Skip to content

புவி வெப்பமடைதலினால் பூச்சிகள் மீது காலநிலை மாற்றத்தின் தாக்கம்

முன்னுரை                                    

இந்த தலைப்பு புவி வெப்பமயமாவதால் பூச்சிகளின் இயக்கவியலில் ஏற்படும் தாக்கத்தை விளக்குகிறது. புவி வெப்பமடைதலின் விளைவாக காலநிலை மாறுபாடு, வறட்சி, வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பு, மழைப்பொழிவு மாற்றங்கள், பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்டத்தில் உயர்வு, கடல் வெப்பம் அதிகரிப்பு, காற்றின் ஈரப்பதத்தில் மாற்றம், கரியமில வாயுக்களின் அளவில் மாற்றம் ஆகியவை நிகழ்கிறது. இந்த மாற்றம் பூச்சிகளின் இயக்கவியல் மீது நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறனைக் குறைக்கிறது. வேளாண் பூச்சியியலில் ஒரு முக்கியமான அளவுகோலாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை இது உருவாக்குகிறது.

பூச்சிகள் மீது காலநிலை மாற்றத்தின் தாக்கம்

பூச்சிகளின் புவியியல் வரம்பில் விரிவாக்கம், பூச்சி – புரவலன் பயிர் இடையிலான ஒத்திசைவு மாற்றங்கள், பூச்சி – தாவர இடைவினை மாற்றங்கள், மாற்று பயிர்கள் புரவலன் பயிராக மாறுதல், பூச்சிகளின் விரைவான வளர்ச்சி மற்றும் வளர்ச்சி விகிதங்கள், வளரும் பருவத்தில் நீட்டிப்பு, வேட்டையாடும் சாளரம் குறைதல் மற்றும் பூச்சி இனங்கள் மத்தியில் பன்முகத்தன்மை ஆகியவை பூச்சிகள் மீது காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆகும்.

தளிர் பட்டை வண்டு

ஒரு வருடத்தில் பல தலைமுறைகள் கொண்ட பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி காலநிலை மாற்றங்களால் அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது. தளிர் பட்டை வண்டு வருடத்திற்கு ஒரு தலைமுறையை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் இரண்டாவது தலைமுறை ஸ்வீடனின் தெற்கு பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக வெப்பநிலை 2.4o C முதல் 3.8o C வரை அதிகரித்ததே இதற்குக் காரணம். அதன் விளைவாக வளர்ச்சி மற்றும் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பதால் பயிர்களுக்கு அதிக சேதம் ஏற்படுகிறது.

பூச்சிகள் மீது ஏற்ற இறக்கமான வெப்பநிலையின் விளைவு

ஏற்ற இறக்கமான வெப்பநிலையால் வடக்கு நோக்கி பூச்சிகளின் இடம்பெயர்வு, ஆக்கிரமிப்பு பூச்சிகளின் அறிமுகம், ஒட்டுண்ணித்திறன் குறைதல் ஆகியவை நிகழ்கிறது.

ஏடிஸ் ஈஜிப்டி கொசு

ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்களின் தாக்கம் தெற்கு கனடா வெப்பமாக இருப்பதால் வடக்கு கனடாவை விட அதிகமாக காணப்பட்டது. இப்போது வடக்கு பகுதிகளும் வெப்பமடைகின்றன. இதனால் ஏடிஸ் ஈஜிப்டியின் இடம்பெயர்வு வடக்கு கனடாவை நோக்கி அதிகரித்ததோடு டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய்களையும் கொண்டு செல்கிறது. இதிலிருந்து, ஏற்ற இறக்கமான வெப்பநிலையும் பூச்சி இடம்பெயர்வுக்கு பங்களிக்கிறது என்பதும் தெளிவாகிறது.

காய்த் துளைப்பான்

உயர்ந்த கரியமில வாயுக்களால் செடிகளில் உள்ள கரியமிலம்: நைட்ரஜன் சதவீதம் மற்றும் ஊட்டச்சத்து தரம் மாறுகிறது. இது காய் துளைப்பான் புழுக்களின் அதிகரித்த உணவு நுகர்வு, புழுக்களின் எடையில் அதிகரிப்பு, கூட்டுப்புழு எடையில் அதிகரிப்பு, வளரும் பருவத்தில் நீட்டிப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. அதன் விளைவாக வளர்ச்சி மற்றும் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பதால் பயிர்களுக்கு அதிக சேதம் ஏற்படுகிறது.

