Site icon Vivasayam | விவசாயம்

வான்கோழி வளர்ப்பு பகுதி : 5

விற்பனை மற்றும் கொட்டகை அமைப்பு

தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான்.. மாதிரியான விசேச காலங்களில் இதற்கு கிராக்கி அதிகம் இருக்கும். அந்த மாதிரி நேரத்தில் விற்கும்படி முன்கூட்டியே திட்டம் போட்டு வளர்க்க வேண்டும். வான்கோழி இறைச்சியில் கழிவு என்று பார்த்தால் வெறும் 20 சதவிகிதம்தான். அதனால்தான் உயிர் எடை கிலோ ரூ 140-க்கி விற்கிறது.. இரண்டு மாதக் குஞ்சுகளுக்குத் தந்தூரிக்காக நல்ல கிராக்கி இருக்கு. அந்த வயதுடைய குஞ்சுகளுக்கு இருநூறு ரூபாய் வரை கிடைக்கும். அதில்லாமல் பெரியதாக வளர்த்து விற்றல் உயிர் எடைக்கு கிலோ 130 ரூபாய் வரைக்கும் நம் பண்ணையிலே வந்து வாங்கிக்கொள்கின்றனர்.. நாமே பெங்களூர், சென்னைக்கு எடுத்துக் கொண்டு போனால் ஒரு கிலோ (உயிர் எடை) 150 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரைக்கும் விற்கலாம். அது போக ஒரு வான்கோழி முட்டை 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

நான் கொட்டகை முறையில் வான்கோழிகளை வளர்த்து வருகிறேன். நல்ல காற்றோட்டம் இருக்கும் படி கம்பி வலை, தென்னங்கீற்றுகளை வைத்து கொட்டகைப் போட்டு, வெளியில் மேய்ச்சலுக்கு விடாமல் அடர்தீவனம் மட்டுமே கொடுத்து வளர்க்கும் முறையைத்தான் ‘கொட்டகை முறை’ என்று சொல்வார்கள். இந்த முறையில் ஒரு வான்கோழிக்கு 5 சதுர அடி இடம் இருந்தால் போதும். தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான பண்ணைகளை இந்த முறையில்தான் அமைத்திருக்கிறார்கள். மற்ற இரண்டு முறைகளைக் காட்டிலும், கொட்டகை முறையில் வளர்க்கும் போது கோழிகளின் வளர்ச்சியும், எடையும் அதிகரிக்கும். அதோடு இந்த முறைதான் பாதுகாப்பானதாகவும் இருக்கும். ஆனால், மற்ற இரண்டு முறைகளைவிடவும் செலவு அதிகமாக இருக்கும்.

வான்கோழிகளை வளர்ப்பதற்கான கொட்டகையை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.

நம்மிடம் இருக்கும் இடவசதியைப் பொறுத்து கொட்டகையோட நீள, அகலத்தை முடிவு செய்யலாம். அதே நேரத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, கொட்டகையோட அகலம் 20 அடிக்குக் குறையாமல் இருக்கணும். கொட்டகையோட நீளப்பகுதி கிழக்கு, மேற்கில் இருக்கும் படி அமைக்க வேண்டும். அப்பொழுதுதான் வெயில் நேரடியாக உள்ளே வராது. அதோடு, காற்றோட்டமாகவும் இருக்கும். கொட்டகையின் மேல் பக்கம் தென்னை ஓலை, தார்ஷீட், சீமை ஓடு, ஆஸ்பெட்டாஸ்ன்னு வசதியைப் பொறுத்து ஏதாவது ஒன்றை வைத்து அமைத்துக்கொள்ளலாம். சின்ன அளவில் செய்பவர்களுக்குத் தென்னை ஓலைதான் நல்லது. இதுக்குத்தான் செலவு குறைவாக ஆகும்.

கொட்டகையை அமைத்த பிறகு, நான்கு பக்கமும் செங்கல், ஹாலோபிளாக், கருங்கல் என்று ஏதாவது ஒன்றை வைத்து சுற்றுச் சுவர் வைக்க வேண்டும். மண்ணை வைத்துக்கூட கட்டலாம். இந்த சுவரின் உயரம் ஒன்றரை அடியிலிருந்து இரண்டு அடிக்குள் இருக்க வேண்டும். அதற்குமேல் கோழி வலை, மீன் வலை ஏதாவது ஒன்றை வைத்து கட்டிவிடவேண்டும். சுற்று சுவருக்கும், கூரையின் மழைநீர் விழும் இடத்திற்கும் குறைந்தது 3 அடி தூரம் இருக்கும்படி கூரையை அமைக்க வேண்டும். சுவர் எழுப்பிய பிறகு, அடிக்கடி தரையைக்கூட்டி, பெருக்க வசதியாக தரையில் சிமெண்ட் வைத்து பூசிவிடவேண்டும். தரையை பூசும் போது பாலீசாக இல்லாமல், சொரசொரப்பாக இருக்கும் படி பூசவேண்டும்.

பிறகு தரையில் அரையடி உயரத்திற்கு கடலைப் பொட்டை (நிலக்கடலை தொழி) போடவேண்டும். இப்படி போடுவதால் தினமும் கூட்டி, பெருக்கும் வேலை இல்லை. இந்த கடலைப் பொட்டை மூன்று மாதத்திற்கு ஒரு தடவை மாற்றினால் போதும். சில பேர் கடலைப் பொட்டுக்குப் பதிலாக மரத்தூளை போடுவார்கள். ஆனால், மரத்தூளில் தண்ணீர் படும் போது பூஞ்சணம் உண்டாகி, வான்கோழிகளுக்கு நோய் வர வாய்ப்பிருக்கு. அதனால் மரத்தூளை போடக்கூடாது. இப்படிக் கொட்டகையைத் தயார் செய்த பிறகு, கொட்டகைக்கு உள்ளே கோழிகள் உட்கார்வதற்கு வசதியாக, மூன்றடி உயரத்தில் குச்சிகளைக் கட்டி விடவேண்டும். அடுத்ததாக உள்ளே போய் வருவதற்கு வசதியாக ஒரு கதவை வைத்து விட்டால் போதும் கொட்டகை தயார் ஆகிவிடும்.

அடுத்து குஞ்சுகளை வாங்கி வளர்க்கத் தொடங்கலாம். முதன் முதலில் இந்த தொழிலை ஆரம்பிப்பவர்கள், ஏற்கனவே வளர்க்கும் பண்ணையாளர்களிடமோ அல்லது அரசு கால்நடைப் பண்ணையிலோ வாங்கி வளர்க்கலாம். ஆனால், தரமான குஞ்சுகளாகப் பார்த்து வாங்குவது மிகவும் முக்கியம்.

20 சென்ட் இடத்தில் 75 குஞ்சுகளோட பண்ணை ஆரம்பித்தால் இரண்டு வருடத்தில், நிச்சயம் மாதம் 10,000-க்கு குறையாமல் நிரந்தர வருமானம் கிடைக்கும். ஒரு தொழிலில் உங்களை எந்த அளவிற்கு அர்ப்பணிக்கிறீர்களோ.. அந்தளவிற்கு பலன் கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால், வான்கோழி வளர்ப்பில் அதற்கு மேலேயே கிடைக்கும். இது மட்டுமல்லாமல் உங்கள் தோட்டத்தில் வான்கோழி வளர்க்கும் பொழுது விவசாயத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்.

நன்றி

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version