஃபிளாஸ்கில் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும். இக்கஷாயத்தை நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்து வந்தால் நாள்பட்ட காய்ச்சல், விட்டுவிட்டு வரும் காய்ச்சல் ஆகியவை குணமாகும்.

           சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் விப்புருதி எண்ணெய், மதனகாமேதவர இளகம், சித்தவல்லாதி இளகம், மாந்த எண்ணெய், கருவளர்க்கும் எண்ணெய், மேகரி தைலம், பூவரசங்காய் எண்ணெய், இடிவல்லாதி மெழுகு, பேய்ச்சொறி சூரணம்… என நூற்றுக்கணக்கான மருந்துகளில் சங்கன் குப்பி இலை மற்றும் வேர் சேர்க்கப்படுகின்றன.

நன்றி பசுமைவிகடன்

Exit mobile version