Site icon Vivasayam | விவசாயம்

பயிறு வகைப்பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்(Steps to improve production of pulses):

1.உயர் விளைச்சல் தரும் இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்களை தேர்ந்தெடுத்து பயிர் செய்வதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

2.அக மற்றும் புறத்தூய்மை கொண்ட சான்றிதழ் பெற்ற விதைகளை நடவு செய்ய வேண்டும்.

3.சரியான பட்டம், பட்டத்திற்கேற்ற இரகம் அல்லது வீரிய ஒட்டு இரகம், சரியான நடவு முறை மற்றும் பயிர் எண்ணிக்கை ஆகியவற்றை பராமரித்து விளைச்சலை அதிகரிக்கலாம்.

4.பயறு வகைப்பயிர்களை ஊடுபயிராகவோ, மானாவாரியாகவோ சாகுபடி செய்யாமல் இறவையில் தனிப்பயிராக பயிரிட்டு உற்பத்தியை அதிகரிக்கலாம்.

5.மானாவாரியில் சாகுபடி செய்யும்போது தகுந்த நீர் மேலாண்மை மேற்கொண்டு விளைச்சலை அதிகரிக்கலாம்.

6.தேவைக்கேற்றாற் போல பூச்சிக்கொல்லி விதை நேர்த்தி, பூசணக்கொல்லி விதை நேர்த்தி, முளைப்புத்திறன் தூண்டும் நேர்த்தி, வறட்சியை தாங்கும் நேர்த்தி மற்றும் உயிர் உரவிதை நேர்த்தி ஆகியவற்றை மேற்கொண்டு விதைத்து நல்ல பலனை பெறலாம்.

7.முறையான ஊடுசாகுபடி வேலைகளான உரநிர்வாகம், களைநிர்வாகம், நீர் நிர்வாகம் மற்றும் பூச்சி நோய்களுக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு மேற்கொள்வதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

8. பயறு வகைகள் பூக்கும் தருணத்தில் வளர்ச்சி ஊக்கிகளான ஜிப்ரலிக் அமிலம், நாப்தலின் அசிடிக் அமிலம் ஆகியவற்றை தெளித்து, பூத்தலை அதிகரித்து, காய்கள் தோன்றுவதை ஊக்குவிக்க வேண்டும்.

9.ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில் 2 சத DAP கரைசல் அல்லது யூரியா கரைசலை இழைவழி தெளித்து பற்றாக்குறையை போக்கி விளைச்சலை அதிகரிக்கலாம்.

10.சரியான சமயத்தில் அறுவடை செய்து, அறுவடைக்குப் பின் நேர்த்தி மேற்கொண்டு சேமிப்பின் போது ஏற்படும் இழப்பை குறைத்து உற்பத்தியை அதிகரிக்கலாம்.

Exit mobile version