Vivasayam | விவசாயம்

பொன்னாங்கண்ணியின் மருத்துவக் குணம்

’கீரைகளின் ராஜா’ என வர்ணிக்கப்படும் கீரை, பொன்னாங்கண்ணி, இதைத் தொடர்ச்சியாக உணவில் பயன்படுத்தி வந்தால், மேனி பொன் போன்று மினுமினுக்கும். அதனால்தான், பொன்+ஆம்+காண்+நீ = பொன்னாங்கண்ணி என பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள். உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் பயன்படும் ஆற்றல் வாய்ந்தது இக்கீரை. தொடர்ந்து 48 நாட்கள் உண்டு வந்தால் பகலில் கூட நட்சத்திரங்களைப் பார்க்கலாம் எனச் சொல்வார்கள். அந்தளவுக்கு கண்பார்வையை கூர்மையடையச் செய்யும் சக்தி இக்கீரைக்கு உண்டு.

”காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்

கூசும் பிலீகம் குதாங்குர நோய்-பேசிவையால்

என்னாங்கா நிப்படிவம் எமமம் செப்பலென்னைப்

பொன்னாங்கா ணிக்கொடியைப் போற்று’’

                                             எனப் போற்றுகிறது, அகத்தியர் குண பாடம்.

‘பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் சேர்த்து வருபவர்களுக்கு, கண் தொடர்பான நோய்கள், காசநோய், இருமல், உடல் உஷ்ண நோய்கள் வாதம் தொடர்பான நோய்கள் வராது’ என்பது இப்பாடலின் சுருக்கமான பொருள். இதில் மூன்று நான்கு ரகங்கள் இருந்தாலும் பச்சை, சிவப்பு என இரண்டு வகைகள்தான் சந்தையில் விற்பனைக்கு வருகின்றன. அதிலும் சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரையைத்தான் நுகர்வோர் அதிகம் விரும்புகிறார்கள்.

பச்சைப் பொன்னாங்கண்ணி!

2

காடு, மேடு வாய்க்கால், வரப்பு என ஈரப்பதம் உள்ள அனைத்து இடங்களிலும் தானாக வளரும் தன்மை கொண்டது. பச்சைப் பொன்னாங்கண்ணி. பச்சை இலைகளுடன், வெள்ளை நிறப் பூக்களுடன் காணப்படும். இதற்கு கொடுப்பை, சீதை என்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் தாவரவியல் பெயர் ஆல்டிமேந்த்ரா செஸ்ஸில்ஸ் (Altemanthera Sessilis).

மருத்துவ குணங்கள்

பொன்னாங்ககண்ணிக் கீரையை வாரம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இன்சுலின் சுரப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கும். ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி, புற்றுநோய் வரவிடாமல் காக்கும். குடலிறக்க நோய் குறையும். நெஞ்சு சளியைக் கரைத்து, மார்பு இறுக்கத்தைப் போக்கும். நரம்பு மண்டலத்தைச் சீர் செய்யும். நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். கண்கள், மூளைக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும். ஈரலைப் பலப்படுத்தும். இதை எண்ணெயில் இட்டு காய்ச்சி தலையில் தடவினால் முடி நன்றாக வளரும்.

பொன்னாங்கண்ணிக் கீரையில் இரும்புச்சத்து – 1.63 மில்லி கிராம், கால்சியம் – 510 மில்லி கிராம், வைட்டமின்  – ஏ, பி, சி ஆகியவையும் அடங்கியுள்ளன. குறிப்பாக வைட்டமின் – ஏ அதிக அளவில் உள்ளது. பொன்னாங்கண்ணிக் கீரையை நெய்யில் வதக்கி, உப்பு, மிளகு சேர்த்து கடைந்து, 48 நாட்கள் உண்டு வந்தால் உடல் வனப்பு பெற்று பொன்னிறமாகப் பொலிவு பெறுவதுடன், நோயற்ற வாழ்வைப் பெறலாம்.

                                                                                    நன்றி      

                                                                            பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version