Site icon Vivasayam | விவசாயம்

நிலவேம்பு விவசாயம்

நிலவேம்பு : (ஆன்ரோகிராபிஸ் பேனிகுலேட்டா) இது ஒரு செடி தாவரமாகும். இலைகளின் இரு முனைகளிலும் குறுகி காணப்படும். மிகுந்த கசப்புத் தன்மை உடையதாக இருக்கும். விதைகள் மஞ்சள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இது ஓராண்டு பயிராகும்.

குடலில் ஏற்படும் அடைப்பு, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலநோய், குடற்புண், வயிற்றுப்புண், வயிற்றெரிச்சல், இருமல், தோல் நோய்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. மஞ்சள்காமாலை, கல்லீரல் சம்பந்தமான நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. டெங்கு காய்ச்சல் முழுவதுமாக குணப்படுத்துவதற்கு மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. புற்றுநோயைக் குணமாக்கும் மருத்துவ மூலிகையாகவும் அறியப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

நிலவேம்பு விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதைப்பதற்கு முன்பு 6 மணி நேரம் நீரில் ஊறவைத்து பின்பு மணற்பாங்கான நாற்றங்காலில் ஒரு அடி இடைவெளி கொண்ட வரிசைகளில் 20 செ.மீ. இடைவெளியில் விதைத்து மக்கிய தொழுஉரம் கொண்டு லேசாகமூடி, வைக்கோலைப் பரப்பி தண்ணீர் விட்டு ஈரப்பதம் காக்க வேண்டும். விதைகள் 15-20 நாட்களில் முளைத்து வளரும்.

நிலத்தை நன்கு உழுது 30 செ.மீ. இடைவெளியில் பாத்தி அமைத்து நாற்றுகள் 6 முதல் 10 செ.மீ. உயரம் வந்தவுடன் பிடுங்கி 30 செ.மீ. ஙீ 30 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். பருவம் மே-ஜூன் மாதங்கள். ஒரு எக்டருக்கு 70 கிலோ யூரியா, 50 கிலோ சூப்பர், 25 கிலோ பொட்டாஷ் உரங்கள் இடவேண்டும். பயிரின் வளர்ச்சி பருவத்தில் 30 கிலோ யூரியாவை இரண்டு முறை இடவேண்டும். நட்ட 2 மாதத்தில் உரமிடும் போது மண்ணை அணைப்பது மிகவும் அவசியம். நட்டு ஒரு மாதத்திலும் இரண்டாவது மாதத்திலும் களை எடுக்க வேண்டும்.

நிலவேம்பு ஒரு ஆண்டு பயிர் என்பதற்கு பயிரை வாடாமல் பார்த்துக் கொள்ள கோடையிலும் நீர்ப்பாசனம் தேவை. பொதுவாக 10-12 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நட்ட 2-3 மாதங்களில் பூக்கத் தொடங்கும். அதுசமயம் செடியின் அடி பாகத்தில் காணப்படும் இலைகளை அறுவடை செய்யலாம். பூக்கும் பருவம் முடிந்தபின் முழு செடியையும் அறுவடை செய்யலாம். இதனை சிறு கூடுகளாகக் கட்டி 4 முதல் 5 நாட்களுக்கு மித வெயில் அல்லது நிழல் காய்ச்சலாக உலர்த்தி மருத்துவ பயனுக்கு உபயோகிக்கலாம். பசுந்தழையாக எக்டரில் 5-5.5 டன் கிடைக்கும்.

(தகவல் : முனைவர் பி.பாலசுப்பிரமணி, முனைவர் எம்.தமிழ்ச்செல்வன், முனைவர் பானுபிரியா, மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்), செட்டிநாடு-630 102. போன்: 04565 – 283 080.
– டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version