Site icon Vivasayam | விவசாயம்

மாநில அளவிலான வேளாண் ஆராய்ச்சி மையங்கள்

தேசிய அளவில் புதுடில்லியிலுள்ள ஆராய்ச்சிமையத்தின் கீழ் நாடு முழுவதும் வேளாண் மற்றும் தோட்டக்கலை சம்மந்தமான ஆராய்ச்சி நிறுவனங்கள் பல சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. அதேபோல் தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் மாநில முழுவதும் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் வேளாண் வழிகாட்டிகளாக உள்ளன. இவைகள் விவசாயிகளுக்குப் பல வழிகளில் ஆலோசனைகள் கூறியும், நிருபணப்பாத்திகள் அமைத்தும் கண்காட்சிகள் நடத்தியும், செய்தித்தாள்களிலும், மற்றும் தொலைக்காட்சிகளில் ஆராய்ச்சி செய்திகளை பரப்பியும் விவசாயிகளுக்கு பலவழிகளில் உதவி செய்து வருகின்றன.

விவசாயிகள் அவைகளைப் பற்றித்தெரிந்து கொண்டால், அவைகளுடன் தொடர்பு கொண்டு பல முடிவுகளைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கும் நோக்கில் அக்ரி பிசினஸ்மாத இதழ் அந்நிறுவனங்களின் சிறப்புகளைப் பற்றியும் தொடர்பு கொள்ள வேண்டிய முறைகளையும் பற்றியும் மாதங்கள் தோறும் ஒரு நிறுவனத்தைப் பற்றி செய்தியினை வெளியிட உள்ளது.

ஐசிஏஆர் தேசிய திராட்சை ஆராய்ச்சி நிலையம் (ICAR National Reasearch Center for Grapes) இது மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனே அருகில் மஞ்சரி என்ற இடத்தில் புனே சோலாப்பூர் சாலையில் அமைந்துள்ளது. (புனே ரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ தொலைவு) இது 1997ம் ஆண்டு திராட்சை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அதனுடைய உற்பத்தியை பாதுகாப்பான முறையில் பெருக்கவும், அந்த உற்பத்தி நிலைத்து நிற்பதற்கான வழிமுறைகளை ஆராயும் நோக்கிலும் அந்தக் கருத்துகள் திராட்சை சாகுபடியில் பெயர் பெற்ற புனே மாவட்ட விவசாயிகளைச் சென்றடையும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டது.

திராட்சை உற்பத்தியோடு நிற்காமல் புதுப்புது அதிக விளைச்சல் தரக்கூடிய ரகங்களைக் கண்டறிந்து அவைகளிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் (ஒயின், ரெய்சின்ஸ், சாறு) செய்யும் செய்முறைகளை விவசாயிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் அறிமுகப்படுத்துகின்றது. அறுவடைக்குப்பின் செய்யும் உத்திகளில் சிறப்பான முறைகளில் ஆராய்ந்து விவசாயிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் 2050 வரையிலான தொலைநோக்குத் திட்டத்துடன் இந்த ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது.

அருகிலுள்ள திராட்சை விவசாயிகள் சங்கத்துடன் மிகுந்த தொடர்பு கொண்டு அடிக்கடி கருத்தரங்குகள், கண்காட்சிகள், விஞ்ஞானிகளின் செயல் விளக்கங்களை செய்துகாட்டும் முறைகளையும் கடைபிடித்து வருகிறது. வருடம் ஒருமுறை தேசிய திராட்சை நாள்நடத்தி மஹாராஷ்டிரா மாநில விவசாயிகளோடு நில்லாமல் அருகிலுள்ள ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு விவசாயிகளையும் வரவளைத்து 300 விதமான திராட்சைப் பொருட்கள் தயாரிப்பது, விதை உள்ள/ இல்லாத புதுப்புது இரகங்களை காண்பித்து, விளக்கி அறிமுகம் செய்தல், நுண்நீர்பாசன முறைகள், வளர்ச்சி ஊக்கிகளை இடுதல், பூச்சி, பூஞ்சான இரசாயன மருந்து உபயோகமுறைகளை அறவே நீக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை சிறப்பாக விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.

இதைத்தவிர விவசாயிகளின் சாகுபடி அறுவடைக்குப்பின்னான உத்திகள் விற்பனையில் ஏற்படும் சந்தேகங்களுக்கு சம்மந்தப்பட்ட விஞ்ஞானிகள் உற்பத்தி நிறுவனங்களை வரவழைத்து விளக்குகிறார்கள்.

2003-2004 லிருந்து ஏற்றுமதிக்கான உத்திகளை ஆராய்ந்து குறிப்பாக ஐரோப்பாவிற்கு அனுப்பும் சாப்பிடும் திராட்சைகளில் பூச்சிமருந்துகளே உபயோகிக்காத முறைகளை ஆராய்ந்து Pesdicides Residue Monitoring Programme (RMP) மூலம் அறிந்து ஏற்றுமதியை அதிகரிக்கும் வழிகளிலும் உதவுகின்றது. GRAPENZT என்ற வெப்சைட் நிறுவி உலக முழுவதும் திராட்சை பெருக்கத்திற்கான வழிமுறைகளையும் பரப்பி வருகிறது.

தொடர்புக்கு

ஐசிஏஆர் தேசிய திராட்சை ஆராய்ச்சி நிலையம், மஞ்சுரி பார்ம், சோலாப்பூர் ரோடு, பூனே, 412307, மகாராஷ்டிரா மாநிலம். தொலைபேசி எண் 02026956000

Email: director.nrcg@icar.gov.in

Exit mobile version