Skip to content

இளநிலை வேளாண் பட்டப்படிப்புகள்: ஒரு கண்ணோட்டம்

தமிழ்நாடு அளவில், வேளாண்மை பட்டப்படிப்பு என்பது மருத்துவம், பொறியியல் மற்றும் கால்நடை அறிவியியல் போன்று மிக முக்கியமான பட்டப்படிப்பு ஆகும். தமிழக அளவில், 2020-21ம் கல்வி ஆண்டுகான வேளாண் இளநில பட்டப்படிப்பு படிப்பதற்கான சாத்தியக்கூறுகளை இத்தொகுப்பில் விரிவாகக் காணலாம்.

தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைகழகங்கள் வேளாண் இளநிலை பட்டப்படிப்புகளை பயிற்றுவிக்கின்றன. இதில் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகம் மிக முக்கியமான பல்கலைகழகங்கள் ஆகும்.  பன்னிரண்டாம் வகுப்பு படித்த பிறகு, புதுதில்லில் உள்ள‌ இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (ICAR – Indian council of Agriculture Research) நடத்தும் அனைத்து இந்திய நுழைவு தேர்வின் மூலமாகவும் பிற மாநிலங்கள் சென்று உதவி தொகை பெற்றும் படிக்கலாம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்:

இப்பல்கலைக்கழகத்தில் பின்வரும் பத்து இளநிலை பட்டப்படிப்புகள் அளிக்கப்படுகிறது.

  1. இளம் அறிவியல் (மேதமை) (வேளாண்மை)
  2. இளம் அறிவியல் (மேதமை) (தோட்டக்கலை)
  3. இளம் அறிவியல் (மேதமை) (வனவியல்)
  4. இளம் அறிவியல் (மேதமை) (உணவு, ஊட்டச்சத்தியல், உணவு முறையியல்)
  5. இளம் அறிவியல் (மேதமை) (பட்டு வளர்ப்பு))
  6. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை பொறியியல்)
  7. இளம் தொழில்நுட்பம் (உணவு தொழில்நுட்பம்))
  8. இளம் தொழில்நுட்பம் (உயிர் தொழில்நுட்பவியல்)
  9. இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுப்புறச் சூழலியல்)

10.இளம் அறிவியல் (வேளாண் வணிக மேலாண்மை)

 

பட்டியலில் 1,2,3,4,5,8 மற்றும் 10 பாடப்பிரிவுகளுக்கு, பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் ஒரு முக்கிய பாடங்களாக இருத்தல் அவசியம். பட்டியலில் 6,7 மற்றும் 9 பாடப்பிரிவுகளுக்கு, கணிதம் ஒரு முக்கிய பாடமாக இருத்தல் அவசியம். பன்னிரண்டாம் வகுப்பில் வேளாண் தொழிற்கல்வி (Vocational Group) படித்தவர்கள், பட்டியலில் 1,2,3 மற்றும் 6 பாடப்பிரிவுகளை மட்டும் தேர்ந்தெடுக்க முடியும்.

 

மாற்றுத்திற‌னாளி, சிற‌ந்த விளையாட்டு வீரர், முன்னாள் படை வீரர் மற்றும் சுதந்திர போராளிகளிகளின் வழித்தோன்ற‌ல்கள், தொழில் நிறுவனத்தின் மூலமான சேர்க்கை என சிறப்பு பிரிவினர்களுக்கும் தர வரிசையின் அடிப்படையில் தனி சீட்டுகள் கவுன்சிலிங்கின் மூலம் நிரப்பப்படும். தொழில் நிறுவனத்தின் மூலமான சேர்க்கைக்கு, வேளாண் வணிக கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள எந்த வேளாண் நிறுவனமும் தலா ஒரு மாணவர்களுக்கு இளநிலை வேளாண் பட்டப்படிப்பு படிக்க ஆதரவு தர முடியும் (Sponsorship Quota).

பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப 14 அரசு உறுப்புக் கல்லூரிகள் (1600 இடங்கள்) பின்வருமாறு

இளம் அறிவியல் (மேதமை) (வேளாண்மை)

  1. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவை. (இளம் தொழில்நுட்பம், உயிர் தொழில்நுட்பவியல் மற்றும் இளம் அறிவியல் வேளாண் வணிக மேலாண்மை)
  2. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.
  3. அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி.
  4. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிக்குளம், திருநெல்வேலி.
  5. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்.
  6. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை.
  7. வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வாழவச்சனூர், திருவண்ணாமலை.

 

இளம் அறிவியல் (மேதமை) (தோட்டக்கலை)

  1. தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவை
  2. தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியக் குளம், தேனி.
  3. பெண்கள் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி.

 

இளம் அறிவியல் (மேதமை) (வனவியல்), இளம் அறிவியல் (மேதமை) (பட்டு வளர்ப்பு)

  1. வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம்.

 

இளம் அறிவியல் (மேதமை) (உணவு மற்றும் ஊட்டச்சத்தியல், உணவு முறையியல்)

1.மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை

இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை பொறியியல்)

1.வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்ம, குமுலூர்,திருச்சி.

