Site icon Vivasayam | விவசாயம்

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம்!

koli

”தமிழக அரசு நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ஆணையிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க ஆகும் செலவில் 25 சதவிகிதத் தொகையை அரசு மானியமாக வழங்குகிறது.

இதைத்தவிர நபார்டு வங்கியின் சார்பில் 25 சதவிகித மானியம் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவிகிதத் தொகை பயனாளிகள் தங்களின் சொந்தச் செலவிலோ வங்கிக் கடனாகவோ செலவிட வேண்டும். தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் நிதி அளவு ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும்.

 

இந்தத் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 25 சதவிகிதமும் இறுதியாக நபார்டு வங்கி மூலம் 25 சதவிகிதமும் மானியமாக வழங்கப்படும். ஒரு பயனாளிக்கு ரூ.45,750 வரை மானியம் வழங்கப்படுகிறது.

விவசாயிகள், தனிநபர், தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள் இம்மானியத்தை பெறத் தகுதியானவர்கள். நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பதாரர் பெயரிலோ அவரது குடும்ப உறுப்பினர் பெயரிலோ போதிய நிலம் இருக்க வேண்டும்.

கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கும் கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இவர்களிடம் பண்ணைகள் அமைக்கப் போதிய நிலம் இருக்க வேண்டும்.

ஏற்கெனவே கொட்டகை அமைத்த பயனாளிகள் புதிய கொட்டகை அமைத்துக் கொள்ளவும் கோழிப் பண்ணைகளை விரிவாக்கம் செய்து கொள்ள ஆர்வமும் உள்ள விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற வாய்ப்புகள் உள்ளன.

தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மாவட்டந்தோறும் செயல்படும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மையங்கள் மூலம் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். எனவே, தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றுடன் அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.”

Exit mobile version