Site icon Vivasayam | விவசாயம்

மிளகு சாகுபடி!

 

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டுலும் விருந்துண்ணலாம்” என்கிறது பழமொழி! ஆனால், எங்களது காரமான மிளகு ஐந்து இருந்தாலே போதும் அனைவரின் வீட்டிலும் உணவருந்தலாம்” என்கின்றனர் புதுக்கோட்டை மாவட்ட கறம்பக்குடி விவசாயிகள்.

மலைகளிலும், மலையடிவாரத்திலும் மட்டுமே மிளகுக் கொடி வளரக்கூடியது என்பதனை உடைத்து சமதரையிலும் மிளகுக் கொடியினை வளர்க்கலாம் என்பதனை நிரூபித்துக் காட்டியுள்ளனர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிராமத்தினர்.

சாதித்த கறம்பக்குடி விவசாயி

வாசனைப் பயிர் அரசன்’ என்றழைக்கப்படும் மிளகு கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு அடுத்தபடியாகத்தான், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுவும் கன்னியாகுமரி, நீலகரி, சேலம், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களில் மட்டுமே மிளகு உற்பத்தி செய்யப்படுகிறது. அத்தகைய மிளகுக் கொடிகள், அங்குள்ள சில்வர்ஒக் மரங்களில் ஏற்றிவிடப்பட்டு சாகுபடி செய்யப்படுகிறது. அதனையும் முறியடித்து மற்றவர்க்கு முன்மாதிரியாய் தென்னைகளில் மற்றும் பலா, மா, பூவரசுவில் ஏற்றிவிட்டு கொடிகளை வளர்த்துள்ளார் கறம்பக்குடி காமராஜ்.

மிளகு வளர்க்க மலையும்,மலையடிவாரமும் தேவையில்லை. நல்ல நிழலும், தண்ணீரும் இருந்தாலே போதும்!

ஆரம்பத்தில் தென்னையின் ஊடுபயிராக மாசிப்பச்சை, காட்டுமல்லி இவைகளைப் பயிரிட்டு வந்த நான், மேட்டுப்பாளையம் பரளியாறு சென்ற போது அங்கு வைத்திருந்த மிளகு நாற்றுக்களை வாங்கி வந்து பரிசோதனை முறையில் ஊடுபயிராக இறக்கிப் பார்த்தேன். பரிசோதனை முயற்சி பலனளித்தது.அதன் பின், ஒன்று மட்டும் தெளிவானது. 150-250 செ.மீ அளவிலான மழையும், அதிக அளவு ஈரப்பதமும், மிதமான தட்பவெப்ப நிலையும் இதன் வளர்ச்சிக்கு ஏற்றது. நல்ல வடிகால் வசதியுள்ள மக்கு நிறைந்த செம்பொறை மண் மிளகு சாகுபடிக்கு ஏற்றதாகும் என்பது தெரிந்திருந்தாலும் நான் பயிரிட்ட செடி எனக்கு சில விஷயங்களை கற்றுத் தந்தது. அது, மிளகு வளர்க்க மலையும், மலையடிவாரமும் தேவையில்லை. நல்ல நிழலும், தண்ணீரும் இருந்தாலே போதும் என்பது! சரி!! அதன் பின் எந்த மிளகுக்கொடிகளை பயிரிடலாம் என தேடியபோது, பன்னியூர்1, கரிமுண்டா, பன்னியூர்5 ஆகிய வகைகளே இங்கு செல்லுபடியாகும் எனவும் தெரிந்தது.

நான் வளர்க்கும் தென்னையின் இடையில் வளரும் பலா, கறிப்பலா, அயனிப்பலா, வேம்பு, மாஞ்சியம், மகோகனி, சந்தனம், வேங்கை, செம்மரம், பூவரசு,மகிழமரம், செண்பகம், மா, கொடம்புளி, சாதிக்காய், கறிமசால் பட்டை, சர்வ சுகந்தி, முள் சீத்தா, கறிவேப்பிலை, மஞ்சனத்தி ஆகிய மரங்கள் இருப்பினும் அதனிடையே மிளகைப் படர விட்டேன். நான் நினைத்தது போல் நடந்தது. இப்பொழுது எங்கள் மண் மிளகுதான் காரமான ஒன்று.” என தன்னுடைய வெற்றியின் முன்கதையை நம்முடன் பகிர்ந்து கொண்ட கறம்பக்குடி காமராஜ்உரம், பூச்சிக்கொல்லி, அறுவடை பற்றியும் சொல்லிக்கொடுக்கலானார்.

