Site icon Vivasayam | விவசாயம்

வான்கோழி வளர்ப்பு பகுதி : 3

முட்டைப் பருவம்

நல்ல அடர்தீவனமும் தேவையான அளவுக்கு சுத்தமான தண்ணீரையும் கொடுத்து வளர்த்தால் எட்டு மாதத்தில் முட்டை போட ஆரம்பிக்கும். அதனால் ஏழாவது மாதத்தில் ஒரு தடவை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். முட்டை போடும் காலத்தில் வயிற்றில் புழு இருந்தால், கருகலைந்து விடும். முட்டை பருவத்தில் கால்சியம் பற்றாக்குறையாக இருந்தால், முட்டை ஓடு பலமில்லாமல், தோல் முட்டை அதிகமாக கிடைக்கும். நல்ல முட்டையாக இருந்தாலும் அதிலிருந்து வெளியே வரும் குஞ்சுகளின் கால் வளைந்து நொண்டி, நொண்டி நடக்க அதிக வாய்ப்பு இருக்கு. இந்தப் பிரச்சனையை சரிசெய்ய கிளிஞ்சல்கள், நத்தையோடுகளை ஆற்றின், மணலில் இருந்து எடுத்து, தண்ணீரில் கழுவி பெரிய ரவை அளவுக்கு தூளாக்கிக் கொடுக்க வேண்டும்.

36 மணி நேரத்துக்கு ஒரு முட்டை

முட்டை காலத்தில் பசுந்தீவனத்தை அதிகமாகக் கொடுக்க வேண்டும். கோழி, முட்டை இடுவதற்கு தயாரானவுடன், இடம் விட்டு இடம் தாவிக்கொண்டே இருக்கும். மறைவான இடம் தேடி போய் உட்கார்ந்துக்கொள்ளும். இதை வைத்து முட்டைப்பருவம் வந்துவிட்டது என்பதை கண்டறியலாம். உடனே முட்டை வைப்பதற்கு வசதியாக கொஞ்சம் இருட்டாக இருக்கும் ஒரு இடத்தில் பழைய சாக்கு, குப்பைக்கூளத்தைப் போட்டு மெத்தை மாதிரி அமைத்து வைத்து முட்டை வைக்க வசதி செய்துக் கொடுக்க வேண்டும். அல்லது இரண்டு அடிக்கு இரண்டடி அளவில் ஒரு பெட்டியைச் செய்து வைத்தால் போதும். பிறகு அதுவே வழக்கமாகி, தானாக போய் முட்டையை வைத்து விடும்.

மூன்று நாளைக்கு இரண்டு முட்டை என்கிற கணக்கில் (36 மணி நேரத்திற்கு ஒரு முட்டை) தொடர்ந்து 13 முட்டைகள் வரைக்கும் வைக்கும். பிறகு சில நாள் இடைவெளி விட்டு திரும்பவும் முட்டை போட ஆரம்பிக்கும். ஒரு பெட்டைக் கோழி வருடத்திற்கு 120 முட்டைகள் வரைக்கும் முட்டைவிடும்.

முட்டை பராமரிப்பு

நல்ல தரமான முட்டை 70 முதல் 80 கிராம் எடையில் இருக்கும். முட்டையில் புள்ளி புள்ளியாகவும், மேல் பாகம் கூமாச்சியாவும் இருந்தால், அதுதான் நல்ல முட்டை. வான்கோழி முட்டையில் செரிமானத் தன்மை கம்மி. அதனால் இதை நோயாளிகளுக்கு கொடுக்கக் கூடாது. 100 வான்கோழி இருந்தால் அதில் 20 கோழிகள்தான் அடைக்காக்கும். மற்றது அடைகாக்காது.

அதனால் நாட்டுக்கோழியிலோ, இன்குபேட்டரிலோ (குஞ்சு பொரிக்கும் இயந்திரம்) முட்டையை வைத்து பொரிக்க வைக்க வேண்டும். வான்கோழி முட்டை 28 நாளில் பொறிக்கும். முதல் வருடத்தில் வைக்கும் முட்டைகளுக்கு 70 சதவிதம் பொரிப்புத்தன்மை இருக்கும். அடுத்தடுத்த வருடம் விடுகிற முட்டைகளுக்கு 45 சதவிகிதம்தான் பொரிப்புத்தன்மை இருக்கும். அதனால் முதல் வருடம் முட்டை விட்டதும், அந்தப் பெட்டை வான்கோழியை விற்றுவிட்டு, அடுத்த கோழியை முட்டைக்காக தயார் செய்துகொள்ள வேண்டும். அதே மாதிரி வளர்ந்த சேவல்களில் தேவைக்கு அதிகமாக இருப்பதையும் அடிக்கடி கழித்துவிட வேண்டும். சேவல் அதிகமாக இருந்தால் தீவனச் செலவு அதிகமாகும்.

பசுந்தீவனத்தைப் பொறுத்தவரை புல், செடிகள் என எல்லாவற்றையும் கொடுக்கலாம். அசோலாவைத் தயாரித்துக் கொடுக்கலாம். ஒரு கோழிக்கு 50 கிராம் அசோலாவைக் கொடுக்கலாம். இதை தீவனத்தோடு கலந்து கொடுக்கக்கூடாது. தனியாகத்தான் கொடுக்க வேண்டும். ஒருங்கிணைந்தப் பண்ணையத்திலும் வான்கோழியின் பங்கு அதிகம். வான்கோழிகளோடக் கழிவை மீனுக்கு தீவனமாகக் கொடுக்கலாம்.

நன்றி

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version