Skip to content

செம்மை நெல் சாகுபடியில் களை எடுப்பதில் உள்ள சிரமங்களை எளிதாக்கும் கருவிகள்

நெல் சாகுபடியில் களை எடுப்பதில் உள்ள சிரமங்கள்:

நெல் சாகுபடியில் களைக் கட்டுப்பாடு என்பது முக்கியமான தொழில்நுட்பம். ஆனால் தற்போது பண்ணைத் தொழலாளர்களின் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதால் களைக் கட்டுப்பாடு பிரச்சனையாக உள்ளது. பல இலட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்வதால் குறிப்பிட்ட காலத்தில் களை எடுக்க வேண்டும். நெல் உற்பத்தியில் எல்லா வேலைகளையும் எளிதாக விவசாயிகள் இயந்திரங்களைக் கொண்டு செய்கின்றனர் ஆனால் களை எடுப்பது மட்டும் பெண் தொழிலாலர்கள் மூலமாகவே நடைபெறுகிறது. பெண் தொழிலாளர்கள் கைக்களை எடுப்பதில் முழுமையாக பயிரின் வேருக்கு தேவையான காற்றோட்டம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. ஏனெனில் களைகள் மட்டுமே அகற்றப்படுவதால் மண் கிளறிவிடப்படுவதில்லை.

நெற்பயிரின் வேர் பக்கத்திலுள்ள மண், களை எடுத்த பின்பும் இறுக்கமாகவே இருக்கும். மேலும் மனிதனால் கை களை எடுத்தல் என்பது மிகவும் கடினமான வேலையாகவும், அதிக நேரம் ஆகக் கூடியதுமாக உள்ளது. மொத்த சாகுபடி செலவில் 45-50% களை எடுக்க மட்டுமே செலவாகிறது. வழக்கமாக குனிந்து கொண்டே களையெடுப்பதால் பெண்கள் விரைவில் களைப்படைந்து விடுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு களை எடுத்தலை துரிதப்படுத்தும் நோக்கத்துடனும் பல்வேறு விதமான களைக்கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நெல் சாகுபடியில் களைக்கருவியின் பயன்பாடு இயந்திர மயமாக்குதலின் ஒரு அங்கமாகும். ஏனெனில் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் களை கட்டுப்படுத்தப்பட்டு மகசூல் அதிகாமாக்கப்படுகிறது. மண்ணின் தன்மைக்கேற்ப வெவ்வேறு வகையான களைக்கருவிகள் பற்றி கீழே காண்போம்.

செம்மை நெல் சாகுபடியில் களைக்கருவி பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

  • அதிகத் தூர்கள்
  • வேலை ஆட்கள் குறைவு
  • சத்துக்கள் சரியாக பயிருக்கு கிடைக்கிறது.
  • களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன் அவை அந்த வயலுக்கே இயற்கை உரமாகவும் மாற்றப்படுகின்றன.
  • உருளும் களைக்கருவி மண்ணைப் பிரட்டி விடுவதால் காற்றோட்டம் கிடைக்கிறது.
  • மேலுரம் இடும் சமயத்தில் உரமிட்டபின் களைக்கருவியை உபயோகிக்க வாய்ப்புள்ளதால் உரங்கள் மண்ணில் கலந்து உபயோகத்திறன் அதிகரிக்கிறது.

களைக்கருவியின் வகைகள்

  1. நட்சத்திர வடிவ உருளும் களைக்கருவி
  • ஒரு வரிசை நட்சத்திர வடிவ உருளும் களைக்கருவி
  • இரண்டு வரிசை நட்சத்திர வடிவ உருளும் களைக்கருவி
  1. சாய்வு உருளை களைக்கருவி
  2. விசைக் களையெடுப்பான்
  3. நட்சத்திர வடிவ உருளும் களைக்கருவி

நட்சத்திர வடிவ உருளும் களைக் கருவியானது களை எடுக்கும் உருளை, கைப்பிடி, நட்சத்திர வடிவ உருளை, மிதவை, உருளையை தாங்கும் சட்டம் ஆகியவற்றைக் கொண்டது. களை எடுக்கும் உருளையானது  6 நட்சத்திர வடிவ வெட்டும் அமைப்பினாலும் ஒவ்வொரு அமைப்பிலும் 4 விரல் போன்ற முக்கோண வடிவ அமைப்பாக இருக்கும். இந்த நட்சத்திர உருளையானது, இரும்பு அச்சின் மேல் பொருத்தப்பட்டு, அந்த அச்சானது முதன்மைச்  சட்டத்தின் மூலம் இணைக்கப்படுகிறது. மிதவையானது களை எடுக்கும் உருளைக்கு முன்னால் பொருத்தப்பட்டு, களை எடுத்தலை துரிதப்படுத்துகிறது. களை எடுக்கும் உருளையும் மிதவையும் பிரதான சட்டத்துடன் பொருத்தப்பட்டு முதன்மைக் கைப்பிடியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