நன்மைகள்

பொறி வண்டுகளின் வேட்டையாடும் திறன் அதிகரித்தல், அசுவுனிகளால் அலாரம் பெரோமோன்கள் குறைவாக சுரக்கப்படுவதால் பச்சை கண்ணாடி இறக்கைப் பூச்சியின் செயல் திறன் மேம்படுதல், செடிகளில் கரியமிலம் சார்ந்த தாவர பாதுகாப்பு திறன்கள் மேம்படுதல், நைட்ரஜன் சார்ந்த தாவர பாதுகாப்பு திறன்கள் மேம்படுதல் மற்றும் பேசிலஸ் துரிங்ஜென்சிஸ் செயல் திறன் மேம்படுதல்.

பூச்சி இயக்கவியல் மீது வறட்சியின் விளைவு

வறட்சியால் தாவரத்தின் ஊட்டச்சத்து மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் புழுக்களின் அதிகரித்த உணவு நுகர்வு, புழுக்களின் எடையில் அதிகரிப்பு, வளரும் பருவத்தில் நீட்டிப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. தாவர பாதுகாப்பு முறைகளின் செயல் திறன் குறைவதால் பூச்சி தாக்குதலுக்கு மிகவும் ஏதுவான நிலை உருவாகிறது.

ஆமணக்கு காவடிப்புழு

அதிகரித்த உணவு நுகர்வு, புழுக்களின் எடை அதிகரிப்பு, கூட்டுப்புழு எடை அதிகரிப்பு, வளரும் பருவத்தில் நீட்டிப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. இது ஆமணக்கு காவடிப்புழுவின் வளர்ச்சி அளவுருக்களை தூண்டியுள்ளது. அதன் விளைவாக பயிர்களுக்கு அதிக சேதம் ஏற்படுகிறது.

பூச்சிகள் மீது மழைப்பொழிவின் தாக்கம்

அதிக ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு சில பூச்சிகளின் இனப்பெருக்கத்தை ஆதரிக்கிறது (அசுவுனி பூச்சிகள்). ஆனால் இலைப்பேன் மற்றும் வெள்ளை ஈக்கள் பலத்த மழையால் அகற்றப்பட்டு கொல்லப்படுகின்றன. சிகப்புக் கம்பளிப்புழுவின் தாக்கம் கனமான மழையுடன் நேர்மறை தொடர்புடையது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

புகையான்

இயல்பை விட 10% மழைப்பொழிவு அதிகரிப்பதன் மூலம் புகையான் தாக்குதலும் நேர்மறையாக அதிகரிக்கிறது மற்றும் 10% மழைப்பொழிவுடன் 1oC வெப்பநிலை அதிகரிப்பதால் புகையான் பெருமளவில் பெருகுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

முடிவுரை

புவி வெப்பமடைதல் பூச்சி இயக்கவியலை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பாதிக்கிறது. எனவே பூச்சி மேலாண்மை தந்திரங்கள் நடைமுறையில் உள்ள நிலைக்கு ஏற்ப மேம்படுத்தப்பட வேண்டும். பயன் தரும் பூச்சிகள் (பட்டுப்புழு, தேனீ) மற்றும் இயற்கை எதிரிகள் (ஓட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள்) அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. பயிர் பாதுகாப்பு நடைமுறைகளின் செயல்திறனை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு விளைவுகளை கையாள கூடுதல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

கட்டுரையாளர்கள்:

ச. லேகா பிரியங்கா1, இரா.வினோத்2 மற்றும் வா. இரா. சாமிநாதன்3  

1 பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை – 641 003.

2வேளாண்மைக் கல்வி நிறுவனம், தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், திருச்சி

3பூச்சியியல் துறை, தோட்டக்கலை கல்லுரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி.

மின்னஞ்சல்:  rvinothagri@gmail.com

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news