Site icon Vivasayam | விவசாயம்

தென்னை மரம்

முன்னுரை:

            மரம் என்றால் உணவு, மரம் என்றால் தண்ணீர், மரம் என்றால் காற்று, மரம் என்றால் வாழ்வு, மரம் என்றால் உயிர், மரம் தானே நம் வாழ்வின் அடிப்படை.

பிள்ளையைப் பெத்தா கண்ணீர்;
தென்னையைப் பெத்தா இளநீரு என்று ஒரு பாடல் வரிகள் உண்டு.

தென்னை மரத்தை பற்றி பார்ப்போம்.

வளர் இயல்பு:

ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்

தாவரவியல் பெயர் :கோக்கஸ் நியூசிஃபெரா (Cocos nucifera L.)
குடும்பம் :எரிக்கேசியோ (ARECACEAE)

      மணற்பாங்கான நிலத்தின் வளரவல்ல தென்னை, உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது. நல்ல மழையும் சூரிய ஒளியும் கிடைக்கும் இடங்களில் இது நன்கு வளரும்.

தென்னை வளர்ப்பு:

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம், அதிலும் தென்னையை வளர்ப்போம்

      உலகில் ,தென்னை 80-க்கு மேற்பட்ட நாடுகளில் பயிரிடப்படுகிறது. தென்னையில் கிடைக்கும் தேங்காய் உற்பத்தி ஆண்டுக்கு 61 மில்லியன் டன்களாகும். பிலிப்பைன்சு நாடு தேங்காய் உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது.இந்தியா, இலங்கை போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம் தென்னை ஆகும். சங்க நூல்கள் தென்னை மரத்தை ‘தெங்கு’ என்று கூறும். இதற்கு ‘தாழை’ என்ற பெயரும் உண்டு. 15-30 மீட்டர் உயரமாக வளரும்.தென்னை எல்லா வகை மண்ணிலும் வளரக் கூடியது.

தென்னை மரம் இந்தியாவில் காணப்படும் இடங்கள்:

      தமிழ்நாடு ,கேரளா,கர்நாடகம்,மத்தியபிரதேசம்,குஜராத்,பீகார்,ஒரிஷா,திரிபுரா,ஆந்திர

பிரதேஷம்,பாண்டிச்சேரி,மேற்கு வங்காளம் ,அந்தமான்,இலட்சத்தீவு, மஹாராஷ்டிரா,அஸ்ஸாம்

தென்னையில் உள்ள இரகங்கள்

  1. நெட்டை ரகம்

  2. குட்டை ரகம்

  3. கலப்பின ரகம்

நெட்டைரகங்கள்

  1. மேற்கு கடற்கரை நெட்டை

  2. கிழக்கு கடலோர நெட்டை

  3. சந்திரகல்பா () இலட்சதீவு சாதா (இலட்சதீவு சாதா நெட்டை)

  4. பிலிப்பைன்ஸ் சாதா (கேர சந்திரா)

  5. வேப்பங்குளம்.3 (அந்தமான் சாதா)

  6. ஆழியார் நகர்-1

  7. தீப்தூர் நெட்டை

  8. கேரசந்திரா (பிலிப்பைன்ஸ் அர்டினரி)

உகந்த ரகங்கள் காணப்படும் இடங்கள்:

தமிழ்நாட்டிற்கு உகந்த இரகங்கள்:

        மேற்கு கடற்கரை நெட்டை, சந்திரகல்பா () இலட்சத்தீவு சாதா (இசநே), வேப்பங்குளம்.3 (அந்தமான் சாதா), கிழக்கு கடலோர குட்டை, ஆழியார் நகர்-1, கேரசந்திரா (பிலிப்பைன்ஸ் சாதா).

கேரளாவிற்கு உகந்த இரகங்கள் :

       மேற்கு கடலோர நெட்டை, சந்திரகல்பா () இலட்சத்தீவு சாதா (இசநே), பிலிப்பைன்ஸ் சாதா (கேர சந்திரா), வேப்பங்குளம்.3 (அந்தமான் சாதா), கேரசகாரா (செய் செலலெஸ்) .

