Site icon Vivasayam | விவசாயம்

அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கிருஷ்ணகிரி மாங்கூழ்

தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மாவட்டம் மா உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. பெங்களூரா, பங்கனப்பள்ளி,மல்கோவா, செந்தூரா, நீலம், பீத்தர் என பல்வேறு மா ரகங்கள் இங்கு விளைவிக்கப்படுகின்றன.

மேலும் பல விவசாயிகள் புதிதாக மாஞ்செடிகளை பயிரிடத் தொடங்கியுள்ளனர். இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, மண்ணின் தன்மைக்கு மா மரங்கள் செழித்து வளர்கின்றன. வறட்சியை தாங்கி வருவதால் விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இங்கு விளையும் மாம்பழங்களுக்கு ருசி அதிகம். இதனால் கிருஷ்ணகிரி மாம்பழத்துக்கு எப்போதும் மவுசு அதிகம்.

 இங்கிருந்து வெளி மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பிட்ட சீசனில் மட்டுமே அதிகளவில் மா உற்பத்தியாவதால் அனைத்து சீசனுக்கும் பயன்படுத்தும் வகையில் மாங்கூழ் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.

முதலில் ஒன்றிரண்டு தொடங்கப்பட்ட ஆலைகள் இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 70க்கும் மேற்பட்டவையாக அதிகரித்துள்ளன. விவசாயிகளிடமிருந்து மாங்காய்களை வாங்கி தரம் பிரித்து பின்னர் அவைகள் கூழாக்கப்படுகின்றன.

நீண்ட நாட்களுக்கு கெடாமல் பயன்படுத்தும் வகையில் கூழை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சூடாக்கி பின்னர் டப்பாக்களில் அடைக்கின்றனர். இந்த மாங்கூழ் டின்கள் அதிகளவில் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாங்கூழ் ஆலைகள் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது.

ஆண்டுக்கு 8 மாதத்துக்கு மாங்கூழ் ஆலைகள் சுறுசுறுப்பாக செயல்படும். ஆலைகளில் பெண்கள் அதிகளவில் வேலை பார்க்கின்றனர். மா அறுவடை, ஏற்றுமதி உள்ளிட்ட பணிகளில் ஆண்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோருக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கிறது.

 ஏற்றுமதி மூலம் அரசுக்கு அன்னிய செலாவணி அதிகளவில் கிடைத்து வருகிறது. இந்த தொழில் மூலம் விவசாயிகளுக்கும் நல்ல லாபம் கிடைப்பதால் புதிதாக மா பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்தது ரூ.20 லட்சம் செலவு செய்தால் சிறிய அளவிலான மாங்கூழ் ஆலையை தொடங்கலாம்.

குறைந்த முதலீட்டிலேயே மாங்கூழ் ஆலைகளை தொடங்கலாம் என்பதால் ஆலைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

 நன்றி

தமிழ் முரசு

Exit mobile version