Site icon Vivasayam | விவசாயம்

சிவனார் வேம்பு!

‘அன்னெரிஞ்சான் பூண்டு’ என்று கிராமங்களில் சொல்கிறார்கள். சிவப்பு நிறத் தண்டில், கருஞ்சிவப்பு நிற மலர்களையும் புல் போன்ற சிறிய இலைகளையும் கொண்டிருக்கும். நல்ல மழைவளம் இருந்தால் 6 அடி உயரம் வரை வளரும். மணற்பாங்கான இடங்களில் பெருமளவு வளர்ந்திருக்கும். குறிப்பாக, பனை மரங்கள் உள்ள இடத்தில் இச்செடியும் இருக்கும். தவிர, இது பனைத் தொழிலோடும் சம்பந்தப்பட்ட செடியாகும். பனையில் இருந்து கிடைக்கும் பதநீரைக் காய்ச்சுவதற்கு இச்செடியை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இதைப் பறித்த அன்றே கட்டாகக் கட்டி எரிக்க முடியும். அதனால், இதை ‘அன்று எரிந்தான் பூண்டு’ என்று அழைத்துள்ளனர். அது மருவி ‘அன்னெரிஞ்சான் பூண்டு’ ஆகிவிட்டது.

தமிழகத்தின் வறட்சி நிலங்களில் பனை-உடை-ஆடு என்னும் உயிர்ச்சூழல் நிலவியது. உயர்ந்த பனைமரம், அதற்குக் கீழ் குடை பரப்பி நின்ற உடைமரங்கள், அதன்கீழ் ஆடுவளர்ப்பு என இந்த உயிர்ச்சூழல் நிலவிய காலங்களில் ஆண்டின் 12 மாதங்களும் மக்களுக்கு பொருளாதாரப் பலன் கிடைத்தது. இந்தப் பனை, உடை, ஆடு எனும் அற்புதமான உயிர்ச்சூழல், வேலிக்கருவை மரங்களாலும் ரசாயன விவசாய முறையாலும் கெடுக்கப்பட்டது. இதனால், மண்ணின் வளம் குன்றி அரிய வகை சிவனார் வேம்பு உள்ளிட்ட மூலிகைகள் அருகி வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

சிவனார் வேம்பின் வேர்தான் மருத்துவத்தில் அதிகமாகப் பயன்படுகிறது. இது ‘ஒரு பருவத் தாவரம்’ என்பதால் வேரைச் சேகரிப்பதால் சூழல் பாதிப்புக் கிடையாது. இந்த வேரை சிறு துண்டுகளாக நறுக்கி நிழலில் காய வைத்து, ஒன்றிரண்டாகப் பொடி செய்து… நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி சொறி, சிரங்குகளின்மேல் பூசினால் சிறப்பான பலன் கிடைக்கும்.

சித்தமருத்துவ மருந்துக் கடைகளில், ‘சிவனார் வேம்புக் குழித் தைலம்’ மற்றும் ‘சிவனார் வேம்பு சூரணம்’ என்ற மருந்துகள் கிடைக்கும். இவற்றை உள் மருந்தாக எடுத்துக்கொண்டால், நாள்பட்ட முற்றிய தோல் நோய்கள் குணமாகும். இம்மருந்துகளால் வெண்புள்ளி, குஷ்ட நோய் தேமல்கள் ஆகியவை குணமானதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஆனால், இம்மருந்துகளைச் சித்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சித்த மருத்துவத்தின் படி, செரிமானக் கோளாறால் வயிற்றில் ஏற்படும் வாயுதான் அனைத்து நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது.”

Exit mobile version