படம்:1 நட்சத்திர வடிவ உருளும் களைக்கருவி

  1. சாய்வு உருளை களைக் கருவி – கோனோ வீடர்

நன்செய் நெற்பயிரில் களையெடுக்க இதுவரை சிறந்த கருவி எதுவும் உருவாக்கப்படவில்லை.  பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் உலக நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இந்த களையெடுக்கும் கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் அதிகப் பரப்பளவில் குறைந்த செலவில் களையெடுக்க இயலும். ஆனால் இக்கருவிகளை வரிசையில் நடவு செய்யப்பட்ட வயல்களில் மட்டுமே இயக்க முடியும். ஆகவே நடவு செய்யும் போது ஒரே வரிசையில் தகுந்த இடைவெளி விட்டு நட வேண்டும்.

இக்கருவியானது எளிதில் சுழலும் வண்ணம் பொருத்தப்பட்டுள்ள ஒன்று அல்லது இரண்டு உருளைப்பகுதிகளையும் சேற்றில் எளிதாகத் தள்ளிச் செல்வதற்கேற்ற மிதப்பான் போன்ற அமைப்பையும் மேலும் இயக்குபவர் நடந்தவாறே தள்ளிச் செல்ல நீண்ட கைப்பிடியொன்றையும் கொண்டது. ஒரு உருளையைக் கொண்ட கருவியால் ஒரு வரிசையிலும் அதேபோல் இரண்டு உருளைப் பகுதியைக் கொண்ட கருவியில் ஒரே சமயத்தில் இரண்டு வரிசைகளிலும் எளிதில் களையெடுக்கலாம். கருவியை முன்னும் பின்னுமாக அசைத்து இயக்கும் போது உருளைப் பகுதியில் உள்ள வளைந்த கத்தி போன்ற பகுதி களையை வேருடன் பிடுங்கிப் போடுகிறது. கருவியை இயக்கிச் செல்பவர் அவற்றின் மீது நடந்து செல்லும்போது களைகள் மண்ணுக்குள் மிதிக்கப்பட்டு மட்கி அழுகுவதற்கு ஏதுவாகிறது.

சிறப்பியல்புகள்

  • இக்கருவியை உபயோகிக்க ஒரு வேலையாள் போதுமானது.
  • இக் கருவியைக் கொண்டு 50 சென்ட் வரையிலும் களையெடுக்க முடியும்.
  • களை எடுப்பதற்கு 5லிருந்து 10 ஆட்கள் தேவையும் குறைகின்றது.படம்:2 சாய்வு உருளை களைக் கருவி
    1. விசைக் களையெடுப்பான்

    விசைக் களையெடுப்பான் என்ஜின், பற்சக்கரப்பெட்டி, இரும்புச்சட்டம், சுழல் உருளை, மிதவை, கைப்பிடிபோன்ற பாகங்களை உள்ளடக்கியது. மென்தகட்டால் உருவாக்கப்பட்ட இரும்புச்சட்டத்தின் மேல் என்ஜினும் இதர பாகங்களும் பொருத்தப்பட்டுள்ளன. என்ஜின் வேகத்தைக் கட்டுப்படுத்த கைப்பிடியின் இடப்புறம் வேகக்கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளது. என்ஜினின் இருபுறமும் இரண்டு வரிசைகளில் களையெடுக்கும் உருளைகள் பொருத்தப்பட்டுள்ளது.  களையெடுக்கும் உருளைகளை 20 முதல் 28 செ.மீ வரை வரிசை இடைவெளிக்கு ஏற்ப மாற்றி அமைக்கலாம். இதன் மூலம் நாளொன்றுக்கு ஒரு 2 ஏக்கர் நிலத்தில் களையெடுக்கலாம். இந்த இயந்திரத்தின் விலை சுமார் ரூ.40,000 ஆகும்.

    படம்:3 விசைக் களையெடுப்பான்

    சிறு விவசாயிகளுக்கான குறைந்த விலையுள்ள சிறிய களையெடுக்கும் கருவிகளை பயன்படுத்தினால், செம்மை நெல் சாகுபடியில் சிறந்த முறையில் களைக் கட்டுப்பாடு செய்து அதிக மகசூல் பெறலாம்.

    கட்டுரையாளர்கள்:

    முனைவர். பெ. தனஞ்செழியன், முனைவர். அ.சுரேந்திரகுமார் மற்றும் பா. சுதாகர்,

    பண்ணை இயந்திரவியல் மற்றும் சக்தி பொறியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் – 641003.

    மின்னஞ்சல்: kpdhana@gmail.com அலைபேசி எண்: 8220005297.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news