Skip to content

தென்னையை தாக்கும் குருத்தழுகல், அடித்தண்டழுகல் நோய்களும் அதன் மேலாண்மை முறைகளும்

இறைவனால் படைக்கப்பட்ட அதிசயங்களில் ஒன்று தென்னை மரம். ஏனெனில் தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயனளிக்ககூடியது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தென்னை மரத்தை நாம் கற்பகதரு அல்லது கற்பகவிருட்சம் என்று அழைப்பதில் மிகை ஒன்றும் இல்லை. தென்னை சாகுபடியானது தற்போதுள்ள சூழ்நிலையில் இடுபொருட்களின் செலவு அதிகரிப்பு, கூலி உயர்வு, வேலையாட்களின் பற்றாக்குறை, பூச்சி தாக்குதல் போன்ற பல காரணங்களால் நலிவடைந்து இருந்தாலும், தென்னையின் மகசூலை   பாதிக்ககூடிய காரணிகளில் குருத்தழுகல், அடித்தண்டழுகல் போன்ற நோய்கள் முதன்மையானவை ஆகும்.

  1. குருத்தழுகல் நோய்

தாக்குதலின் அறிகுறிகள்

குருத்தழுகல் நோய் பைட்டோப்தோரா பால்மிவோரா என்ற பூசணத்தால் ஏற்படுகின்றது. இளங்கன்றுகள் முதல் பத்து வயது மரங்கள் வரை இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. காற்றில் ஈரப்பதமும், குளிர்ச்சியான சூழ்நிலையும் அதிகம் உள்ள மாதங்களில் (அக்டோபர், நவம்பர், டிசம்பர்) இப்பூசணத்தின் வித்துக்கள் தென்னையின் இளம் குருத்துப்பகுதியில் முளைத்து மிகவேகமாக பரவி வெண்மை கலந்த சாம்பல் நிறமாக மாறி விடும். இதனால் முதலில் இளங்குருத்து பச்சை நிறத்தை இழந்து மஞ்சள் நிறமாக மாறி, பின்னர் பழுப்பு நிறமடைந்து தொங்கிவிடும். நாளடைவில் குருத்தின் அடிப்பாகத்தில் உள்ள மென்திசுக்கள் அழுகி, பலமிழந்து துர்நாற்றம் வீசும். அவ்வாறு பாதிக்கப்பட்ட இளம் குருத்தை மேல்நோக்கி இழுத்தால் கையோடு எளிதில் வந்து விடும்.

குருத்து அழுகலைத் தொடர்ந்து, அதையடுத்துள்ள கீழுள்ள இலைகளும் தாக்கப்படும். முழுவதும் விரியாத இலைகளில் ஈரக் கசிவுடன் கூடிய புள்ளிகள் தோன்றி அவை பரவி இலைப்பகுதி முழுவதும் தாக்கப்படும். அப்பகுதியிலிருந்து அழுகிய நாற்றம் அடிக்கும். நோயின் தீவிரம் அதிகமானவுடன் மரத்திலுள்ள மட்டைகள், இலைகள் ஒவ்வொன்றாக காய்ந்து விழுந்து விடும். இந்நோய் குட்டை தென்னை இரகங்களை அதிகம் தாக்கும்.

