Site icon Vivasayam | விவசாயம்

பசுமாடு வளர்ப்பு மூலம் லட்சாதிபதியாகலாம் !

படித்த படிப்புக்குத்தான், வேலை பார்ப்பேன் என பல இளைஞர்கள், பொழுதை வீணாக கழிக்கின்றனர். அப்படி உள்ளவர்கள் ஒரு பசு மாட்டை பராமரித்து வளர்த்தால், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாதம்தோறும் சம்பாதிக்கலாம். அதுவே தொழிலாக மாறும் காலத்தில், அவர்களால் பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க முடியும்,” என, கால்நாடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய ஈரோடு பிரிவின் தலைவர் டாக்டர் யசோதை கூறினார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

கறவை மாடு வளர்ப்பு தொழிலில் முறையான வழிமுறைகளை கையாளும் போது, ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடிய லாபகரமான தொழிலாக மாறிவிடும். ஈரோடு மாவட்ட, தட்ப வெட்ப, சீதோஷ்ண நிலைக்கு, நாட்டு மாடுகள், இந்திய இன பசுமாடுகள் அனைத்தையும் வளர்க்கலாம்,

கறவை மாடுகள் மூலம் வரும் வருமானத்தில், 60 முதல், 70 சதம் தீவன செலவுக்கு சென்றுவிடும். வெளியில் தீவனம் வாங்கினால் பெரிய அளவில் லாபம் காண முடியாது. அதை சற்று மாற்றி யோசித்தால், தீவன செலவினங்களை தவிர்க்கலாம். பசு மாடுகளை, அருகில் உள்ள காடுகளுக்கு மேய்ச்சலுக்கு கொண்டு செல்லாம்.

வாய்க்கால், வரப்புகளில், விளையும் அருங்கம்புல், கினியாபுல் போன்றவற்றையும், கொய்யா இலை, முருங்கை இலை, கருவேலி, வெள்ளைவேல மர இலை, வேலிமசால், அகத்திகீரை, போன்ற வீட்டின் அரு காமையில் உள்ள செலவில்லாத பசுந்தீவனங்களை கொடுக்கலாம்.

மழைக் காலத்தில் பசுந்தீவனத்துடன் சேர்ந்து, உலர் தீவனமாக, சோளத்தட்டு, வைக்கோல், கடலைக் கொடிகளை கொடுக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் செலவாகாது. இதை கடைபிடித்தால் அதிக பட்சமாக நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் முதல், 150 ரூபாய் வரை மட்டுமே செலவாகும். இவ்வாறு பராமரித்து வந்தால், காலையில், 5 லிட்டர், மாலையில், 7 லிட்டர் அளவுக்கு பால் கறக்கலாம், வெளி மார்கெட்டில் குறைந்த பட்சம், ஒரு லிட்டர் பசும்பால், 60 ரூபாயிலிருந்து, 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு பசுமாட்டை பரமரித்து பாதுகாப்பாக வளத்தால், அனைத்து செலவுகளும் போக, குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு சராசரியாக, 500 ரூபாய் தாராளமாக சம்பாதிக்க முடியும். உற்பத்தி அதிகரிக்கும்போது மற்றவர்களுக்கு வேலை கொடுக்கலாம்.

பசுவை லாபநோக்கோடு மட்டும் பார்க்காமல், நம் குடும்பத்தில் ஒருவராக பாவித்து, நோய்கள் அண்டாதவாறு பாதுகாக்க வேண்டும். முறையான பராமரிப்பு செய்தால், பால் உற்பத்தியில் குறைந்த செலவில் அதிகபட்ச லாபத்தை நிச்சயம் காண முடியும். ஒரு பசு, பல பசுக்களாக பெருகும்போது பலருக்கும் வேலை வாய்ப்பை தரமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

காலைக்கதிர்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version