கர்நாடகாவிற்கு உகந்த இரகங்கள்:

      மேற்கு கடற்கரை நெட்டை, தீப்தூர் நெட்டை (தி.நெ), சந்திரகல்பா () இலட்சத்தீவு சாதா, வேப்பங்குளம்.3 (அந்தமான் சாதா), கேரசந்திரா (பிலிப்பைன்ஸ் சாதா) .

குட்டை ரகங்கள்:

  1. சவ்காட் ஆரஞ்சு குட்டை

  2. சவ்காட் பச்சைக்கட்டை

உகந்த ரகங்கள் மற்றும் காணப்படும் இடங்கள்:

தமிழ்நாட்டிற்கு உகந்த இரகங்கள் :

         சவ்காட் ஆரஞ்சு குட்டை, சவ்காட் பச்சைக்குட்டை
கேரளாவிற்கு உகந்த இரகங்கள் :

       சவ்காட் ஆரஞ்சு குட்டை, சவ்காட் பச்சைக்குட்டை
கர்நாடகாவிற்கு உகந்த இரகங்கள் :

      சவ்காட் ஆரஞ்சு குட்டை, சவ்காட் பச்சைக்குட்டை

கலப்பின ரகம்:

  1. கேரசங்கரா (மேற்கு கடற்கரை நெட்டை x சவுகாட் ஆரஞ்சு குட்டை)

  2. சந்திரசங்கரா (சவ்காட் ஆரஞ்சு குட்டை x மேற்கு கடற்கரை நெட்டை)

  3. சந்திரலக்ஷா (இலட்சதீவு சாதா நெட்டை x சவ்காட் ஆரஞ்சு குட்டை)

  4. கேரகங்கா (மேற்கு கடற்கரை நெட்டை x கங்கா பந்தம் பச்சை குட்டை)

  5. இலக்ஷகங்கா (இலட்சதீவு சாதா நெட்டை x கங்கா பந்தம் பச்சை குட்டை)

  6. ஆனந்த கங்கா (இலட்சதீவு சாதா நெட்டை x கங்கா பந்தம் பச்சை குட்டை)

  7. கேரஸ்ரீ (மேற்கு கடற்கரை நெட்டை x மலேயன் ஆரஞ்சு குட்டை)

  8. கேர செளபாக்யா (மேற்கு கடற்கரை நெட்டை x எஸ்எஸ்ஏப்ரிகாட் நெட்டைநே)

  9. விஹெச்சி 1 (கிழக்கு கடற்கரை நெட்டை x மலையான் பச்சை குட்டை)

  10. விஹெச்சி 2 (கிழக்கு கடற்கரை நெட்டை x மலேயன் ஆரஞ்சு குட்டை)

  11. விஹெச்சி 3 (கிழக்கு கடற்கரை நெட்டை x மலேயன் ஆரஞ்சு குட்டை)

உகந்த ரகங்கள் மற்றும் காணப்படும் இடங்கள்:

தமிழ்நாட்டிற்கு உகந்த இரகங்கள் :

      கேரகங்கா (மேற்கு கடற்கரை நெட்டை x சவுகாட் ஆரஞ்சு குட்டை), சந்திரசங்கரா (சவுகாட் ஆரஞ்சு குட்டை x மேற்கு கடற்கரை நெட்டை), கேர செளபாக்யா (மேற்கு கடற்கரை நெட்டை x எஸ்எஸ்ஏப்ரிகாட் நெட்டை), விஹெச்சி 1 (கிழக்கு கடற்கரை நெட்டை x மலையான் பச்சை குட்டை), விஹெச்சி 2 (கிழக்கு கடற்கரை நெட்டை x மலேயன் ஆரஞ்சு குட்டை), விஹெச்சி 3 (கிழக்கு கடற்கரை நெட்டை x மலேயன் ஆரஞ்சு குட்டை).

