Site icon Vivasayam | விவசாயம்

மயில் தொல்லைக்கு தீர்வு!

“இயற்கையாகவே திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மயில்கள் அதிக அளவில் இருக்கின்றன. குறிப்பாக விராலிமலைப் பகுதியில் மயில்கள் எண்ணிக்கை அதிகம்தான். மயில்கள் மட்டுமல்ல பல இடங்களில் குரங்குகளும் வயல்வெளிகளில் நடமாடி, விவசாயிகளின் பயிர்களுக்குச் சேதத்தை உண்டு பண்ணுகின்றன.

இந்தப் பறவைகள் மற்றும் விலங்குகளுக்குத் தேவையான உணவு, காடுகளிலேயே கிடைத்தால், அவையெல்லாம் வயல்வெளிகளுக்கு வரவில்லை. காடுகளில் வன விலங்குகளுக்கு உணவு இல்லாமல் போனதால் அவை உணவுக்காக விவசாய நிலங்களுக்கு வருகின்றன.

திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மயில்களை விரட்ட ஒலி எழுப்புவது, ஒலிநாடாக்களை வயலில் சுற்றி கட்டி வைப்பது ஆகியவற்றை கடைப்பிடிக்கிறார்கள். ஒலிநாடாக்களை காற்றில் அசையும்போது ஒலி எழுப்பும். இதற்கு மயில்கள் பயந்துக்கொண்டு வருவதில்லை சில பகுதிகளில் மீன் அமீனோ அமிலத்தை பயிர்களில் தெளித்துவிடுகிறார்கள். மீன் அமிலத்தின் வாசம் உள்ளவரை மயில்கள் வராது. வாசம் போய்விட்டால், மீண்டும் மயில்கள் வரத்தொடங்கும்.

இவை எல்லாம் தற்காலிக தீர்வுகள்தான். நிரந்தர தீர்வு வேண்டும் என்றால், ஊரிலிருக்கும் அனைத்து விவசாயிகளும் கூடி ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஊருக்குப் பொதுவான இடம், அருகில் உள்ள காடு போன்ற இடங்களில் தானியங்களை விதைத்து விட்டால், அவை விளைந்தவுடன் மயில்களுக்கு உணவாகும். கீழே சிந்தும் தானியங்கள் மீண்டும் முளைத்து மயில்களுக்கு உணவாகிக் கொண்டே இருக்கும்.

இதற்குப் பிறகு, ஊரிலிருக்கும் வயல்களில் பக்கம் மயில்கள் வராது. மறந்தும் கூட, மயில்கள் நடமாடும் பகுதிகளில், அவற்றைக் கொல்லும் விதமாக விஷங்களைத் தெளித்துவிடக்கூடாது. விலங்குகள், பறவைகள் போன்றவற்றை துன்புறுத்துவதும், வேட்டையாடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்”

Exit mobile version