Site icon Vivasayam | விவசாயம்

புதினா (Mentha Arvensis)

சித்தர் பாடல்

அருசி யொடுவாந்தி யக்கினி மந்தங்
குருதி யழுக்குமலக் கொட்ட – விரியுந்
துதியதன்று சோறிறங்குத் தொல்லுலகில் நாளும்
புதியனல் மூலி புகல்.
(அகத்தியர் குணபாடம்)

பொருள்

ருசியின்மை, வாந்தி மற்றும் உஷ்ண நோய்களை நீக்கும். ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும். வாயுப் பிரச்னையைத் தீர்ப்பதுடன், மலச்சிக்கலையும் போக்கும்.

புதினா கீரையின் தன்மை

பசித்தூண்டி = Stomachic
சிறுநீர்ப்பெருக்கி = Diuretic
வெப்பம் உண்டாக்கி = Stimulant
அகட்டுவாய் அகற்றி = Carminative
இசிவு அகற்றி = Anti Spasmodic

நீர்ப்பாங்கான இடங்களில் மிகச் செழிப்பாக வளரக்கூடிய புதினாவை அனைத்து விதமான சமையலுக்கும் பயன்படுத்தலாம்.

இதன் இலைகளை ஆவி முறையில் வடித்தெடுத்துப் பெறப்படும் மெந்தால் (Menthol), வலி நிவாரணிகளில் முக்கியப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது.

புதினாவில் புரதம் கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின் சி, பி -காம்ப்ளக்ஸ், பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துப் பொருள்கள் மிகுதியாக உள்ளன. புதினாவை உணவாகச் செய்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். வாந்தி, ஜிரணக் கோளாறுகள் தீரும். தலைவலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் புதினாவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறந்த பலனைப் பெறலாம்.

புதினாவின் மருத்துவப் பயன்கள்!

புதினா இலைச்சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டையும், தலா 100 மி.லி. அளவில் எடுத்து, கால் கிலோ தேனுடன் சேர்த்துக் காய்ச்சி இறக்கிக்கொள்ளவும். இதில் காலை, மாலை இரு வேளையும் 15 மி.லி. அளவுக்குச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.

புதினா இலையை ஒரு ஸ்டீபூன் கடுகு சேர்த்து எண்ணெய் விட்டு வதக்கி சேக்காமல் சாப்பிட்டால் நன்கு சிறுநீர் பிரியும்.

புதினா இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்தம் தூய்மையாகும்.

புதினா இலைச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு இரண்டையும் சம அளவு கலந்து சாப்பிட்டால், வாந்தி, சுவையின்மை, ருசியின்மை போன்ற பிரச்னைகள் குணமாகும்.

ஒரு கைப்பிடி அளவுக்குப் புதினா இலை, மிளகு (3 எண்ணிக்கை) இரண்டையும் விழுதாக அரைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.

புதினா இலையை (50 கிராம்) கஷாயமாகச் செய்து தினமும் 30 மி.லி. முதல் 50 மி.லி. வரை குடித்துவந்தால் கடுமையான காய்ச்சலும் குணமாகும்.

உலர்ந்த புதினா இலையில் கஷாயம் செய்து குடித்தால் மஞ்சள் காமாலை, விக்கல், வயிற்று வலி போன்றவை தீரும்.

உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

புதினா இலையை உலர்த்தி, சிறிது உப்பு கலந்து, தொடர்ந்து பல் துலக்கிவந்தால் பல்வலி, பல்கூச்சம், பல் ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பாதிப்புகள் தீரும்.

தலைவலிக்கு, புதினாவிலிருந்து எடுக்கப்படும் ‘பெப்பர் மிண்ட் தைலம்’ உடனடி நிவாரணமும், உடலுக்குப் புத்துணர்ச்சியும் தரும்.

புதினாவின் பிற பயன்கள்:

புதினாவை வாரத்துக்கு இரண்டு முறையாவது உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் நல்லது. புதினா சூப் அல்லது

புதினா பொடியை தொடர்ந்து பயன்படுத்தினால் பல நல்ல பலன்கள் கிடைக்கும்.

புதினா சட்னி, புதினா சூப், புதினா சாதம், புதினா பொடி என்று சமையலில் பயன்படுத்தலாம்.

புதினாவில் உள்ள சத்துக்கள்:

நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, தாதுப்பொருள், நார்ச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின் – சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பி-காம்ப்ளக்ஸ், வைட்டமின் – டி மற்றும் இ, கலோரித்திறன் கொண்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version