கேரளாவிற்கு உகந்த இரகங்கள் :

       கேரகங்கா (மேற்கு கடற்கரை நெட்டை x கங்கா பந்தம் பச்சை குட்டை), சந்திரசங்கரா (சவுகாட் ஆரஞ்சு குட்டை x மேற்கு கடற்கரை நெட்டை),
சந்திரலக்ஷா (இலட்சதீவு சாதா நெட்டை x சவுகாட் ஆரஞ்சு குட்டை), கேரகங்கா (மேற்கு கடற்கரை நெட்டை x கங்கா பந்தம் பச்சை குட்டை), இலக்ஷகங்கா (இலட்சதீவு சாதா நெட்டை x கங்கா பந்தம் பச்சை குட்டை), ஆனந்த கங்கா (அந்தமான் சாதாரண நெட்டை x கங்கா பந்தம் பச்சை குட்டை), கேரஸ்ரீ (மேற்கு கடற்கரை நெட்டை x மலேயன் ஆரஞ்சு குட்டை), கேர செளபாக்யா (மேற்கு கடற்கரை நெட்டை x எஸ்எஸ்ஏப்ரிகாட் நெட்டை).

கர்நாடகாவிற்கு உகந்த இரகங்கள் :

      கேரகங்கா (மேற்கு கடற்கரை நெட்டை x சவுகாட் ஆரஞ்சு குட்டை), சந்திரசங்கரா (சவுகாட் ஆரஞ்சு குட்டை x மேற்கு கடற்கரை நெட்டை), சந்திரலக்ஷா (இலட்சதீவு சாதா நெட்டை x சவுகாட் ஆரஞ்சு குட்டை), கேர செளபாக்யா (மேற்கு கடற்கரை நெட்டை x எஸ்எஸ்ஏப்ரிகாட் நெட்டை).

தென்னை மரத்தின் பயன்கள்:

தென்னங்கீற் றின்தென்றல் தன்னிலாட செவ்விளநீர்
தென்னையோ நாணுகின் றாள்
வாய்க்கால் கரையில் வரிசையில் நின்றே
நிழல்தந் திடும்ந‌ற்தென் னை
குளிர்ந்தநீர் வாய்க்காலில் தென்றலாட மேலைக்
கதிரொளியில் கீற்றாடு தே
காற்றெனும் காதலன் கட்டித் தழுவிட
நாணத்தில் கோதைதென் னை
மேலைக் கதிர்கீற்று திற்ந்தெட்டிப் பார்க்கவே
சோலை மலர்சிரிக் கும்

கவின் சாரலன்

  1. தென்னை மரத்தின் அனைத்து வித பொருள்களும் ஒவ்வொரு தேவைகளுக்கு பயன்படுகின்றன.

  2. தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை.

  3. தேங்காயும், அதன் தண்ணீரும் ஜீரணமண்டலத்தை வலுப்படுத்த உதவும். வயிற்று இறக்கம், நாவறட்சி, மயக்கம், படபடப்பு, இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றைக் குணப்படுத்த உதவும்.

  4. இதன் வேரைக் கசாயமிட்டு பருக படை, சொறி, தோல் நோய், நாக்கு வறட்சி போன்றவை குணமாகும்.

  5. இரத்த மூலத்திற்குத் தென்னம் பட்டையையும் இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்துகிறார்கள்.

  6. தேங்காயின் சதைப் பகுதியைச் சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டால் ஆண்மைச் சக்தியை அதிகரித்து வயிற்றுப்பூச்சிகளைச் சாகடிக்கிறது.

  7. தேங்காய் சாமி பூஜைகளுக்குப் பயன்படுகின்றது.

  8. தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

  9. தென்னை ஓலையை கொண்டு கூரை முடையலாம்.இது குளுமையை தரும்.

  10. ஓலையைச் சீவி துடைப்பம் செய்யலாம்.

  11. தென்னை தண்டை கொண்டு சிறு ஓடைகளின் மீது பாலம் அமைக்கலாம்.

  12. இளம் ஓலைகளை அழகாகப் பின்னி திருவிழா காலங்களில், திருமண வைபவங்களிலும் தோரணமாக் தொங்கவிடலாம்.

