Site icon Vivasayam | விவசாயம்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவ நன்மைகள்

சுளுக்கு நீக்கும் மூசாம்பரம்

சோற்றுக்கற்றாழைச் சோற்றுடன் மஞ்சள் நிறப்பால் இருப்பதால்தான் மருந்துத் தயாரிப்புக்குச் சோற்றை அலசிப் பயன்படுத்துகிறோம் இந்த மஞ்சள் நிறப்பாலைச் சேகரித்து உலர்த்தினால் கிடைப்பதுதான் மூசாம்பரம்.

இது, கரியபோளம் என்றும் கரியபவளம் என்றும் அழைக்கப்படுகிறது. இது கருமை நிறத்தில் பிசின் போன்று இருக்கும். அடிபட்ட வீக்கம், நரம்புப்பிறழ்வு, சுளுக்குச் சதைச்சிதைவு ஆகிய நிலைகளில் மூசாம்பரத்தை வெந்நீரில் கரைத்துக் குழம்புப் பக்குவத்தில் இளஞ்சூட்டில் பூசினால் குணமாகும். 2 கிராம் மூசாம்பரத்துடன் 5 கிராம் குல்கந்து சேர்த்து அரைத்து காலை, மாலை இருவேளை உணவுக்குப் பிறகு ஐந்து நாட்கள் உண்டு வந்தால், முறை தவறிய மாதவிடாய், குறைந்த மாதவிடாய் ஆகியவை குணமாகும். கரியபவளம் கசப்பாகவும், குமட்டலான மணத்துடனும் இருப்பதால் குல்கந்து சேர்த்து சாப்பிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் இதை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

வயிற்றுளைச்சல் நீங்க கற்றாழைச் சாறு!

நெல் உமி சேர்த்து எடுக்கப்பட்ட 50 மில்லி கற்றாழைச் சோற்றுடன், 10 கிராம் பசுவின் வெண்ணெய், 5 கிராம் பனங்கற்கண்டு, 2 கிராம் வால் மிளகுத்தூள் ஆகியவற்றைக் கலந்து குடித்தால் சிறுநீர் எரிச்சல், உடல் அரிப்பு, உடற்சூடு ஆகியவை உடனே நீங்கும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 வேளை என 3 நாட்களுக்கு உண்டு வந்தால் நன்மை கிடைக்கும்.

இரத்தமும் ஜலமுமாக மலம் கழியும் வயிற்றுளைச்சல் நோய்க்கு.. ஒரு தேக்கரண்டி சோற்றுக்கற்றாழைச் சோறு, அரைத் தேக்கரண்டி சீரகம், 2 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து மூன்று மணிநேரத்துக்கு ஒரு முறை கொடுத்தால் குணமாகும். அமீபிக் சீதபேதி நோயும் இம்மருந்தில் குணமாகும்.

மேக நோயைத் தீர்க்கும் குமரித் தைலம்!

குமரித்தைலம் (உள் மருந்து)

விளக்கெண்ணெய் – 200 மில்லி

கற்றாழைச் சாறு – 200 மில்லி

வெங்காயச் சாறு – 100 மில்லி

பனங்கற்கண்டுப் பொடி – 100 கிராம்

இந்த நான்கையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் இட்டு, நன்கு காய்ச்சி நீர் வற்றிய பதத்தில் இறக்கவும். இதை தினமும் இரவில் 10 மில்லி அளவு உண்டு வர மந்தம், வயிற்றுவலி, ரணம், குன்மக்கட்டி, பசியின்மை, புளியேப்பம், பொருமல் ஆகியவை தீரும். 5 மில்லி அளவு தினமும் இருவேளைகள் உண்டு வர அரிப்பு, தினவு, தாது இழப்பு, மேகநோய், பலவீனம், எரிச்சல், அக புற புண்கள் ஆகியவை தீரும். மலச்சிக்கல் நீங்கி உடல் தேறும்.

குமரித்தைலம் (புறமருந்து) :

கற்றாழைச் சோற்றை விளக்கெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துத் தலைமுழுகி வந்தால் நன்கு முடி வளரும். தூக்கம் உண்டாகும்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version