Site icon Vivasayam | விவசாயம்

செக்கு

      செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்க உதவும் ஒரு கருவி ஆகும், கிராமங்களில் சமையல் எண்ணெய் எடுக்க பயன்படுத்துகின்றனர். செக்கானது மரத்தாலோ கல்லாலோ செய்யப்பட்டிருக்கும். மாடு முதலான வலுவான விலங்குகள் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆயினும் தற்போது எரிபொருள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் செக்குகள் பயன்பாட்டில் உள்ளன.

       தென் இந்தியா, குளிர்முறை செக்கு எண்ணெய் பிரித்தெடுப்பதில் பெயர் பெற்றது.

செக்கிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் முறை

      எருதுகளின் மூலம் மரத்தாலான பிழிப்பானை சுற்றச் செய்து விதைகளிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இதில் நீளமான மரச்செக்கு மருத்துவகுணம் வாய்ந்த வாகை மரத்தில் செய்யப்படுகிறது. அந்த மரச்செக்கில் மாடுகளை பூட்டி, மர உரலை சுற்றுவதன் மூலம், எண்ணெய் தயாரிக்கப்பட்டது. இது ஒரு எளிமையான முறை. இம்முறையில் விதைகளிலிருந்து வெப்பம் வெளியாவதோ அல்லது வெளிப்புற வெப்பம் பயன்படுத்தப்படுவதோ இல்லை. எண்ணெய் பிரித்தெடுத்த பின் மீதம் கிடைக்கும் புண்ணாக்கு கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.

செக்கு எண்ணெய்யின் நன்மைகள்

  1. மாடுகளைப் பூட்டி செக்கிழுத்தார்கள், தற்பொழுது இயந்திரம் செய்வதால் வெப்பம் அதிகமாகிறது. ஆனால் மரச்செக்கானது வெப்பத்தை உட்கொள்வதால் தாதுசத்துக்கள் வெப்பத்தால் அழிக்கப்படுவதில்லை.
  2. நவீன முறையில் விதைகள் அதிக வெப்பத்தால் அழுத்தப்பட்டு அதிலுள்ள கொழகொழப்புத் தன்மை அகற்றப்பட்டு சுத்திகரிக்க அசிட்டிக் அமிலம், காஸ்டிக் சோடா அடர் கந்தக அமிலம் மற்றும் பிளீச்சிங் பவுடர் போன்றவை சேர்க்கப்படுகிறது. சில சமயங்களில் இருமுறை சுத்திகரிக்கப்படுகையில் எண்ணெயிலுள்ள கொலஸ்ட்ராலும் நீக்கப்படுகின்றது. இதனால் மொத்த சத்துக்களும் நீக்கப்பட்டு திரவ பாராபின் மெழுகு சேர்க்கப்படுவதால் குறைவான விலையில் விற்கப்படுகிறது.
  3. மரச்செக்கு எண்ணெய்யில் லாரிக் அமிலம் தாய்ப் பாலில் உள்ள அளவிற்கு இருப்பதால் புண்களை குணப்படுத்தும்.
  4. மரச்செக்கு தேங்காய் எண்ணெயில் நடுத்தர கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதால் கல்லீரல் நோய்களை தடுக்கும் ஆற்றலுடையது.
  5. குறைந்த வெப்பநிலையில் எண்ணெய் பிரித்தெடுக்கப் படுகையில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அழிக்கப்படாமல் இருப்பதால் இதயத்திற்கு பாதுகாப்பினை கொடுக்கும்.
  6. செக்கெண்ணெயில் குறிப்பாக நல்லெண்ணெயில் நியாசின் அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவினை சீராக்கும்.
  7. நவீன முறையில் தயாராகும் எண்ணெயில் சேர்க்கப்படும் பதப்படுத்தும் மற்றும் நீண்ட நாட்கள் சேமித்து வைக்க சேர்க்கப்படும் இரசாயனங்கள் இதில் கலக்கப்படவில்லை.
  8. நல்லெண்ணெயில் பைட்டோஸ்டிரால் மற்றும் வைட்டமின் இ பாலிபினால்கள் செக்கிலிருந்து பெறப்படும்பொது கிடைக்கும்.
  9. மின்சாரம் அல்லது எரிபொருள் கொண்டு எண்ணெய் பிரித்தெடுக்கும்போது எண்ணெய் அதிகமாக சூடேறுகிறது. இதனால் எண்ணெயில் நல்ல கொழுப்பு மற்றும் மருத்துவ குணங்கள் குறைகிறது.எனவே மரச்செக்கு மூலம் எண்ணெய் பெறுவது உடலுக்கு நல்லது.

    ஊருக்கு ஊர் ஒரு மரச்செக்கு அமைந்திருப்பது சாலச் சிறந்தது.

Exit mobile version