  13. இதன் பூக்கள் திருவிழா நேரத்தில் மாவிளக்கின் மேல் வைத்து கொண்டு செல்வார்கள்.

  14. கொட்டாங்குச்சிகள் கைவினைப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

  15. தேங்காய் நார் கயிறு திரிக்கவும், உரமாகவும், பாத்திரம் கழுவவும் பயன்படுகிறது.

  16. இதில் இருந்து பெறப்படும் எண்ணெய் பிறந்த குழந்தைகளுக்கு தடவி குளிக்க வைப்பதால் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும், கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.

  17. இதை தினமும் தடவி அரை மணிநேரம் கழித்து குளித்தால் உடல் களைப்பு நீங்கும்.

  18. வாய்ப்புண், நாக்குப்புண் போன்றவற்றிற்கு தேங்காய் எண்ணெயை குடிக்கலாம்.வெட்டுக் காயங்களில் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க இதன் எண்ணெயை பயன்படுத்தலாம்.

    தெய்வத்தைத் தொழுது வணங்கிடவே
    தேங்காய் கொடுக்கும் தென்னைமரம்

நீண்டு வளரும் தென்னைமரம்
நிமிர்ந்து நிற்கும் தென்னைமரம்
கிளைகள் இல்லை என்றாலும்
இளநீர் தந்திடும் தென்னைமரம்

தோப்பாய் அதனை வளர்த்தாலே
தொகையாய் பணம்தரும் தென்னைமரம்

தென்னைக்கு தேரோட…

தேங்காய் பூஞ்சை:

  1. தேங்காய் பூஞ்சை பிடிக்காமல் இருக்க சல்பர் பயன்படுத்தலாம்.

  2. 1000 தேங்காய்க்கு 1/4கிலோ சல்பர் பயன்படுத்தலாம். அதிகமாக பயன்படுத்தினால் தேங்காய் மஞ்சள் நிறமாக மாறும்.

  3. சல்பர் வைக்கலாம்,ஆனால் வீட்டுச் சமையல்களுக்கு பயன்படுத்தவோ, சாப்பிடவே முடியாது.

  4. தேங்காய் பூஞ்சை பிடிக்காமல் இருப்பதற்கு உப்பில் போட்டு வைக்கலாம்.

  5. இரண்டு அல்லது மூன்று நாள்கள் மட்டும் பூஞ்சை பிடிக்காமல் இருக்கும்.

தென்னைக்கு வரும் பிரச்சனைகள்…

           தென்னைக்கு வரும் பிரச்சனைகள் அதிகம் இருந்தாலும் அதில் ஒன்றை மட்டும் குறித்து இங்கு காண்போம்.

தேங்காயின் வில்லன் ‘செம்பான் சிலந்தி !!!

         தென்னை மரங்களைத் தாக்கும் ஒரு வகையான சிலந்தி, ‘செம்பான் சிலந்தி’ ஆங்கிலத்தில் ‘ஈரியோஃபியட் மைட்’ (Eriophyid mite) என அழைக்கப்படும்(இதை ‘ஈரியோஃபைட் என்று பேச்சுவழக்கில் அழைப்பார்கள்) இந்தச் சிலந்தியால், சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக பாதிப்புக்குள்ளானது, தென்னைச் சாகுபடி. இந்தச் சிலந்தி தாக்கும் மரங்களின் காய்கள் சொறி சொறியாகவும், ஒழுங்கீனமான வடிவத்தில் சூம்பியும் இருக்கும். மட்டைகள் காய்ந்த நிலையில் இருக்கும். இந்தச் சிலந்தி குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் அதன் தாக்குதலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்து சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன், சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அவை இங்கே…

