Site icon Vivasayam | விவசாயம்

மானாவாரி விவசாய இயக்கம்

காலச்சுழற்சி மாற்றத்தில் மறுக்கப்பட்ட சிறுதானியங்கள் சார்ந்த சிந்தனையும், தேவையும் இன்று அனைத்து மக்கள் விருப்பத்திற்கும் ஆளாகியுள்ளது. குறிப்பாக மானாவாரி பயிர்கள் என்று சொல்லப்படும் சிறுதானியங்கள் ஊட்டச்சத்துக்கள் மிகுந்ததாகவும் சாகுபடிக்கு தண்ணீர் தேவை குறைவானதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை கவனத்தில் கொண்டு அரசு மானாவாரி விவசாயிகளுக்கு உதவும் வகையில் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மதுரை உட்பட 25 மாவட்டங்களில் மானாவாரி விவசாயத்தில் தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நான்காண்டுகளுக்கு 802 கோடி ரூபாயில் நீடித்த மானாவாரி விவசாய இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் 1000 எக்டேர் மானாவாரி சாகுபடி நிலங்கள் ஒன்று அல்லது இரண்டு கிராம ஊராட்சிகளிலிருந்து தேர்வு செய்யப்படும். முதலாண்டில் 200 தொகுப்புகளும், அடுத்த இரு ஆண்டில் 400 தொகுப்புகளுமாக பணிகள் நடக்கும்.

நடப்பாண்டு 25 மாவட்டங்களில் 200 தொகுப்புகள் உருவாக்கப்பட்டு தொகுப்பு மேம்பாட்டு குழுக்கள், வட்டார குழுக்கள், விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேவையான மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி பயிர் மேலாண்மை பணிகளை தொகுப்பு மேம்பாட்டு குழு வழி நடத்தி செல்லும்.

நடப்பாண்டு இத்திட்டத்தில் ஏக்கருக்கு 500 ரூபாய் வீதம் 5 லட்சம் ஏக்கருக்கு உழவு மானியம் வழங்கப்படும். தானியம் மற்றும் சிறுதானிய பயிர்கள் 2.15 லட்சம் ஏக்கரிலும், பயறு வகைகள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 500 ஏக்கரிலும் சாகுபடி மேற்கொள்ளப்படும். இதற்காக விதை மற்றும் உயிர் உரங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

மேலும் மானாவாரி தொகுப்பில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய பயறு உடைக்கும் இயந்திரங்கள், சிறுதானிய சுத்திகரிப்பு இயந்திரங்கள் அரசு நிதியுதவியுடன் வழங்கப்படும்.

வேலை வாய்ப்பில்லாத கிராம இளைஞர்களை கொண்டு இயந்திர வாடகை மையம் 80 சதவீத மானியத்தில் அமைத்து கொடுக்கப்படும். கால்நடை பராமரிப்பிற்காக ஊட்டச்சத்து கலவை விநியோகம் மற்றும் பால் உற்பத்தி உயர்வு பணிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும்.

மாநில அளவில் முதன்மை பயிற்சியாளர் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஐந்து பேர் வீதம் 125 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். முதற்கட்டமாக எட்டு மாவட்டங்களை சேர்ந்த வேளாண், வேளாண் பொறியியல் போன்ற துறைகளை சேர்ந்தவர்களுக்கு பயிற்சியளிக்கப்படும்.

இத்திட்டம் குறித்து மேலும் விவரங்களை பகுதி சார்ந்த வேளாண் உதவி இயக்குனர்களிடம் பெறலாம்.

மக்களாகிய நாமும் இறக்குமதி செய்யப்படும் ஓட்ஸை தவிர்த்து குதிரைவாலி, தினை, சாமை, கேழ்வரகு, வரகு போன்ற தானியங்களை பயன்படுத்தி உள்ளூர் உழவர்களின் வாழ்வை உயர்த்துவோம்.

தொடர்புக்கு: உங்கள் மாவட்ட/ வட்டார வேளாண்மைத் துறை மையத்தை அணுகவும்.

Exit mobile version