Site icon Vivasayam | விவசாயம்

கால்நடைகளின் உஷ்ணத்தை விரட்டும் வெந்தயம் !

கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்து விளக்குகிறார், தஞ்சாவூரில் உள்ள கால்நடை மூலிகை மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர். புண்ணியமூர்த்தி.

“கோடைக்காலங்களில் வெப்பம் அதிகமாகத் தாக்கினால், மாடுகளுக்கு மூச்சு வாங்குதல், பால் உற்பத்தி குறைதல், கருவுறத் தடைபடுதல், உடல் எடை குறைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். திட உணவு உட்கொள்ளுதலும் குறையும். இதனால் புரதச்சத்து, நார்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். எனவே, கோடை வெப்பம் நேரடியாக கால்நடைகளைத் தாக்காதவாறு தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது மிகவும் அவசியம். மாடுகளை நிழலில் கட்டி வைக்க வேண்டும். அடர்ந்த உயரமான நிழல் தரும் மரங்கள் கால்நடைகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும். கால்நடைகளை சுற்றிலும் 10 மீட்டர் விட்டத்துக்கு நிழல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மாடுகள் குடிப்பதற்கு எல்லா நேரங்களிலும் தரமான குடிநீர் தயாராக இருக்க வேண்டும். வறட்சியான பகுதிகளில், உச்சிவெயில் நேரங்களில் மாடுகள் மீது நீர்த்திவலைகளைத் தெளிக்க வேண்டும்.

ஒரு மாட்டுக்கு தினமும் இரண்டு மொந்தன் வாழைப்பழங்கள் கொடுக்க வேண்டும். நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கக்கூடிய பெருநெல்லிக்காய் வற்றலை தண்ணீரில் ஊற வைத்து, அரைத்து, ஒரு மாட்டுக்கு 50 கிராம் வீதம் தீவனத்தோடு கலந்து கொடுக்க வேண்டும். வெந்தயத்தை தண்ணீரில் ஒருநாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து, ஒரு மாட்டுக்கு 50 கிராம் வீதம் கொடுக்க வேண்டும். தினமும் இதுபோல் ஒருவேளை கொடுக்க வேண்டும். மொந்தன் வாழைப்பழம், நெல்லி முல்லி, வெந்தயம் இவை மூன்றுமே மாடுகளின் உடல் உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய அற்புத மருந்துகள்” என்றார்.

தொடர்புக்கு, செல்போன் : 98424-55833

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version