Site icon Vivasayam | விவசாயம்

கம்பின் தோற்றமும் அதன் பயன்பாடும் பகுதி -2

கம்பு சாகுபடி செய்யப்பட்ட அல்லது பயன்பாட்டில் இருந்த செய்திகளைப் பல்வேறாகக் கூறினாலும் தமிழ் இலக்கியப் பதிவுகளில் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சங்ககால இலக்கியம், பக்தி இலக்கியம் போன்ற இலக்கியங்களில் எந்தவிதமான பதிவுகளும் காணப்படவில்லை.

ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகு இயற்றப்பட்டதாகக் கூறப்படும் கம்பனுடைய தனிப்பாடல்களில்தான் கம்பைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

கம்பன் தனிப்பாடல்

செல்லன் தேவி மனைகடொறும்
தேடித்திரிந்தும் காணாத
நெல்லஞ்சோறே; கம்பஞ்சோற்
றினைநீசுமந்து திரிவாயே!

நெல் அரிசிச் சோறு கிடைப்பதற்கு அரியதென்றும், கம்பஞ்சோறு சாதாரண மக்களால் உணவாகக் கொள்ளப்பட்டது என்பதையும்,

நீர்எலாஞ் சேற்று நாற்றம்
நிலம் எலாம் கல்லும் முள்ளும்
ஊர்எலாம் பட்டி தொட்டி
உண்பதோ கம்பஞ் சோறு

நாற்றமெடுத்த சேற்றைக்கொண்ட நீர்நிலைகளும், கல் முள் நிறைந்த பட்டிதொட்டிகளும் நிறைந்த பகுதியில் கம்பஞ்சோறு உண்டார்கள் என்பதையும்,

குமிண்டியும் பண்ணையும் கூட
முளைக்கின்ற கொல்லைக் கம்பை
நிமிண்டியும் ஊதியும் தின்ன வல்லோர்
இந்த நீணிலத்தில்

பண்ணைக் கீரை மற்றும் பல கீரைகளும் முளைக்கும் வயல்களில் கம்பு விளையும் என்பதையும் அதை நிமிண்டி ஊதி நேரடியாக உண்பார்கள் என்பதையும் கம்பன் தனிப்பாடலில் பதிவு செய்துள்ளார்.

தானியங்களிலேயே அதிக அளவாகக் கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கும் காரணமான முக்கிய சத்தான வைட்டமின் A-வை உருவாக்கும் முக்கிய காரணியாக பீட்டா கரோட்டீன் கம்புப் பயிரில் அதிக அளவில் உள்ளது.

கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரிபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள், மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் எனப் பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்தை அளிக்கும் தானியங்களின் தரத்தில் முதலிடம் வகிக்கிறது. அரிசியை விட ஏறத்தாழ எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது. கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் வராமல் தடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவைச் சேர்க்க வேண்டும். வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய்ச் சத்து உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்புச் சத்தை அளிக்கக் கூடியதாகும். வேண்டாத கொழுப்புகளைக் கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்குக் கம்பு ஒரு வரப்பிரசாதமாகும்.

வெப்ப நாடுகளில் வேலை செய்பவர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள், அதிக சூடுடைய இயந்திரங்களில் வேலை பார்ப்பவர்கள், இரவு நேர வேலையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வயிற்றில் புண்கள், குடல்புண் உள்ளவர்கள், கடின வேலை செய்பவர்கள், எப்போதும் மன அழுத்தத்துடன் இருப்பவர்களின் உடலில் அதிக வெப்பமும், சோர்வும் உண்டாகும். இவர்கள் கம்பு உணவைக் காலை, மதிய வேளைகளில் உண்டு வந்தால் உடல் வலுவடைந்து உடல் சூடு குறையும்.

கம்பை அன்னமாகவோ, கூழாகவோ சமைத்துத் தயிர் அல்லது மோருடன் சாப்பிட்டு வரக் குடல் கொதிப்பு அடங்கும். உடல் வளர்ச்சிக்கும், பலத்துக்கும் உதவும். உடம்பைத் தூய்மையாக்கும். ஆனால் சொறி, சிரங்கு, இருமல், காசம் உள்ளவர்கள் கம்பைத் தவிர்ப்பது நல்லது. கம்பு இந்த நோய்களை அதிகப்படுத்தும். பழக்கமான அரிசி உணவில் இருந்து திடீர் என்று கம்பை உணவாக எடுத்துக்கொள்பவர்களுக்குச் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.

