Site icon Vivasayam | விவசாயம்

விவசாய நூல் – முதல் அதிகாரம்

முகவுரை.

வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும்

ஒதுவா ரெல்லாரு முழுவார் தந் தலைக்கடைக்கே

கோதைவேன் மன்னவர்தங் குடைவளமுங் கொழுவளமே

ஆதலால் இவர்பெருமை யார்உரைக்க வல்லாரே. (கம்பர்)

    கிருஷி(விவசாயம்) என்கிற பதத்திற்குப் பூமியைப் பண்படுத்திப் பயிரிடுதலென்பதே சரியான பொருள். ஆயினும், சாதாரணமாய் அப்பதம் பிராணி சம்பந்தமாயும், தாவர சம்பந்தமாயும், நிலத்திலிருந்து நேராகவோ வேறு எவ்விதமாகவோ நாம் அடையக்கூடிய பொருள்களை உண்டாக்குவதற்கு அவசியமான சாதனங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதாகவே வழங்கப்படுகிறது. நிலத்திலே வளரும் பயிர் வகைகளும் அப்பயிர்களை உண்டு ஜீவிக்கின்ற பிராணிகளும் நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, உபயோகப்படுத்தும் சாயப்பொருள்கள் இன்னும் பிரயோஜன முள்ள அநேக இதர வஸ்துக்களையும் நமக்கு அளிக்கின்றன. பயிர்வகைகளிடமிருந்து அரிசி, கோதுமை, பருத்தி, அவுரி, சர்க்கரை முதலியவற்றை அடைகிறோம். நிலத்தைச் சாகுபடி செய்வதனால் அப்பயிர்கள் விசேஷமாக வளர்கின்றன. பிராணிகளிடமிருந்தோ, பால், வெண்ணெய், பட்டு, உரோமம், தோல் இவைகளைப் பெறுகிறோம்.

    ஆகவே விவசாயத்தில் நிலத்தை உழுது பயிரிடுதலும் வீட்டுப் பிராணிகளைப் பழக்கிப் பராமரிப்பதுமாகிய இரண்டு தொழிலும் அடங்கும். முதல் தொழிற்குப் பயிர்விவசாயம் (நிலசம்பந்தமான விவசாயம்) என்றும், இரண்டாவதற்குப் பிராணிவிவசாயம் (பிராணி சம்பந்தமான விவசாயம்) என்றும் பெயர். இவ்விரண்டும் சேர்ந்து அனுசரிக்கப்படும் தொழில் கலப்புவிவசாயம் (Mixed husbandry) என்று கூறப்படுகின்றது. அநேகமாய்க் கிருஷி என்பதற்குப் பதிலாகப் பயிரிடுதல், வேளாண்மை, விவசாயம், பண்ணை என்னும் பதங்கள் வழங்கப் படுகின்றன.

    விவசாயத்தொழில் மிகப் பூர்வீகமானது, மனிதர்கள் காட்டில் சஞ்சரித்து நிச்சயமில்லாமல் தானாய்க்கிடைத்த பழவர்க்கங்கள், கிழங்குவகைகள், வேட்டையிற் கிடைத்த பிராணிகள் ஆகிய இவற்றையே தங்கள் உணவிற்கு முழுவதும் சார்ந்திராவண்ணம், அவர்கள் கால்நடைகளை வசப்படுத்திப் பழக்கத் தொடங்கின காலம் முதற்கொண்டு விவசாயம் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. முன்கூறிய விவசாயத்தின் இரண்டு வகுப்பினில் பிராணிவிவசாயத்தை இவ்வாறு முதலில் நடத்தின பிறகுதான் மக்கள் பூமியைப் பயிரிடத் தொடங்கினார்கள். தற்காலத்தில் கூட காட்டுப் பிராந்தியங்களிலேயும் அவைகளுக்கு அருகிலுள்ள நாடுகளிலேயும் வசிக்கும் ஜாதியார்களில் பெரும்பாலர் விவசாயத்தொழிலை மிகக் குறைவாகவே செய்துவருகிறார்கள். ஆனால் மற்ற இடங்களிலோ பயிரிடப்படாத நிலம் வெகுவாய்க் கிடையாது. அவ்விடங்களில் சாதாரணப் புன்செய்ப் பயிர்கள், புல் அல்லது இதர விளைபொருள்களாவது பிராணிகளின் ஆகாரத்திற்கு உபயோகமாகும் பொருட்டே சோளத்தைப்போன்ற இதர தீனிப்பயிர்களாவது பயிரிடப்படுகின்றன.விவசாயத்தையே தொழிலாகவுடைய மனிதனுக்கு உழவன்,விவசாயி, வேளாளன் அல்லது குடியானவன் என்று பெயர். கூடியமட்டும் தன் நிலத்திற்குக் கெடுதியன்றியில் தன்னால் இயலும்வரை மிகக் குறைந்த பணச்செலவு செய்து மிதமான சரீரப் பிரயாசத்துடன் அந்நிலத்திலிருந்து எவ்வளவு அதிகமாய்ப் பிராணி அல்லது தாவர சம்பந்தமான மகசூலை அடையக்கூடுமோ அவ்வளவும் அடையவேண்டுவது ஒவ்வொரு குடியானவன் நோக்கமாயிருக்கவேண்டும். இவ்விஷயம் பின்னால் விவரிக்கப்படும். ஆயினும், பூமியிலிருந்து அறுவடை செய்யப்படும் ஒவ்வோர் பயிரும், அப்பூமியின் விளைபொருளை அதாவது புல், பூண்டு முதலியனவற்றைத் தின்று வளரும் ஒவ்வொரு பிராணியும், அந்நிலத்தின் சத்தைக் குறைக்கின்றன என்பது எவர்க்கும் எளிதில் தெரிந்தவிஷயமே.

