Site icon Vivasayam | விவசாயம்

சிறுவாணி குறுக்கே அணை… அச்சத்தில் விவசாயிகள்!

தென் மாவட்டங்களுக்கு முல்லை பெரியாறு… டெல்டா மாவட்டங்களுக்குக் காவிரி… வட மாவட்டங்களுக்குப் பாலாறு… என மூன்று புறமும் நதி நீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில்,மேற்கு மாவட்ட விவசாயிகளுக்கும் நதி நீர் பிரச்னை துவங்கிவிட்டது. தற்போது, பவானியின் உபநதிகளில் ஒன்றான சிறுவாணியின் குறுக்கே அணை கட்டத் திட்டமிட்டுள்ள கேரள அரசு, அதற்காகச் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதியைப் பெற்றுள்ளது. இதனால், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

சிறுவாணி அணையில் இருந்து செல்லும் உபரி நீர், சிறுவாணி ஆறாக ஓடி, பவானி நதியில் கலக்கிறது. கோயம்புத்தூரில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள சிறுவாணி அணை, தமிழகத்துக்குச் சொந்தமானது என்றாலும்… அணை அமைந்திருக்கும் இடம் கேரள மாநில எல்லைக்குள் உள்ளது. தமிழகத்தின் வனப்பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு, கேரளா மாநிலத்துக்குள் 25 கிலோமீட்டர் தூரம் பயணித்து… அம்மாநிலத்துக்குள் கூடப்பட்டி என்னுமிடத்தில் பவானி ஆற்றின் கலக்கிறது.

சிறுவாணி அணையிலிருந்து செல்லும் சிறுவாணி ஆற்றின் பாதையில் உள்ள, சித்தூர் எனும் கிராமத்தில்தான் அணை கட்டத் திட்டமிட்டுள்ளது கேரள அரசு.

இவ்விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி, “ஏற்கெனவே கீழ்பவானி பாசனத்தில் கடைமடை விவசாயிகளுக்குத் தண்ணீர் செல்வதில்லை. இன்னும் சொல்லப்போனால், தலை மடையில் இருப்பவர்களுக்கே போதவில்லை என்ற சூழல்தான் உள்ளது.  இப்படி நம் மாநில விவசாயிகளே தண்ணீர் கிடைக்காமல் போராடி வரும் நிலையில்… சிறுவாணியின் குறுக்கே அணை கட்டப்பட்டால் பவானி ஆற்றின் தண்ணீர் வரத்து வெகுவாகக் குறைந்துவிடும்.

அதனால் மிகப்பெரிய அளவில் கொங்கு மண்டலத்தில் வறட்சி ஏற்படும். கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.  ‘தமிழக அரசுக்கு பல முறை கடிதம் எழுதினோம். தமிழகத்திடம் இருந்து பதில் வரவில்லை’ என்று காரணம் சொல்கிறது கேரள அரசு.

ஆனால், தமிழக முதல்வரோ, தனது அறிக்கையில் ‘அப்படி எந்தக் கடிதமும் வரவில்லை’ என்கிறார். இதில் யார் சொல்வது உண்மை எனத் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் . அதேபோல் அணை கட்ட நீதி மன்றம் மூலம் தடையாணை பெறும் முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என்றார். 

“என்று தணியுமோ தமிழக விவசாயிகளின் தாகம்! “

நன்றி பசுமை விகடன்

Exit mobile version