நாட்டுக் கம்பில் (Pennisetum glaucum) 8-10 சதவீதம் உமி போர்த்திக் கொண்டிருக்கும். ஆனால் வீரிய ஒட்டுரகக் (Hybrid) கம்பில் இந்த உமிகள் இருக்காது. பச்சைக் கம்பைக் கைகளால் உமிட்டி கம்பில் உள்ள வற்றாத பாலுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதையே அனலில் காட்டி உமிட்டியும் சாப்பிடுவார்கள். மேலும், பச்சைக் கம்பு வறுத்து உண்பதற்கு ஏற்றதாகும். இது மாவு தயாரிப்பதற்கும் ஏற்றதாகும். இதைத் தென் ஆப்பிரிக்காவில் மது தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள்.

மனித வளர்சிதை மாற்றத்தின் ஆய்வுகளில் ஏழைகளின் உணவான கம்பு, கோதுமை மாற்று தானிய கலவையில் புரதங்களில் உயிரியலின் மதிப்பு அதிகரிக்கிறது என்றும், குழந்தைகளுக்குக் கம்பு உணவு அளித்து ஆய்வு செய்ததில் அனைத்து வகைகளிலும் நைட்ரஜன், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சமச்சீர் அளவில் பராமரிக்கப்படுகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பசியைத் தூண்டும் சக்தியான மாவுப்பொருட்கள் மிகக் குறைந்தளவில் காணப்படுகின்றன. கேழ்வரகு மாவைவிடக் கம்பம் மாவு குறைந்த செரிமானச் சக்தி கொண்டது.

கால்நடை உணவு

கம்பந்தட்டு கால்நடை உணவுகள் பற்றாக்குறை உள்ள இடங்களில் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் கேழ்வரகும் மற்ற தானியங்களின் வைக்கோல் போன்று இருக்காது தண்டளவில் பெரியதாக இருப்பதால் இதை வைக்கோல் என்று கூறமுடியாது. தமிழில் கம்பந்தட்டு, கேழ்வரகுத் தட்டு, சோளத்தட்டு என்று பிரித்து அழைப்பார்கள்.

கம்பந்தட்டைக் குறைந்த அளவில் கால்நடை, கோழித்தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தாவரத்தின் பச்சைத் தண்டுகள் பசுந்தாள் விலங்கின உணவாக இந்தியாவின் பல பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதை 70 நாட்களுக்குள் அறுவடை செய்தால், ஒரு ஏக்கரில் 8.8 முதல் 11.2 டன்கள் வரை கிடைக்கும்.

கம்பந்தட்டு, சோளம் மற்றும் கேழ்வரகு போன்று அல்லாமல் குறைந்தளவு கால்நடை தீவனமாகப் பயன்படுகிறது. சில இடங்களில் கூரைவீடுகளுக்கு மேற்கூரையாகப் போடப்படுகிறது. கிராமப்புறங்களில் எரிபொருளாகவும் பயன்படுத்துகிறார்கள்.

கம்பந்தட்டுகளைக் கால்நடைகள் விரும்பி உண்ணாது. இது மற்ற தாவர கால்நடை உணவுகளுடன் கலந்து பயன்படுத்துவார்கள். காய்ந்த கம்பந்தட்டுகள் குஜராத் மாநிலத்திலுள்ள கேய்ரா மாவட்டத்தில் பெருமளவில் உலர்ந்த கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனந்த் பால் பண்ணை ஆராய்ச்சியில் கோடைக்காலத்திலும் அதற்கு முற்பட்ட பருவ காலத்திலும் கம்பந்தட்டுகளில் சத்துகள் கூடுதலாகக் காணப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால் தாவரங்களின் வளரிடம், பருவம், சாகுபடி முறை இவைகளைக் கொண்டு சத்து விகிதங்கள் வேறுபடும் என உணர முடிகிறது.

நன்றி

இரா.பஞ்சவர்ணம்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version