       “ஈரியோஃபியட் எனப்படும் செம்பான் சிலந்தியின் தாக்குதல். சில பருவங்களில் மட்டுமே இருக்கும். குறிப்பாக, மழைக்காலத்துக்கு முன்பாக இதன் தாக்குதல் இருக்கும். இது காய்களை மட்டுமே தாக்கும். இதன் தாக்குதலுக்குள்ளான தேங்காய் மட்டையை எடுத்து, ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு வெட்டிப் பார்த்தால் உள்ளே ஆயிரக்கணக்கான பூச்சிகள் இருக்கும். இவை அளவில் மிகச்சிறியவை என்பதால் கண்ணுக்குத் தெரியாது. கோடை மழைக்கு முன்பாக ஏப்ரல்மே மாதங்கள், பருவமழை தொடங்குவதற்கு முன்பாக செப்டம்பர்அக்டோபர் மாதங்கள், குளிர்காலம் முடியும் டிசம்பர்ஜனவரி ஆகிய மாதங்களில் இச்சிலந்திகளின் தாக்குதல் இருக்கும்.

       இது 1960-ம் ஆண்டில் பிரேசிலிருந்து உலகமெங்கும் பரவியிருக்கிறது. கேரளா மாநிலம், எர்ணாகுளம் வழியாக 1995-ம் ஆண்டு, இது தமிழ்நாட்டுக்கு வந்தது. ஆனால், இதன் வீரியத்தை நாம் உணர ஆரம்பித்தது, 1998-ம் ஆண்டில்தான். அப்போது பல்லாயிரக்கணக்கான தென்னைகள் இதனால் பாதிக்கப்பட்டன. இதன் பாதிப்பிலிருந்து முழுமையாகத் தப்பிக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

       இது அனைத்துத் தென்னை ரகங்களையும் தாக்குகிறது. செம்பான் சிலந்தி தாக்காத தென்னை ரகம், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதை அழிக்கும் ஒரே இயற்கைத் தீர்வு, மழை மட்டும்தான். மழைக்காலங்களில் இந்தப் பூச்சிகள் சுத்தமாகத் துடைத்தெறியப்பட்டுவிடும்.

      வெயில் காலத்தில் மீண்டும் தனது வேலையைக் காட்டத் தொடங்கும். இதுவொரு முடிவில்லாத ஒட்டம். வெயில் காலத்தில் மழை வருவதுபோல, மேகமூட்டத்துடன் காணப்படும் சூழ்நிலைதான் இப்பூச்சிகளுக்கு வசந்த காலம். அதுபோன்ற சூழலில் இவை பல்கிப் பெருகும். இதற்கான உணவு தேங்காய் மட்டைகளில் உள்ள சாறுதான்.

      இந்தப் பூச்சிகள், தென்னையின் பூக்களில் முட்டை இடும். கருவுறாத பூக்களில் இவை முட்டைகளை இடுவதில்லை. கருவுற்ற பூக்களில் மட்டுமே முட்டைகளை இடுகின்றன. இதன் புழுப் பருவம், பூச்சிப் பருவம் இரண்டுமே பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. தென்னையில் நெல்லிக்காய் அளவுக்குக் காய் உருவானதிலிருந்து அது முற்றும் வரை ஆயிரக்கணக்கான பூச்சிகள், மட்டையிலிருந்து சாற்றை உறிஞ்சிக்கொண்டே இருப்பதால், சத்துகள் குறைந்து, மட்டை சூம்பிப்போகிறது. இதற்கு ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதால் எந்தப் பலனும் இல்லை. வேப்பெண்ணெய், பூண்டுக் கரைசல் தெளிப்பதன் மூலம் இதன் பாதிப்பிலிருந்து 60 சதவிகிதம் தப்பிக்கலாம்.

       தொடர்ச்சியான மழை மட்டுமே முழுமையான தீர்வு. வேப்பெண்ணெயில் உள்ள ‘ அசாடிராக்டின்’ என்ற வேதிப்பொருள், மட்டையில் ஊடுருவித் தங்கிவிடும். அதன் பிறகு, வேப்பெண்ணெய் கலந்த சாற்றை உறிஞ்சும்போது, பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். பூச்சிகளின் இனப்பெருக்கமும் தடைப்படும். மட்டையிலுள்ள சாற்றில் வேப்பெண்ணெய் வாடை இருப்பதால், உணவை எடுக்காமல் பட்டினி கிடக்கும். சில பூச்சிகள் இறந்துபோகும் அல்லது வேறு இடத்துக்குப் பறந்துவிடும். வேப்பெண்ணெய்க் கரைசல் தெளிப்பது மட்டுமே முழுமையான தீர்வல்ல. இதன் மூலம், பத்துக்கு ஆறு காய்களை மட்டுமே காப்பாற்ற முடியும்.

