Site icon Vivasayam | விவசாயம்

வான்கோழி வளர்ப்பு : பகுதி-2

இளம் பருவம்

வான்கோழியில் அதிகமாக உயிரிழப்பு ஏற்படுவது குஞ்சுகளில்தான். இதைத் தடுக்க 7-ம் நாளில் ராணிக்கட் நோயிற்கு எதிரான ‘ஆர்.டி.வி.எப்’ சொட்டு மருந்தைக் கோழியின் கண்ணில் ஒரு சொட்டு, மூக்கில் ஒரு சொட்டு ஊற்ற வேண்டும். அதோடு முதல் இருபது நாளைக்கு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். 21-ம் நாளில் அம்மை ஊசியை இறக்கையில் போடவேண்டும் 30-ம் நாளில் மறுபடியும் ராணிக்கட்டுக்கு எதிராக ‘லசோட்டா’ சொட்டு மருந்தை கண்ணிலும் மூக்கிலும் ஒரு சொட்டு ஊற்ற வேண்டும். இந்த மருந்துகள் எல்லா கால்நடை மருந்துக்கடைகளிலும் கிடைக்கும்.

முப்பது நாளைக்குப் பிறகு கீரைகள், செடி, கொடிகள், அருகம்புல்லை நறுக்கி தீவனமாக கொடுக்கலாம். அருகம்புல் அதிகமாக கொடுத்தால், குஞ்சுகளுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதோடு, வயிற்றில் இருக்கும் எல்லா கழிவுகளையும் வெளியே கொண்டு வந்துவிடும். அதற்கு மேல், குஞ்சுகளுக்கு தேவையான அடர் தீவனத்தை நாமே தயாரித்துக்கொள்ளலாம். தயாரிக்க முடியாதவர்கள் கடையில் விற்பனை செய்யும் கறிக்கோழி தீவனத்தோடு, ஒரு சதவிகிதம் உப்பில்லாத மீன்தூளையும், ஒரு சதவிகிதம் எள் பிண்ணாக்கையும் கலந்து கொடுக்கலாம். (எ.கா: 100 கிலோ தீவனம், ஒரு கிலோ மீன்தூள், ஒரு கிலோ எள் பிண்ணாக்கு)

கோழிகளோட வளர்ச்சி குறைவாக இருந்தால், 60 நாட்களுக்கு பிறகு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். இதற்கு கால்நடை மருந்துக் கடைகளில் மருந்து கிடைக்கும். ஆனால், சித்த வைத்திய முறையில் வேப்பெண்ணெயை நாக்கில் படாமல் கொஞ்சமாக உள்ளே விட்டால் போதும். வயிற்றில் இருக்கும் புழுவெல்லாம் வெளியே வந்துவிடும். இரண்டு மாதத்திற்கு பிறகுதான் குஞ்சுகளுக்கு உடல் எடை கூடும் நேரம். அதனால் அப்பொழுது பசுந்தீவனம் அதிகமாக கொடுக்க வேண்டும்.

வளர்ச்சிப் பருவம்

90-ம் நாள் முடிந்ததும், ஆர்.டி.வி.கே. மருந்தை இறக்கைகளுக்கு அடியில் ஊசி மூலமாக போட வேண்டும். இந்த மருந்தை கால்நடை மருத்துவமனைகளில் போட்டுக்கொள்ளலாம். இந்த நேரத்தில் அடர் தீவனமும் கொடுக்கணும். ஒரு கோழி மூன்று கிலோ தீவனம் சாப்பிட்டால் ஒரு கிலோ எடைக்கூடும். அடர் தீவனம் கொடுத்து வளர்க்கும் போது ஐந்து மாதத்தில் ஆறு கிலோ எடைக் கிடைக்கும். மேய்ச்சல் முறையில் வளர்த்தால் ஏழு மாதத்தில்தான் இந்த எடைக் கிடைக்கும். இந்த பருவத்தில் கொடுக்க வேண்டிய அடர் தீவனத்தையும் நாமே தயாரித்துக்கொள்ளலாம். காய்கறிக் கழிவுகளை கொடுத்தால் அடர் தீவனத்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். இதனால் செலவு குறையும்.

நன்றி

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version