Site icon Vivasayam | விவசாயம்

மீன் வளர்ப்பு

பொருளாதாரத்தில் வறுமைஎன்பது முதன்மை பங்காற்றுகிறது. இதற்கான மூல காரணமாக 1.வளமின்மை 2.வேலையின்மை 3.உற்பத்தியின்மை என்று மூன்று பிரிவுகளில் ஏற்படுகிறது. குறிப்பாக 80% விவசாயத்தை தொழிலாக கொண்ட இந்தியா போன்ற நாடு வறுமையிலிருப்பது என்பது பெரிய வருத்தத்திற்கும், வேதனைக்கும் மேலும் ஆய்வுக்கும் உரியது. இந்தியாவில் வளமின்மை என்று அறவே கூறமுடியாது.

அதே வேளையில் உணவு விளைச்சல் அதிகமாக விளைந்து இருந்தாலும் மக்களிடம் வேலைவாய்ப்பு இன்மையின் காரணமாக வாங்கும் சக்தி இல்லாமல் போகும். அதன் விளைவு உணவுப்பொருள் இருந்தும் வறுமை நீடிக்கும் கொடிய நிலை நிலவும்.இதனை தவிர்த்திட இயற்கை வளங்களை அழிப்பதற்கு மாற்றாக, அவற்றை முறையாக அளவோடு பயன்படுத்தி, உற்பத்தியையும், அதே வேளையில் உற்பத்தியானது மனித ஆற்றலைக் கொண்டு இருக்கும் படியாக பார்த்துக் கொள்ளலே அவசியம்.

அவ்வாறு உற்பத்தியாகும் பொருட்களும் உள்ளூர் மக்களின் உணவு தேவையை நிறைவு செய்யும் படியாக இருத்தல் வேண்டும். அதே வேளையில் நிலம் ,நீர், காற்று போன்றவற்றை மாசுபடுத்தாமலும், சுழற்சி முறையில் வளங்களை பயன்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக கல்கத்தா நிலவி வருகிறது.

கங்கை போன்ற பெரும் நதி கழிமுகப் பகுதியாக கல்கத்தா இருப்பதால் நீர்வளம் மிகுதியாக உள்ளது. இதனை தேக்கி இவற்றில் அதிகப்படியான மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து இந்திய முழுமைக்கும் மீன் குஞ்சுகளை விற்பனை செய்கிறது.

இதனால் வீணாக நீர் கடலில் கலப்பது தவிர்க்கப்படுவதோடு பல்லாயிரம் மக்களுக்கு வேலைவாய்ப்பையும், சுவை மிகுந்த புரத உணவான மீனையும் மக்களுக்கு வழங்குகிறது. கல்கத்தாவில் மீன் சாப்பிடாதவர்களே கிடையாது என்று கூறலாம். அந்தளவுக்கு மீன் உணவு அங்கு முதன்மை உணவாக கொள்ளப்படுகிறது.

தமிழகத்தைப் பொருத்த வரையில் கண்மாய், வாய்க்கால் முழுவதும் ஒரு காலத்தில் நாட்டு மீன்கள் துள்ளி குதித்து பானை பொறி என்று சொல்லக்கூடிய எளிய கருவி மூலம் பிடிக்கப்படும். கிராமந்தோறும் அயிரைமீன் குழம்பும், விறால் மீன் பொறிப்பும் படுஜோராக தயாராகும். ஆனால் இன்று நீர்நிலைகளில் வேதிகலப்பு என்பது அதிகமாகிவிட்டதால் மீன்வளம் பாதிக்கப்பட்டு விட்டது.

முதலாவதாக 1 ஏக்கரில் நீர்பாய்ச்சி நெல் விளையவைத்து கிடைக்கும் லாபத்தை விட பண்ணை குட்டை மீன் வளர்ப்பின் மூலம் பல மடங்கு லாபம் பெறலாம். நீர்செலவும் பெருமளவு குறைவேயாகும்.