       தற்போது வறட்சியான காலகட்டம் என்பதால், கோடை மழைக்கு முந்தைய காலத்தில் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். மண்ணின் ஈரப்பதம் குறைந்து வறட்சியாக இருக்கும் சமயத்தில், இந்தப் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். வேப்பெண்ணெய், பூண்டுக் கரைசல் மட்டுமல்லாமல், ஒருங்கிணைந்த மேலாண்மையைக் கடைப்பிடிப்பதன் மூலம், இதைக் கட்டுப்படுத்தலாம். இந்தச் பூச்சிகள் காற்றில்தான் அதிகம் பரவும். ஒவ்வொரு முறையும் மரத்தில் காய் பறிக்கும்போது, மரத்தை நன்றாகக் கலைத்து விட வேண்டும். காய்ந்துபோன மட்டைகள் இருந்தால் அவற்றை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மட்டைகள் நெருக்கமாக இருந்தால் காற்றோட்டம் இருக்காது. அதனால், மட்டைகளைக் கழித்து, மரத்தில் காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். தோப்புகளில் கண்ட இடங்களில் மட்டைகளைப் போட்டு வைக்கக்கூடாது.

      மூடாக்கு அமைத்தது போக மீதியுள்ள மட்டைக் கழிவுகளை மொத்தமாக ஒரிடத்தில் குவித்து வைத்துவிட வேண்டும். ஒரு தென்னைக்கு ஒரு நாளைக்குத் தேவையான 80 லிட்டர் முதல் 100 லிட்டர் தண்ணீரை முறையாகக் கொடுத்து மண்ணை எப்போதும் ஈரப்பதமாக வைத்துக்கொண்டால் இதன் தாக்குதலைத் தவிர்க்கலாம்.

     முறையாகப் பாசனம் செய்யும் தோப்புகளில் இந்தப் பூச்சிகளின் பாதிப்பு அதிகம் இருக்காது. மழையை நம்பி இருக்கக்கூடிய தோப்புகளில்தான் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும் . தண்ணீர் வசதி குறைவாக இருக்கும் தென்னை விவசாயிகள், உரித்த மட்டைகளைத் தென்னை மரங்களைச் சுற்றி மூடாக்காக அடுக்கி வைத்துப் பாசனம் செய்யலாம். இப்படிச் செய்வாதல், தண்ணீரைக் குறைவாகக் கொடுத்தாலும் உடனடியாக ஆவியாகாமல் மண்ணில் ஈரப்பதம் காக்கப்படும்.

       உச்சி வெயில் நேரத்தில் தென்னை மரத்தின் மட்டையின் நிழல் படும் தூரம் வரை சணப்பு, தட்டைப்பயறு போன்ற தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்தக்கூடிய வேர் முடிச்சுப் பயிர்களை வளர்க்க வேண்டும். அதோடு, முறையாகத் தழை, மணி, சாம்பல் சத்துகளையும் கொடுத்து வர வேண்டும். இத்தகைய முறைகளைக் கடைப்பிடித்தால், இந்தப் பூச்சிகளின் தாக்குதல் அதிகம் இருக்காது” என்ற செந்தூர்குமரன் நிறைவாக,

       “பல விவசாயிகள் முறையாகத் தென்னைக்கு உரம் கொடுப்பதேயில்லை. பசுந்தாள் உரப்பயிர்களை வளர்த்துவிட்டாலேகூட, போதுமான தழைச்சத்து மரத்துக்குக் கிடைத்துவிடும். தென்னைந்தோப்பில், தழைச்சத்தை நிலைநிறுத்தும் பயிர்களை வளர்க்கும்போது, போதுமான சத்துகள் தென்னைக்குக் கிடைத்துவிடுவதால், செம்பான் சிலந்தியின் இனப்பெருக்கத்தன்மை பாதிக்கப்படுகிறது. மேலே சொன்னபடி ஒருங்கிணைந்த முறைகளைக் கடைப்பிடித்தால் இவற்றின் தாக்குதலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்” என்றார்.

