Site icon Vivasayam | விவசாயம்

நிலக்கடலை பிரித்தெடுக்கும் இயந்திரம்..!

இந்த இயந்திரம் பற்றி திரு.விவேக் அவர்கள் கூறியவை.

“நிலக்கடலையை பிரித்தெடுக்கும் இயந்திரம் எங்கள் துறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலக்கடலைச் செடியிலிருந்து காய்களைப் பிரித்தெடுப்பதற்கு அதிக மனித உழைப்பும் நேரமும் செலவாகிறது. தற்போது கிராமங்களில் நிலக்கடலையைக் கையால் பிரித்தெடுக்கிறார்கள். இம்முறையினால் ஓர் ஆள், ஒரு நாளில் 10 முதல் 15 கிலோ அளவே பிரித்தெடுக்க முடிகிறது. ஆகவே, அறுவடைக் காலங்களில் வேலையாட்கள் பற்றாக்குறையினால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். இச்சிரமத்தைப் போக்க நிலக்கடலையைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் ஒன்றைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் வேலையாட்களையும் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தலாம். இந்த இயந்திரத்தில் பல முனைகளைக் கொண்ட சுழலும் உருளை, குழிவு சல்லடை, துருத்தி, முன் பின் ஆடும் வெவ்வேறு அளவு சல்லடைகள் ஆகிய பாகங்கள் உள்ளன. இதை இயக்க 5 குதிரைத்திறன் கொண்ட மின்சார மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

அறுவடை செய்த செடியை இவ்வியந்திரத்திலுள்ள இடுப்பெட்டியில் செலுத்த வேண்டும். கருவியின் சுழலும் உருளையில் உள்ள முனைகள் மற்றும் சுற்றிலும் உள்ள குறுக்கு கம்பிகளின் உதவியால் செடியிலிருந்து காய்கள் பிரித்தெடுக்கப்படும். காய் மற்றும் செடிகள் கீழே பொருத்தப்பட்டுள்ள சல்லடையின் மேல் விழும். துருத்தியின் உதவியினால் இலைகள் பிரிக்கப்பட்டுக் காய்கள் தனியாகக் கீழே வந்தடைகின்றன. இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் சுமார் 150 கிலோ காய்களைப் பிரித்தெடுக்கலாம்.

செடியுடன் பிரித்தெடுக்கப்படாமல் செல்லும் காய்கள் மற்றும் உடையும் காய்கள் சுமார் மூன்று விழுக்காடுகளுக்கும் குறைவே. இந்த இயந்திரத்தை உபயோகிப்பதன் மூலம் சுமார் 32 விழுக்காடு செலவும் 70 விழுக்காடு நேரமும் மீதமாகிறது. இயந்திரத்தின் விலை தோராயமாக ரூ 60,000. இந்த இயந்திரத்தை, பல்கலைக்கழக வழிகாட்டுதலுடன் தனியார் நிறுவனங்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றன. பண்ணைக் கருவிகள் குறித்த கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், எங்கள் ஆராய்ச்சி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு,

வேளாண் இயந்திரங்கள்

ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர்-3

தொலைபேசி : 0422 2457576

Exit mobile version