Site icon Vivasayam | விவசாயம்

வான்கோழி வளர்ப்பு பகுதி : 8

மேய்ச்சல் முறையில் செலவு குறையும்!

கொட்டகையில் மட்டும் அடைத்து வைத்து வளர்த்தால், அடர்தீவனச் செலவு அதிகமாகும். அதனால், மேய்ச்சலுக்கு விட்டு குறைவான அளவில் அடர்தீவனத்தைக் கொடுத்தால்… தீவனச் செலவைக் குறைக்கலாம். வாய்ப்பு இருப்பவர்கள் தோட்டங்களில் ஆங்காங்கே மீன்வலை அல்லது கோழிவலை போன்றவற்றைப் பயன்படுத்தி செயற்கைத் தடுப்புகளை அமைத்து அதற்குள் கோழிகளை மேய விடலாம். இரவில் கொட்டகைக்குள் அடைத்து விடலாம். மேய்ச்சல் நிலத்தில் ஆங்காங்கு சுத்தமான குடிநீர்ப் பானைகளை வைக்க வேண்டும்.

பழைய சாக்குகளை நீரில் நனைத்து, இரவு நேரத்தில் நிலத்தில் போட்டு வைத்தால், காலையில் அதனடியில் கரையான்கள் வந்துவிடும். இவை கோழிகளுக்கு நல்ல உணவாகும். தவிர, மேய்ச்சல் நிலத்தில் உள்ள புழு, பூச்சிகள், பலவிதமானப் புற்கள் என்று சாப்பிடும்போது வான்கோழிகள் ஆரோக்கியமாக வளரும். தினமும் மூன்றுவேளை அடர்தீவனத்தையும் கொடுக்க வேண்டும்.

குஞ்சுகளாகவே விற்பனை!

என்கிட்ட வான்கோழிகள் இருக்குறதைத் தெரிஞ்சு நிறைய பேர் விலைக்குக் கேட்டு வர ஆரம்பிச்சாங்க. அதனால, ஒரு இன்குபேட்டரை வாங்கி குஞ்சுகளை உற்பத்தி பண்ணி விக்க ஆரம்பிச்சேன். என்கிட்ட குஞ்சுகள வாங்கிட்டுப் போன நண்பர் ஒருத்தர், ‘வளர்த்துக் கோழிகளை கறிக்காகக் கொடுக்க மனசு வரல. அதுனால இதுக போடுற முட்டை 15 ரூபாய்னு வாங்கி பொரிக்க ஆரம்பிச்சேன். அது சுலபமா தெரியவும், என்கிட்ட இருந்த தாய்க்கோழிகளை எல்லாம் வித்துட்டு, முட்டைகள வெளியில இருந்து வாங்கி பொரிச்சு, 60 நாள் குஞ்சுகளா விலைக்கு கொடுக்கற வேலையை மட்டும் செய்ய ஆரம்பிச்சுட்டேன். இந்த 60 நாளுக்குள்ள குஞ்சுகளுக்குக் கொடுக்க வேண்டிய எல்லா மருந்துகளையும் கொடுத்துடுவேன். இப்ப, தாய்க்கோழிகள வச்சு பராமரிக்கிற செலவு, வேலை இதெல்லாம் குறைஞ்சுடுச்சு. தேவைப்படுறவங்களுக்கு முட்டைகள பொரிக்க வச்சும் கொடுக்குறேன்.”

மேற்சொன்ன மூன்று முறைகளையும் தவிர்த்து, வீட்டுக்கு அருகில் உள்ள காலி இடத்தில் புறக்கடை முறையில் வான் கோழிகளை வளர்த்து வருகிறார் தேனியைச் சேர்ந்த ராஜாமணி. இதைப் பற்றி அவரது அனுபவத்தைக் கேட்போமா…

“வழக்கமா வான்கோழி வளர்க்க மேலே நெருக்கமா கூரை போடணும், கீழ நெல் உமி பரப்பி வைக்கணும். கம்பி வலைகள் கட்டணும். 50 கோழிகள் வளர்க்கணும்னா இடம் ரெடி பண்றதுக்கே ஆயிரக்கணக்குல காசு செலவாகும். எனக்கு அது கொஞ்சம் அதிகமானத் தொகையா தெரிஞ்சது. இடையில் ஒருமுறை பயிற்சிக்கு போயிருந்தப்ப கவனிச்சதுல ஒரு விசயத்தைத் தெளிவா புரிஞ்சுகிட்டேன். அதாவது, வான்கோழியை எந்த இடத்தில் வேணும்னாலும் வளர்க்கலாம். அதிகமான வெயில், குளிர், மழை இதுல இருந்து பாதுகாக்கணும் அவ்வளவுதான், இதுதான் முக்கியமான அடிப்படை விசயம். அதை மனசில் வச்சுகிட்டு எங்க வீட்டு முன்னாடி இருக்குற தென்னை, சீதாப்பழ மரத்துக்கு அடியிலேயே கம்பி வலைப் போட்டு அதுல வளர்க்க ஆரம்பிச்சேன். மழை நேரங்களில் அடைச்சு வைகக ஒரு ரூம் மட்டும் ரெடி பண்ணி வச்சுட்டேன். அதுவே எனக்கு போதுமானதாக இருந்துச்சு. வான்கோழிகளும் நல்லா வளர்ந்துச்சு.