மேல்மட்டை முதல் நடுமட்டை வரை கவனம்

      செம்பான் சிலந்தி, 200 முதல் 250 மைக்ரான் நீளமும், 20 முதல் 30 மைக்ரான் அகலமும் உடையது. நான்கு கால்களை உடையது. இந்தப் பூச்சியின் ஆயுள்காலம் 7 முதல் 10 நாள்கள். இது, மிகவும் குறைந்த காலமே வாழக்கூடிய பூச்சி. ஆனால், இதன் ஆயுள் முடிவதற்குள் பல்லாயிரக்கணக்கான பூச்சிகளை உற்பத்தி செய்துவிடும். லட்சக்கணக்கான பூச்சிகள் ஒரு மட்டையில் அமர்ந்து சாற்றை உறிஞ்சும்போது, மட்டை சுருங்கி, காய்ந்து விடுகிறது. இந்தப் பூச்சி, அடிமட்டைக்கு வராது. மேல்மட்டையிலிருந்து நடுமட்டை வரைக்கும்தான் இவற்றின் நடமாட்டம் இருக்கும்.

      தென்னை, பாலை விட்ட நாளிலிருந்து, முழுமையாக ஒரு காய் உருவாவதற்கு 9 முதல் 12 மாதங்கள் ஆகும். 40 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்கிறோம். ஆனால், அந்தக் காய்கள் உருவாக 9 மாதங்கள் ஆகும். தென்னை மாதம் ஒரு பாலை வீதம் ஆண்டுக்கு 12 பாலைகள் விடும். இந்தப் பூச்சிகளின் தாக்குதல், கருவுற்ற பூக்கள் முதல் காய் உருவான இரண்டாவது அல்லது மூன்றாவது மாதம் வரை இருக்கும். இது அமர்ந்து சாற்றை உறிஞ்சும் பகுதியைத் தவிர, அந்தக் காயின் மற்ற பகுதிகள் விரிந்துகொண்டே வரும். அதனால், காய் ஒழுங்கில்லாத வடிவத்தை அடையும். அதன் பிறகு, காய் விரிவடைவது தடைப்படும். உள்ளே உள்ள பருப்பு தரமற்றதாகிவிடும்.

வேப்பெண்ணெய், பூண்டுக் கரைசல்

     வேப்பெண்ணெய் 25 மில்லி, பூண்டு 25 கிராம், காதிசோப் 5 கிராம் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். வேப்பெண்ணெயில் காதிசோப்பைக் கலந்துகொண்ட பிறகு, அரைத்த பூண்டைக் கொஞ்சம் கொஞ்சமாக வேப்பெண்ணெய்க் கரைசலில் இட்டுக் கரைக்க வேண்டும். பத்து லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி கரைசல் என்ற அளவில் கலந்து இளம் பூக்கள் நன்றாக நனையுமாறு தெளிக்க வேண்டும்.

       தமிழ்நாடு வேளாண் பல்கழைக்கழகம், பயோசைட்’ என்ற வேப்பெண்ணெய் சார்ந்த ஒரு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதைக் தென்னையின் வேர்களில் கட்டியும் ‘ஈரியோஃபியட்’ தாக்குதலை ஒரளவு குறைக்க முடியும்.

