Site icon Vivasayam | விவசாயம்

பஞ்சகவ்யாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் வேதிப்பண்புகள்

பசுஞ்சாணம்

கௌடில்யர், வராகமிக்கிரர், சுரபாலர், சோமேஸ்வரதேவர் ஆகியோரது காலங்களில் விவசாயத்தில் சாணம் உபயோகிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘கோமே’ என்று வடமொழியில் அழைக்கப்படும் பசுஞ்சாணத்தில், பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான தழை, மணி, சாம்பல் மற்றும் கந்தகம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றோடு பாக்டீரியா, பூஞ்சாணம் ஆகியவையும் உள்ளன. பசுஞ்சாணத்தில் 82 சதவிகிதம் நீரும், 18 சதவிகிதம் திடப்பொருளும் அடங்கியுள்ளன. சாணம் ஒரு சிறந்த கிருமி நாசினி மட்டுமின்றி விதை பாதுகாப்புக்கான சிறந்த களம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாட்டு சிறுநீர்

மாட்டு சிறுநீரில் 95 சதவிகிதம் நீரும், 2.5 சதவிகிதம் தழைச்சத்தும், 2.5 சதவிகிதம் தாது உப்புக்கள், பயிர்வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் நொதிப்பான்களும் உள்ளன. கசப்புதன்மையும் சற்றே கார நிலையும் கொண்ட சிறுநீரில் தூய்மையும், கிருமிநாசினி தன்மையும் விளங்க காரணமாக இருக்கிறது. ஓரளவு மணிச்சத்தும், சாம்பல் சத்தும், உயிர் சத்தும் உள்ளடக்கிய சிறுநீரில் ‘லேக்டோஸ்’ எனப்படும் மாவுச்சத்து அதிக அளவில் உள்ளது. பயிருக்கு மட்டுமல்ல எல்லா, உயிருக்கும் ஊக்கியாக விளங்குவது இதன் சிறப்பாகும்.

பசும்பால்

விதை நேர்த்தி செய்யும் போதும், நாற்றுகளைப் பிடுங்கி நடுமுன்பு பாலில் நனைத்து நடவு செய்யும்போதும், நெற்பயிர்கள் வளமாக வளர்ந்து மகசூல் கொடுக்கும் என்பது பாரம்பர்ய வேளாண்மை சூத்திரங்களில் ஒன்று. பயிர் வளர்ச்சிப் பருவத்தில் நீர்கலந்த பாலை, தெளித்து வந்தால், நிறைய பூக்கலும், திரட்சியான விதைகளும் உருவாக வழி வகுக்கிறது. நுண்ணுயிரிகள் பல்கிப்பெருக பால் ஏற்றபொருளாகும். மேலும் நல்ல ஒட்டு பொருளாகவும், பரவும் பொருளாகவும் பாலில் உள்ள ‘கேசின்’ என்ற பொருள் அமைந்துள்ளது.

பசு நெய்

பயிர்களை நோய்கிருமிகளில் இருந்து பாதுகாக்கவும், அதில் ஏற்படும் பூச்சி, பூஞ்சாண தாக்குதலை குறைத்திடவும், நெய் பெரிதும் துணைபுரிகிறது. விதைகளை நேர்த்தி செய்யும் போது, அதை சுத்தமான பசும்பாலில் நனைத்து எடுத்து நெய்யில் பிசைந்து நிழலில் உலரவைத்து விதைப்பது நமது பாரம்பர்ய அறிவு சார்ந்த தொழில் நுட்பமாகும்.

பசுந்தயிர்

நொதித்தலுக்கு காரணமான ஏராளமான நுண்ணுயிரிகள் குறிப்பாக ‘லேக்டோ பேசில்லஸ்’ பாக்டீரியா அதிகம் உள்ளது.

கரும்புச் சாறு

நுண்ணுயிரிகள் பல்கிப்பெருகிட இது ஒரு உணவுக்கிடங்காக செயல்படக் கூடியது. நொதித்தலுக்கு உறுதுணை புரியக்கூடியது.

இளநீர்

‘கைனடின்’ எனும் பயிர்வளர்ச்சி ஊக்கிக்கு விலை மலிவான மாற்றுப்பொருள் இது. பஞ்சகவ்யாவின் நொதித்தலை துரிதப்படுத்துவதுடன், இளந்தளிர் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version