Site icon Vivasayam | விவசாயம்

விதை, உரம் பதுக்கல் தடுக்க வேளாண் துறைக்கு உத்தரவு

விதை, உரம் பதுக்கலை தடுக்க, வேளாண் துறையினருக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழக அரசின் விதை மேம்பாட்டு முகமையான, ‘டான்சீடா’ சார்பில் விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக விற்கப்படுகின்றன. இவற்றில், சில வகை விதைகளுக்கு, அரசு மானியம் வழங்கி வருகிறது.

மத்திய அரசு ஒதுக்கீட்டில் உரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது. அரசு மட்டுமின்றி தனியார் கடைகளிலும் விதை, உரம் விற்கப்பட்டு வருகிறது.

தற்போது, வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளது. இந்த நேரத்தில், விதை மற்றும் உரத் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சில வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுற்வு சங்கங்களில், தனியாருக்கு சாதகமாக, வேண்டுமென்றே விதை மற்றும் உர விற்பனை குறைக்கப்படும்.

இதனால், தனியார் கடைகளை நாட வேண்டிய நிலை, விவசாயிகளுக்கு ஏற்படும். அங்கு, கூடுதல் விலையில், உரம், விதைகளை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர். இதை தடுக்கும் வகையில், விதை மற்றும் உரம் பதுக்கலை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேளாண் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் போதுமான அளவிற்கு யூரியா, பொட்டாசியம், டி.ஏ.பி., உள்ளிட்ட உரங்கள், இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் வினியோகம் செய்யாமல், அவற்றுக்கு தட்டுப்பாடு அதிகரிக்க செய்வர். விவசாயிகள் விரும்பும் ரக விதைகளுக்கு, செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்துவர். இதன் மூலம், தனியாருக்கு சாதகமாக நடந்து கொள்வர்.

இந்தாண்டு, இது போன்ற பதுக்கலை முற்றிலும் தடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பதுக்கலை கண்காணிக்க, மாவட்ட இணை இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

காலைக்கதிர்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version