மிளகு சாகுபடி செய்வது எப்படி?

மிளகு, கொடி மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் நீளமுள்ள மிளகுக் கொடியினை தாய்ச் செடியிலிருந்து எடுத்து 2 அல்லது 3 கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் நடவு செய்யவும். வேர் பிடித்த இந்த துண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம். நல்ல நிழல் இருக்கும், வளமுள்ள தண்ணீர் தேங்காமல் இருக்கும், பகுதிகளில் 1 மீட்டர் அகலம் 5.6 மீட்டர் நீளமும் கொண்ட உயரப்பாத்திகள் அமைக்கவேண்டும். மண்ணை நன்கு கொத்தி தேவையான தொழு உரம், மணல், செம்மண் கலந்து பாத்திகளைச் சீராக்கவேண்டும். விரும்பத்தக்க நல்ல குணங்களைக் கொண்ட தாய்க் கொடிகளின் அடிப்பகுதியில் வளரும் ஓடு கொடிகளை தண்டுத் துண்டுகளாக தேர்ந்தெடுக்கவேண்டும். இவற்றின் பக்கத்தில் ஒரு குச்சியை நட்டு டு கொடிகளை மண்ணில் வேர்விடாமல் குச்சியில் சுருளுமாறு கட்டிவைக்கவேண்டும். இளசான ஓடு கொடிகளையும், முதிர்ந்த ஓடு கொடிகளையும் தவிர்க்கவேண்டும். பின்னர் ஓடு கொடியிலிருந்து 23 கணுக்களைக் கொண்ட தண்டுத் துண்டுகளை சீராக கத்தியால் வெட்டி தயாரிக்க வேண்டும். இத்தண்டுத் துண்டுகளில் இலைக் காம்பை மட்டும் விட்டு இலைப்பரப்பை நீக்கவேண்டும். அதன்பின் பாத்திகளிலோ அல்லது பாலித்தீன் பைகளிலோ நடவேண்டும். ஊடுபயிராக மிளகை சாகுபடி செய்யும் போது பலா, கமுகு, தென்னை போன்ற பலன் தரும் மரங்களை படர் மரங்களாகப் பயன்படுத்தலாம்.

செடிகள் வளர ஆரம்பித்தவுடன் அவை படரும் மரங்களில் கயிறுகளால் அல்லது தென்னை ஒலையினால் கட்டிப் பாதுகாக்கவேண்டும். எந்த அளவுக்கு தோட்டத்தில் குளிர்ச்சித் தன்மையை ஏற்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு விளைச்சலும் அதிகமாக இருக்கும். மிளகு நடவு செய்து 3வது ஆண்டிலிருந்தே செடிக்கு சுமார் 100 கிராம் வீதம் மிளகு விளையத்தொடங்கிவிடும். சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அரை கிலோவை எட்டும். ஏக்கருக்கு சுமார் 900 செடிகள் வளர்க்கலாம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறை அறுவடை செய்தால் சுமார் 450 கிலோ மிளகு மகசூல் கிடைக்கும். தற்போது கிலோ ரூ 900க்கு விற்கிறோம். மிளகுக்காக தனியாக ரசாயன உரம் இடுவதில்லை. 6 மாதத்துக்கு ஒரு முறை ஒரு செடிக்கு சுமார் 6 கிலோ தொழு உரம் இடுவோம். இலைகள் உதிர்ந்து அதுவும் இயற்கை உரமாகிறது. காய்க்கும் தருணத்தில் கடலைப் புண்ணாக்கு இடுவோம். காய்களில் பூச்சிகள் இருந்தாலோ, காய்கள் திரட்சியாக இல்லாதிருந்தாலோ பஞ்சகவ்யம் தெளிக்கிறோம். மிளகுக் கொத்தில் சில பழங்கள் சிவப்பு நிறத்தை அடைந்தவுடன் முழுக் கொத்தை கையால் பறிக்க வேண்டும். பழங்களைப் பிரித்தெடுத்து, சுடுநீரில் (80 செ.) ஒரு நிமிடத்திற்கு முக்கி எடுத்து 7 முதல் 10 நாட்கள் வெயிலில் உலர்ந்த வேண்டும். அதன் பின் இதற்கான சந்தையாக கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ஊர்கள் இருந்தாலும் இங்கு வந்து நேரடியாகவே வாங்கிச்செல்கின்றனர் வியாபாரிகள். அந்தளவிற்கு காரம் இது” என்றார் அவர்.

Exit mobile version