மேலாண்மை முறைகள்

  • மழைக்காலங்களில் நோயின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
  • நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன், நோய் தாக்கிய குருத்து மற்றும் அதை சுற்றியுள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளை அடியிலிருந்து வெட்டி அகற்றி எரித்துவிட வேண்டும். பின்னர் அப்பகுதிகளில் பத்து சதவீத போர்டோ பசையை தயாரித்து பூசி விட்டு, பாலித்தீன்பை அல்லது அகல வாய் கொண்ட பானையைக் கொண்டு குருத்து பகுதியில் மழைநீர் படாதவாறு மூடிவிடவேண்டும். மீதமுள்ள இலைப்பரப்புகளில் ஒரு சதம் போர்டோ கலவையை நன்றாக படும்படி தெளிப்பதன் மூலம் இந்நோய் மேலும் பரவுவதைத் தடுக்கலாம். தோப்பில் உள்ள எல்லா மரங்களுக்கும் இலைப்பாகம் நன்கு நனையும்படி தெளிக்கவும். மழைக்காலம் ஆரம்பிக்கும்போது ஒருமுறையும் பின்னர்
    15 – 20 நாட்கள் கழித்து ஒருமுறையும் தெளிக்கலாம்.
  • காப்பர் ஆக்ஸிகுளோரைடு மருந்தை மூன்று கிராம் வீதம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து குருத்துப்பகுதியில் ஊற்றுவது மூலமும் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  • மரம் ஒன்றுக்கு தொழுவுரம் 50 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ, சூடோமோனாஸ் புளுரசன்ஸ் 200 கிராம் கலந்து ஆண்டிற்கு ஒருமுறை இட்டால் மரம் நோய் எதிர்ப்பு கொண்டதாக இருக்கும்.
  1. அடித்தண்டழுகல் நோய் அல்லது தஞ்சாவூர் வாடல் நோய்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1952 – ம் இந்நோய் முதலில் கண்டறியப்பட்டதால் தஞ்சாவூர் வாடல் நோய் என்ற பெயர் வந்தது. கேனோடெர்மா லூசிடம் என்னும் பூசணத்தால் இந்நோய் ஏற்படுகிறது. பொதுவாக இந்நோய் கடற்கரையோரங்களில் மணற்பாங்கான பகுதியில் வளரும் மரங்களை அதிகம் தாக்குகின்றது. வெயில்காலத்தில் மண்ணில் ஈரப்பதம் குறைவதும், மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியிருப்பதும், நோய் தாக்கிய மரங்களை தோட்டங்களில் இருந்து அகற்றப்படாமல் இருப்பதும் நோய் அதிகளவில் பரவ காரணமாகின்றன. இப்பூசணம் மரத்தின் இளம் வேர்களைத் தாக்கித் தூரினுள் நுழைவதால் அப்பகுதிகள் அழுகிவிடும். மேலும் பூசணம் பரவி மரத்தின் அடித்தண்டுப் பகுதியைத் தாக்கி உட்திசுக்களை அழுகச் செய்து பெருமளவில் வெற்றிடம் ஏற்படுத்துகின்றது. பூசணம் தூர்ப்பகுதியைக் கடந்து தண்டுப்பகுதியில் மேல்நோக்கி பரவும் போது அடித்தூரிலிருந்து சுமார் ஒரு மீட்டர் வரை தண்டில் வெடிப்புகள் தோன்றி செம்பழுப்பு நிற நீர் வடிவதைக் காணலாம். தண்டின் அடிப்பகுதியில் காளான்களும் தோன்றும். நோயின் தாக்கம் அதிகரிக்கும்போது தண்டுப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு, இலைகளிலும் வாடல் நோயின் அறிகுறிகள் தென்படும். முதலில் அடிப்பாகத்தில் உள்ள இலைகள் மஞ்சளாகி, வாடி மரத்தோடு ஒட்டி தொங்கி காணப்படும். நோய் முற்றும் போது குருத்து இலைகள் தவிர மற்ற
இளம் இலைகளும் கூட தொங்கிக் கொண்டிருக்கும். குரும்பைகள், இளம்காய்கள் உதிர்ந்துவிடும். நாளடைவில் கொண்டை சுருங்கி, தண்டு சிறுத்து பின்னர் குருத்து கீழே விழுந்து மரம் இறந்துவிடும். பாதிக்கப்பட்ட மரத்தில் பெரும்பாலான வேர்கள் அழுகி கருப்பு நிறத்தில் காணப்படும்.

மேலாண்மை முறைகள்

  • நோய் தாக்கிய மரங்களை உடனுக்குடன் வேருடன் தோண்டி எரித்து விடுவதன் மூலம் பூசணம் மேலும் பரவாமல் தடுக்கலாம்.
  • நோய் வாய்ப்பட்ட மரத்தை சுற்றிலும் (தண்டின் அடிப்பாகத்திலிருந்து 1.5 மீட்டர் தூரத்தில்) 1 மீட்டர் ஆழம், 30 செ.மீ. அகலத்தில் குழிவெட்டி மற்ற மரங்களிலிருந்து தனிமைப்படுத்த வேண்டும். அக்குழிகளில் ஒரு சத போர்டோ கலவையை நன்கு நனையும்படி சுற்றிலும் ஊற்றவேண்டும்.
  • நோய் வாய்ப்பட்ட தென்னை மரங்களுக்கு தனியாக வட்டப்பாத்தி அமைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
  • மரம் ஒன்றுக்கு தொழுவுரம் 50 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ, சூடோமோனாஸ் புளுரசன்ஸ் 100 கிராம் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி 100 கிராம் கலந்து ஆண்டிற்கு ஒருமுறை இட்டால் மரம் நோய் எதிர்ப்பு கொண்டதாக இருக்கும்.
  • நோயின் அறிகுறி தென்பட்டவுடன் புரோப்பிகோனஸோல் 1 மில்லி அல்லது ஹெக்ஸகோனஸோல் 2 மில்லி ஆகிய பூசனகொல்லிகளில் ஏதேனும் ஒன்றை
    100 மில்லி நீருடன் கலந்து மூன்று மாத இடைவெளியில் வேர்மூலம் செலுத்தவேண்டும்.

கட்டுரையாளர்கள்: ஜெ. இராம்குமார்1, ப. அருண்குமார்1, ப. வேணுதேவன்1, இரா.மங்கையர்கரசி2

1வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்

 2முதுநிலை ஆராய்ச்சியாளர், மலரியல் மற்றும் நிலலெழிலூட்டும் கலைத்துறை,

தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். மின்னஞ்சல்: jramtnau@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news