வான்கோழி வளர்க்குறவங்க நஷ்டம் அடையறதுக்கு ரெண்டு காரணம்தான். முதல்காரணம் கொட்டகை அமைக்கிறது. இரண்டாவது அதுக்கான தீவனம் தயாரிக்கிறது. முறைப்படி அதுக்கு கொடுக்க வேண்டிய தீவனங்களை தயாரிச்சுக் கொடுத்தால், நடை முறைச்செலவு கூடி நஷ்டம் ஏற்படுற வாய்ப்பு வந்துருது. அதனால நான் தீவனத்துக்கும் எளிய முறையைக் கடைப்பிடிக்க ஆரம்பிச்சேன். மொத்த வியாபாரக்கடைகள்ல கீழ சிந்துற நவதானியங்களை ‘சிந்துமணி’ ன்னு சொல்லி ஓரமா குவிச்சு வச்சுருப்பாங்க. அதுல சோளம், கம்பு, கேப்பைனு எல்லா தானியங்களும் கலந்துருக்கும். அதை கிலோ மூணு ரூபாய்க்கு வாங்கிட்டு வந்து புடைச்சு சுத்தம் பண்ணி அரைச்சு தீவனமா கொடுத்துடுவேன்.

உழவர் சந்தை, மார்க்கெட்டுகளில் மீதமாகிற அழுகாத காய்கறிகளை குறைஞ்ச விலைக்கு வாங்கிட்டு வந்து போடுவேன். அந்தந்த சமயங்களில் எந்த காய்கறி விலை குறைவா கிடைக்குதோ அதையெல்லாம் வாங்கிட்டு வந்து வான்கோழிகளுக்கு உணவாபோட்டுடுவேன். உதரணமா பக்கத்துல இருக்குற பசுமையான கீரைகள். இதுதான் வான்கோழிகளுக்கு நல்ல உணவு. ரோட்டோரமா இருக்குற புரோட்டாகடைகள்ல இருந்து முட்டை ஓடுகளை அள்ளிட்டு வந்து உடைச்சு போட்டா, வான்கோழிகள் நல்லா சாப்பிடும். அதனால எனக்கு நடைமுறைச்செலவு பெரிசா இல்லை.

இந்த இயற்கை உணவுகளைச் சாப்பிட்டு வளர்ந்த என்னோட வான்கோழிகளின் முட்டைகள்ல அதிகமான பொரிப்புத்தன்மை இருக்குன்னு நந்தனம் கோழியின ஆராய்ச்சி நிலையமே சான்றிதழ் கொடுத்துருக்கு. எனக்கு இருக்குற பணத்தேவைக்கு தகுந்த மாதிரி கோழிகளை வித்துடுவேன். தேவையான அளவுக்கு மூணு மாசக் குஞ்சுகளை விலைக்கு வாங்கிக்குவேன். மேற்கொண்டு மூணு மாசம் வளர்த்து வித்துடுவேன். இரண்டரை வருஷத்துல 60 ஆண்கோழி, 50 பெட்டைக்கோழி, 75 குஞ்சுகளை வித்துருக்கேன். இப்ப 50 வான்கோழிகள் வச்சுருக்கேன். வாரத்துக்கு 70 முட்டைகள் வரை கிடைக்குது. வாரம் ஒரு தடவை மதுரை சந்தையில் கொண்டு போய் வித்துடுவேன். கடைக்காரங்க உடனடியா பணம் கொடுத்துடுவாங்க, பஸ் செலவுல பாதியையும் கொடுத்துடுவாங்க. கறிக்காக வாங்குறவங்களும் தேடி வந்து வாங்குறாங்க. இப்ப திண்டுக்கல், கேரளாவுக்கு கெல்லாம் வான்கோழிகளை அனுப்புறேன்.

முதல் மூணு மாசம் குஞ்சுகளை நல்லா பராமரிச்சுட்டா போதும். அதுக்கு அப்புறம் சாகுற அளவுக்கு வான்கோழிக்கு எந்த நோயும் கிடையாது. கறி நிறைய இருக்கும்கிறதால கடைகளில் வச்சு விற்கறதுக்கு தயக்கம் காட்டுறாங்க கறிக்கடைக் காரங்க. தனியார் ஆளுங்களே மொத்தமா நாலைஞ்சு பேர் சேர்ந்து வாங்கிட்டுபோய் சமைச்சிக்கிறாங்க. மத்த கறிகளைவிட கொஞ்சம் அதிகமா வேகவிடணும். இதுல கொழி முத்திட்டாலும் கறி சக்கையா ஆகாது. அதனால எந்த வயசுக் கோழியை வேணாலும் சாப்பிடலாம்.

பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் ஆரம்பிச்சேன். இன்னிக்கு மாசம் 6,000 ரூபாய் வரைக்கும் வருமானம் வருது. ஒரு நாளைக்கு அஞ்சு மணிநேரம் உழைச்சால் போதும், ஈசியா லாபம் சம்பாதிக்கலாம். தவிர, பண்டிகை சீசனை மனசுல வைச்சு, அதுக்கேத்த மாதிரி வான்கோழிகளை வளர்க்க ஆரம்பிச்சா நிச்சயம் நல்ல லாபம் பார்க்கலாம்.”

நன்றி

பணம் கொட்டும் பண்ணைத்தொழில்கள்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version