உரித்த மட்டைகளை அப்படியே பயன்படுத்தகூடாது

     தேங்காய் உரித்தவுடன் சில இடங்களில் பச்சை அல்லது காய்ந்த மட்டைகளை அப்படியே தென்னையைச் சுற்றிக் கவிழ்த்து வைக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால், இது தவறான செயல் என்று செல்லும் செந்தூர்குமரன், “தேங்காய் உரித்த மட்டைகளில் ‘ லிக்னின்’ என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இந்த வேதிப்பொருள், மண்ணில் உள்ள சத்துகளைத் தண்ணீரில் கரைக்கும் திசுக்களின் செயல்பாட்டை முடக்குகிறது. இதனால் மரத்துக்குப் போதுமான சத்துகள் கிடைப்பது, தடுக்கப்படும். அதனால், மட்டைகளை உரித்து ஐந்து மாதங்கள் வரை தண்ணீரில் நனைத்து வைத்தால், கடுங்காபி’ நிறத்தில் ஒரு திரவம் வடியும். அதுதான் லிக்னின். இந்த லிக்னினை வடித்த பிறகே மட்டைகளை மரத்தைச் சுற்றி அடுக்கி வைக்க வேண்டும்.

     தென்னை மரத்தின் நிழல்படும் தூரம் வரை மண், வெயிலில் தெரியுமாறு வைத்திருக்கக்கூடாது. தென்னை ஒலைகள், மட்டைகள் போதுமான அளவு இல்லாத பட்சத்தில் தோட்டத்திலுள்ள காய்ந்த புற்கள், செடிகள் போன்றவற்றின் மூலமாக மூடாக்கு அமைக்கலாம். தென்னையைப் பொறுத்தவரை நிலத்தில் எப்போதும் ஈரப்பதம் இருப்பது அவசியம்” என்றார்.

பூச்சிவிரட்டி தெளிப்போர் கவனத்துக்கு…

      செம்பான் சிலந்தியைத் தடுக்க வேப்பெண்ணெய்க் கரைசல் தெளிக்கும் விவசாயிகள், இதன் தாக்குதலால் காய்ந்து போன மட்டைகளில் தெளிப்பதைவிட, புதிதாக உருவாகியுள்ள பாலைகள் மற்றும் நெல்லிக்காய் அளவுக்குப் பிஞ்சுகள் உள்ள பாலைகள் ஆகியவை நன்றாக நனையுமாறு தெளிக்க வேண்டும். வழக்கமாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது கடுமையான வறட்சி நிலவும் அதே நேரத்தில் மேகமூட்டமும் நிலவுகிறது. இதுபோன்ற சூழலால் இதன் தாக்குதல் பரவலாக இருக்கிறது. இது பருவகாலப் பூச்சி என்றாலும், சில இடங்களில் ஆண்டு முழுவதுமே இதன் தாக்குதல் இருக்கிறது.

      இதை ரசாயன பூச்சிக்கொல்லிகளால் கட்டுப்படுத்த முடியாது. ரசாயன பூச்சிக்கொல்லி அடித்த ஒன்றரை மணி நேரத்தில் அது ஆகியாகிவிடும். இந்தப் பூச்சிகளால் ஆறு மணி நேரம் வரை உணவின்றி இருக்க முடியும். எனவே, ரசாயனப் பூச்சிக்கொல்லி தெளித்தவுடன், இந்த பூச்சிக்கள் உண்பதை நிறுத்தி, பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் குறையும் வரை அமைதியாக இருக்கும். அதே நேரம், வேப்பெண்ணெய்க் கரைசலைத் தெளிக்கும்போது, அது மட்டைக்குள் இறங்கி, சாறுடன் கலந்துவிடும். அதனால், பூச்சிகள் எவ்வளவு நேரம் கழித்து உணவெடுத்தாலும், வேப்பெண்ணெய் காரணமாக, ஒவ்வாமை ஏற்பட்டு, உண்பதை நிறுத்திவிடும்.

நன்றி : முனைவர்.செந்தூர்குமரன்

தொடர்புக்கு: முனைவர்.செந்தூர்குமரன், பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம். தொலைபேசி: 04577 264288

பயன்தரும் தென்னை மரத்தாலே
பலவகை நன்மைகள் இருப்பதனால்
வீட்டில் தென்னைமரம் வளர்ப்போம்
வேண்டிய பயன்களை நாம்அடைவோம்

                                                                                                                                         பாவலர். பாஸ்கரன்

Exit mobile version