இளம் தொழில்நுட்பம் (உணவு தொழில்நுட்பம்) மற்றும் இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுப்புறச் சூழலியல்)

1.வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவை.

 

இளம் அறிவியல் வேளாண்மை படிப்பு 26 தனியார் கல்லூரிகளிலும், தோட்டக்கலைப் படிப்பு இரண்டு தனியார் கல்லூரிகளிலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் நடத்தப்படுகிறது.

 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்  கீழ் இயங்கும் அனைத்து உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளிலும், தேர்ச்சி அடையாமல் நிலுவை வைத்திருந்தால் வருட‌முறிவு முறை உள்ளது (அதாவது முதலாம் வருடத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி அடையாமல் நிலுவை வைத்திருந்தால் இரண்டாம் வருடத்திற்குள் ‌தேர்ச்சி அடைய வேண்டும், இல்லாவிடில் மூன்றாம் வருடத்திற்கு செல்ல முடியாது).

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்  கீழ் இயங்கும் தனியார் இணைப்பு கல்லூரிகளில், வேளாண் தொழிற்நுட்ப கல்லூரி (College of Agriculture), தேனி தவிர,  அனைத்து கல்லூரிகளும் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (ICAR – Indian Council of Agriculture Research) கீழ் ஆங்கீகாரம் பெறாதவை ஆகும். இதனால் அனைத்து இந்திய நுழைவுத் தேர்வின் மூலம் முதுநிலை பட்டப் படிப்பினை படிக்க பல சிரமங்கள் ஏற்படுகிறது. ஆனாலும் இவை அனைத்து கல்லூரிகளும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கீகாரம் பெற்றவை என்பதால் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கீழ் வேளாண் முதுநிலை பட்டப் படிப்பினை தாராளமாக படிக்கலாம். மீதமுள்ள அனைத்து தனியார் இணைப்பு கல்லூரிகளும், பின்வரும் காலங்களில் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (ICAR – Indian Council of Agriculture Research) ஆங்கீகாரம் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு மற்றும் விண‌ப்பிக்க www.tnau.ac.in என்ற இணையதளத்தினை அணுகவும்.

அண்ணாமலைப் பல்கலைகழகம்:

இப்பல்கலைக்கழகத்தில், இளம் அறிவியல் (வேளாண்மை) (500 இடங்கள்) மற்றும் இளம் அறிவியல் (தோட்டக்கலை) (100 இடங்கள்) என்ற இரண்டு இளநிலை பட்டப்படிப்புகள் அளிக்கப்படுகிறது.  மொத்தம் உள்ள சீட்டில், பாதி அரசு ஒதுக்கீடு முறையிலும், மீதமுள்ள சீட்டுகள் சுய நிதி ஒதுக்கீடு முறையிலும் நிரப்பப்படுகின்றன. இப்பல்கலைக்கழகமானது, இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (ICAR – Indian Council of Agriculture Research) கீழ் ஆங்கீகாரம் பெற்றுள்ளது. இதனால் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலோ அல்லது அனைத்து இந்திய நுழைவு தேர்வின் மூலமாகவோ வேளாண் முதுநிலைப் பட்ட படிப்பினை படிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு மற்றும் விண‌ப்பிக்க www.annamalaiuniversity.ac.in என்ற இணையதள‌த்தினை அணுகவும்

நிகர் நிலைப் பல்கலைகழகங்கள் (Deemed University):

தமிழ் நாட்டில், வி ஐ டி (VIT) பல்கலைகழகம் (வேலுர்), பாரத் பல்கலைகழகம் (சென்னை), எஸ் ஆர் எம்.(SRM) பல்கலைகழகம் (காஞ்சிபுரம்), பிரிஸ்ட் பல்கலைகழகம் (தஞ்சாவூர்), கலசலிங்கம் பல்கலைகழகம் (மதுரை), ராமகிருஷ்ணா மிஷன் (கோவை), அமிர்தா விஷ்வ பீதம் (கோவை), காருண்யா (கோவை) மற்றும் காந்திகிராம் பல்கலைகழகம் (திண்டுக்கல்) ஆகிய நிகர் நிலை பல்கலைகழகங்களும் வேளாண் இளங்கலை பட்டப்படிப்புகளை அளிக்கப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) கீழும் அல்லது இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (ICAR – Indian Council of Agriculture Research) கீழும் ஆங்கீகாரம் பெறாதவை ஆகும். இதனால் வேளாண் முதுகலை படிப்பிறிக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலோ அல்லது அனைத்து இந்திய நுழைவு தேர்வின் மூலமாகவோ நுழைய தகுதி இல்லாமல் போகிறது. இதில் திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைகழகம் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகும். இந்த அனைத்து பல்கலைகழகங்களும், பின்வரும் காலங்களில் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (ICAR – Indian Council of Agriculture Research) ஆங்கீகாரம் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுரையாளர்: முனைவர்  செ. சேகர், பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: ilikeagriculture@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news