Site icon Vivasayam | விவசாயம்

தக்காளி பயிருக்கு சோதனை அவசியம்

தக்காளி ஊசிப்புழு மேலாண்மையில் இனக்கவர்ச்சிப்பொறிகளைப் பயன்படுத்துவது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இனக்கவர்ச்சிப்பொறிகள் ஒரு வாரத்தில் ஆயிரக்கணக்கான ஆண் அந்துப்பூச்சிகளைக் கூட கவர்ந்து கொன்று விடுகின்றன. இருப்பினும், இதனால் தக்காளியில் ஏற்படும் ஊசிப்புழுக்களின் சேதாரம் குறைவதில்லை.

ஒருவேளை, இனக்கவர்ச்சிப்பொறிகளில் கவரப்படும் ஆண் அந்துப்பூச்சிகள் ஏற்கனவே கலவியை முடித்தவையாகக் கூட இருக்கலாம். அதனால்தான் சேதம் குறைவதில்லை. ஆனாலும், இன்னொன்றையும் இந்த இடத்தில் கருத்தில் கொள்ளவேண்டும், இனக்கவர்ச்சிப் பொறிகளின் செயல்திறன், அங்குள்ள தட்பவெப்பநிலை, பருவகாலம், பயிரிடும் முறைகள் ஆகியவற்றைப் பொறுத்து இடத்துக்கு இடம் மாறுபடலாம்.

இந்தியாவில் எங்கெங்கு தக்காளி ஊசிப்புழுக்களின் தாக்கம் அதிகம் இருக்கிறதோ, அங்கெல்லாம் இந்த இனக்கவர்ச்சிப்பொறிகளைச் சோதித்துப் பார்க்க வேண்டியது அவசியம். அப்படியே இனக்கவர்ச்சிப்பொறிகள் சேதத்தைக் குறைக்க உதவவில்லை என்றாலும், அவற்றைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட பருவத்தில் தக்காளியில் ஊசிப்புழுக்களின் பெருக்கம் அதிகரிப்பதைக் கண்டுகொள்ள முடியும். அதன் மூலம், தக்கசமயத்தில் பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

ஒட்டுண்ணிகள் மூலம் கட்டுப்படுத்தலாம்

உயிரினப் பூச்சிக்கொல்லிகளான ‘பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ்’ போன்ற பாக்டீரியாக்கள், ’மெடாரைசியம்’, ‘பியுவேரியா’ போன்ற பூஞ்சணங்கள், தக்காளி ஊசிப்புழுக்களைக் கொன்று, சேதத்தைக் குறைப்பதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலும் இதுபோன்ற உயிரினப் பூச்சிக்கொல்லிகள் சந்தைகளில் கிடைக்கின்றன. ஆனாலும், அவற்றின் தரம் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் மாறுபடலாம். எனவே, அவற்றை இந்த புதிய வில்லனுக்கு எதிராகப் பரிசோதித்துப் பார்த்து, விவசாயிகளுக்குத் தகுந்த பரிந்துரைகளை சம்பந்தப்பட்ட துறையினர் வழங்க வேண்டும்.

ஒட்டுண்ணிகள் மற்றும் இரைவிழுங்கிகள் போன்ற பூச்சிகளின் இயற்கை எதிரிகள் தக்காளி ஊசிப்புழுவுக்கு எதிராகவும் செயல்படலாம். அதிலும் குறிப்பாக, ஒட்டுண்ணிகளால் அவற்றின் பெருக்கத்தைப் பெருமளவில் மட்டுப்படுத்த இயலும். ‘டிரைக்கோகிரம்மா’ ஒட்டுண்ணிகள், தக்காளி ஊசிப்புழுக்களை ஓரளவுக்குத் தாக்கி அழிப்பதாக, விவசாயப் பூச்சி வளங்கள் தேசியப் பணியகத்தின் சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், ’டிரைக்கோகிரம்மா’ உள்ளிட்ட நான்கு வகையான ஒட்டுண்ணிகள் வயல்வெளிகளிலும் தக்காளி ஊசிப்புழுக்களைத் தாக்குவதாக இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

இந்த ஒட்டுண்ணிகள் அனைத்தும் தக்காளி ஊசிப்புழுவுக்கான பிரத்யேக ஒட்டுண்ணிகள் கிடையாது. எனவே அவற்றை வளர்த்து, வயல்வெளிகளில் விடும்போது தக்காளி ஊசிப்புழு மட்டுமின்றி, அங்கிருக்கும் மற்ற பூச்சியினங்களையும் இந்த ஒட்டுண்ணிகள் கொல்ல ஆரம்பிக்கலாம்.

தக்காளி ஊசிப்புழுக்களுக்கான பிரத்யேக ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்துகையில் இந்தப் பிரச்னையைத் தவிர்க்க இயலும். ஆனால், அவை இந்தியாவில் இருக்க வாய்ப்பு மிகமிகக்குறைவு மாறாக, இந்த ஊசிப்புழுக்களின் பிறப்பிடமான தென் அமெரிக்கக் கண்டத்தில்தான் அப்படிப்பட்ட ஒட்டுண்ணிகள் இருக்கும். எனவே, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், தென் அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் நாடுகளின் தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து, ஊசிப்புழுக்களின் பிரத்யேக ஒட்டுண்ணிகளை இந்தியாவுக்குள் கொண்டு வர வேண்டியது அவசியம். அப்படிக் கொண்டு வரப்படும் ஒட்டுண்ணிகளையும், ஆழ்ந்த ஆய்வுகளுக்கு உட்படுத்திய பிறகே, வயல்வெளிகளில் அறிமுகம் செய்ய வேண்டும்.

சமீபத்தில் பப்பாளி மாவுப்பூச்சிக்கு எதிராக அப்படிப்பட்ட ஓர் ஒட்டுண்ணி அமெரிக்கக் கண்டத்திலிருந்து அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version