இரண்டாவதாக நிலத்தின் வளம் என்பது தேவையற்ற ஒன்று.அதே வேளையில் தென்னந்தோப்பு போன்ற தோப்புகளுக்கு இடையே வாய்க்கால் போன்ற அமைப்புகளை உருவாக்கி மீன்குஞ்சு வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்புகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறது. A.M.மீன் குஞ்சுப் பண்ணை. இப்பண்ணையைச் சேர்ந்த V.H அகமது முகைதீன் மீன் பண்ணைக்கான தொழில் நுட்பம் பற்றி விளக்குகிறார்.

மீன் பண்ணைகளில் நீர் தேவை என்பது இருப்பினும் அவை அதிகமாக வீணடிக்கப்படுவதில்லை. இவை தரையில் அடியில் ஆழமாக செல்லாதவாறு கழிவுகள் கரிசல் மண்களை அடியில் போடுவதன் மூலம் அதிகப்படியான நீர் தரையின் அடியில் சென்று வீணாகுவது தவிர்க்கப்படுகிறது.

மீன் பண்ணைக்கான நீர் தேவை என்பது நெல், கரும்புச் சாகுபடியை கருத்தில் கொள்ளும் போது மிகக்குறைவு. தென்னந்தோப்புகளின் இடையில் நீண்ட குழி அமைத்து மீன் வளர்ப்பதால், தென்னை மரங்கள் செழிப்பாக இருக்கும். மீன் பண்ணையில் உள்ள மீன்களின் கழிவுகள் தென்னைக்கு நல்ல உரமாக மாறி தென்னை மரத்தை மேலும் செழிப்பாக்குகிறது.

குறிப்பாக 1 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் 4000 குஞ்சுகள் வரை வளர்க்கலாம். வளர்ப்பு மீன்களில் பல வகைகள் உள்ளன. சாதாரணமாக கெண்டை போன்ற வகைகள் 10 சதுர அடியில் 1 என்ற அளவில் வளர்க்க முடியும். ஆனால் பிரானா போன்ற உயர்ரக கலப்பு மீன்கள் 2 சதுர அடிக்கு 1 என்று வளர்க்கலாம். (தண்ணீர் சூடாகாமல் இருப்பதற்கு 5 அடி உயரம் இருக்க வேண்டும்.)

எங்களிடம் கண்ணாடிக் கெண்டை புல்லுகெண்டை, கட்லா, ரோகு, சிலேபி, பிராவி போன்ற அனைத்து வகை மீன் குஞ்சுகளும் கிடைக்கும். சிறிய அளவில் முதலீடு தொடங்கி கண்மாய்களை ஏலத்திற்கு எடுத்து மீன்வளர்ப்பில் ஈடுபடுவது வரை இத்தொழிலை விரிவுபடுத்திக் கொண்டே செல்லலாம். இதற்கான உணவு என்பது உணவுகழிவு, தீவனம், சாணி போன்ற எளிய பொருட்கள் மட்டுமே தேவைப்படும்.

ஒரு எளிய தொழில்முனைவோர் தமது நிலத்திலேயே 4000 குஞ்சை வளர்ப்பதாகக் கொண்டால் 6 மாதத்தில் அறுவடையில் 1000 குஞ்சுகள் நன்றாக வளர்ந்து விளைச்சலை தரும். 1000 மீனும் 1 கிலோ சராசரியாக இருக்கும் என்று வைத்துக்கொண்டால் 1000 * ரூ. 80= ரூ. 80,000/ விதைக்குஞ்சுகள் ரூ. 0.50லிருந்து ரூ.10 வரைக் விற்க்கப்படுகிறது.

1 உற்பத்தியில் சுமார் 25,000/ தீவனம் மற்றும் மருந்திற்காக செலவு செய்யப்படுகிறது. எனவே 6 மாதத்தில் ரூ.50,000/ நிகரலாபமாக 1 யூனிட்டில் கிடைக்கிறது. கவனமுடன் கூடிய வளர்ப்பு முறை மற்றும் முதலீடு இவற்றை கருத்தில் கொண்டு தொழிலை விரிவு செய்து கொள்ளலாம்.

Exit mobile version