    பயிர்விவசாயம், பயிர்வளர்ச்சிக்கு அனுகூலமான விஷயங்கள் அனைத்தையும் உள்ளிட்டிருக்கிறது. அதில் சாதாரண புன்செய்ப்பயிர் விவசாயத்தோடு தோட்டப்பயிர் விவசாயமும் அடங்கும். பின்கூறிய விவசாயம் எப்போதும் மிக லாபத்தைக் கொடுக்கத்தக்கது. பெரிய பட்டணங்களுக்குச் சமீபத்தில் காய்கறி பழவகைகளை விளையச்செய்வதினால் விசேஷ லாபமுண்டு. மற்றப் பயிர்நிலங்களோடு ஒப்பிடுங்காலத்தில், சொற்ப விஸ்தீரணமுள்ள நிலத்தில் மற்ற சாதாரணப் புன்செய்ப்பயிர் விஷயத்தில் செலுத்தக்கூடிய கவனத்தையும் செய்யக்கூடிய வேலையையும் காட்டிலும் அதிக கவனம் செலுத்தி வேலை செய்துண்டாக்கும் காய்கறி, பழம், புஷ்பங்கள்போன்ற பொருள்களை விளைவிக்குந் தொழில் தோட்டச்சாகுபடி என்று வழங்கிவருகிறது. தோட்டங்களில் கிடைக்கும் மகசூல் அதிக விலையுள்ளதாகையால் அப்பயிர்களுக்குக் கால்நடைகளாலோ அல்லது வேறுவிதமாகவோ தீங்கு நேரிடாமல் காப்பதற்கு வழக்கமாக வேலி போடப்படுகின்றன.

     பிராணிவிவசாயத்தில் மாடு, செம்மறியாடு, வெள்ளாடு, சிற்சில இடங்களில் குதிரை ஆகிய விவசாய சம்பந்தமான எல்லா மிருகங்களையும் வளர்த்து விருத்திசெய்தலும் அவைகளை மேற்பார்த்துப் பராமரித்தலுமாகிய தொழில்கள் அடங்கும். நாம் வைத்திருக்கும் பிராணிகளுக்குப் போதுமான உணவை மேய்ச்சல் நில மூலமாகவாவது சோளநாற்றைப்போன்ற தீனிப்பயிர் மூலமாகவாவது வைக்கோல் முதலிய காய்ந்த தாள்கள் மூலமாகவாவது உண்டாக்குவதற்கும் அந்தப் பிராணிகளை வியாதிக்குட்படாமல் செளக்கியமாய்க் காப்பாற்றுவதற்கும் அத்தியாவசியமான சகல தொழில்களும் கால்நடை வளர்ப்பில் அடங்கியுள்ளன. இத்துடன் விவசாயத்தின் ஒர் விசேஷப் பிரிவாகிய பால்விவசாயம் சம்பந்தப்பட்டது. அது பால்கொடுக்கும் பசுக்கள், எருமைகள் பலவற்றைப் பாதுகாத்தலையும், பால் பாலாக விலையாகாத இடங்களில், அப்பாலிலிருந்து வெண்ணெய், நெய் முதலிய பொருள்களை உண்டுபண்ணுதலையும் தழுவியது. பால்விவசாயம் பெரிய பட்டணங்களுக்குச் சமீபத்தில் கையாளப்பட்டால் பெரும் பாலும் தோட்டவிவசாயம் போலவே மிகுந்த லாபகரமானது. மற்ற இடங்களிலேயும் பாலிலிருந்து வெண்ணெயும், நெய்யும் உண்டாக்குவதனால் இலாபமுண்டு. பால்விவசாயம் செய்யும் இடங்களில் கோழிகளை வளர்த்துப் பாதுகாத்து அக்கோழிகளையும் முட்டைகளையும் விற்பது நலம்.

      விவசாயி தன்னுடைய சாதாரண விவசாயத்தோடு தன் உபயோகத்தின்பொருட்டும் லாபத்தின் பொருட்டும் விறகு முதலியவற்றிற்கு ஏதுவான மரங்களையும் நட்டுப் பயிராக்கலாம், அல்லது பட்டுப் புழுக்களுக்கு ஆகாரமான முசுக்கட்டைச்செடி முதலியனவற்றைப் பயிரிட்டுப் பட்டுப்பூச்சி வளர்க்கலாம், அல்லது ஈக்களுக்குத் தேனைக்கொடுக்கும் புஷ்பச்செடிகளை அபிவிர்த்திசெய்து தேனீக்களைப் பராமரிக்கலாம். ஆயினும் இங்கு குறித்த பட்டுக் விவசாயமும் தேனீவிவசாயமும் அவ்வவற்றிற்கு அனுகூலமான இடங்களில்தான் அனுஷ்டிக்கப்படவேண்டும்

Exit mobile version